ஞாயிறு, 10 அக்டோபர், 2021

காவலைத் தாண்டிய கன்னி (ஆதி 16:2)

காவலைத் தாண்டிய கன்னி


சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். (ஆதி 16:2)

என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன் 4:12) என்றே வேதம் கூறுகின்றது.

ஏன் அடைக்கப்பட்டிருக்கிறோம்? என்ற காரணத்தை நாம் அநேக நேரங்களில் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றோம். நாம் அடைக்கப்பட்டிருப்பதற்கு இரண்டு காரியங்கள் காரணமாக இருக்கக்கூடும். ஒன்று, 'நம்முடைய குணம்' இரண்டாவது 'சத்துருவின் குணம்'. 

வேலி இரண்டு விதமான பணியினைச் செய்கின்றது; ஒன்று, நாம் வெளியேறிவிடாதபடி நம்மைக் காக்கின்றது; மற்றொன்று, எதிரி உள்ளே நுழைந்துவிடாதபடி எதிரியினிடமிருந்து நம்மைக் காக்கின்றது. இவ்விரு காவலும் அழைப்பின் பயணத்தில் நமக்கு அவசியமே. நம்முடைய வாசல்கள் திறந்திருக்குமென்றால், நிர்ப்பந்தத்தின் நிமித்தம் சில நேரங்களில் நாம் வெளியேறிவிடவோ அல்லது நம்மை உபத்திரவப்படுத்தும்படியாக சத்துரு உள்ளே வந்துவிடவோ வாய்ப்பு உண்டு. 

குழந்தைக்காக ஆகாரை கணவனோடு சேர்த்துவிடும் குணம் கொண்டிருந்த சாராள்; குழந்தைக்காக மற்றவரோடு சேர்ந்துவிடும்படி தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒருவேளை அவளது கர்ப்பம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கக்கூடும். நாமும், பொருளாசைக்கோ அல்லது உலக ஆசீர்வாதங்களுக்கோ மாத்திரமே வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கும் குணமுடையவர்களாகக் காணப்படுவோமென்றால், நாம் சாராயைப் போல தவறான முடிவுகளை எடுத்து, அவருடைய வாக்குத்தத்திற்கான பயணத்தை உடைத்துவிடக்கூடாது என்பதற்காக சில வாசல்களை யெகோவா நமக்காக அடைத்தே வைப்பார்.  

ஆபிராம் எகிப்துக்குச் சென்றபோது, உயிருக்குப் பயந்து சாராளை பார்வோனிடத்தில் அனுப்பிவிட்டான். அப்படியே, சாராளும் 'ஒரு உயிருக்காக' (பிள்ளைக்காக) ஆபிராமை ஆகாரினிடத்தில் அனுப்பிவிட்டாள். இதைப்போலவே, 'பிள்ளை வேண்டும்' 'பிள்ளை வேண்டும்' என்றே பேதலித்துக்கொண்டிருந்த சாராள், இன்னும் அது கிடைக்கவில்லையே என்ற வெறுப்பில் வேறொருவரிடம் பிள்ளையைப் பெற்றெடுத்துவிடக்கூடாதே; அது ஆபிரகாமின் சந்ததியாகாதே! எனவே இத்தகைய காவல் அவளது வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கக்கூடும்.

கட்டிய கணவனைக் காட்டிலும், கருவுக்கே முதலிடம் கொடுக்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிவிட்ட சாராள், ஆபிரகாமை ஆகாரினிடத்தில் தள்ளிவிட்டாள். இதனால், அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் (பிர 10:8) என்ற நிலையே சாராளுக்கு உண்டானது. தானும், கணவனாகிய ஆபிராமும் இருந்த குடும்பம் என்ற அடைப்பினைப் பிடுங்கி, அதற்குள் ஆகாரை நுழையவிட்டதால், சாராய் தன்னுடைய வாழ்க்கையில் வேதனையை வருவித்துக்கொண்டாள். 

மேலும், அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தத்தினைப் பெற்ற குடும்பத்தினை அலக்கழிப்பது என்பது சத்துரு செய்யும் விளையாட்டுகளில் ஒன்று. எனவே, சத்துருவுக்காகவும் நமது வாசல்கள் ஒருவேளை தற்காலிகமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கக்கூடும். 

இன்றும், ஆபிராம் சாராயை பார்வோனிடத்திற்கு அனுப்பியதைப் போலவும், சாராய் ஆகாரை ஆபிராமினிடத்தில் அனுப்பியதைப் போலவும், அழைக்கப்பட்ட குடும்பங்களை ஒருவரையொருவர் எதிர்திசைக்கு அதாவது அழைக்கப்படாத திசைக்கு நேராகப் பயணிக்கச் செய்கிறான் சத்துரு அல்லது வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்டு அவர்களை நெருக்குகின்றான். நம்மைப் பாதுகாப்பதற்காகவே, பேழையின் சாவி பிதாவினிடத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக