போர்முறை
பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி, தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். (ஆதி 33:2-3)
வீரனென்ற வார்த்தைகளோடு, பட்டயத்துடன் பெரியதோர் சேனையோடு, எதிரிக்கு எதிராகப் போர்புரிய போர்முனைக்கு முன்னேறிச் செல்வது மாத்திரமல்ல; போர்முறையில் வீரர்களின் வரிசையை எப்படி நாம் வடிவமைத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமானது; அது, நமத்து அகத்தின் முகத்தை வெளிப்படுத்தவும் போதுமானது. மனம் விரும்பும் மனிதர்களை, அவர்கள் போராடை அணிந்திருந்தாலும் போராடவிடாதபடி போர்முனையிலிருந்து தூரத்தில் நிறுத்தியும், போருக்கென்றே வைத்திருக்கும் மனிதர்களையோ அல்லது தாங்கள் இழக்க ஆயத்தமாயிருப்பவர்களையோ, பறிகொடுக்கத் தயங்காமல் எதிரியின் பக்கத்திலே நிறுத்தும் மனிதர்கள் அநேகர் உண்டு.
யாக்கோபின் வரிசை அப்படிப்பட்டதே. எதிர்கொண்டு வருவது சகோதரனா? அல்லது சத்துருவா? ஏசாவின் குணம் எப்படியிருக்கும்? என்பதை இன்னும் அறியாத நிலையில், நானூறு மனிதர்களோடு வந்துகொண்டிருந்த ஏசாவை சந்திக்கவிருந்த யாக்கோபு, முன்னாக நடந்துபோனாலும் (ஆதி. 33:3), 'பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தினான்' (ஆதி. 31:2). யாக்கோபின் இந்த வரிசை, 'பணிவிடைக்காரிகளைக் குறித்தும், லேயாளைக் குறித்தும், ராகேலைக் குறித்தும் அவனது மனதில் இருந்த வித்தியாசத்தையும், முக்கியத்துவத்தையும், முன்னுரிமையுமே வெளிக்காட்டுகின்றது'.
இன்றைய நாட்களிலும், அநேக மனிதர்கள் செய்வது இதுவே. எதிர்ப்பு மிகுந்த பகுதிகளிலும், கடினமான பணித்தளங்கள் மற்றும் பிரதேசங்களிலும், போராட்டங்கள் நிறைந்த இடங்களிலும் யாக்கோபைப் போலவே வரிசையினை மாற்றியமைத்துவிடுகின்றார்கள். பணிவிடைக்காரர்களை அதாவது பலிகொடுக்கக்கூடியவர்களை முதலிலும், மனைவிதான் என்றாலும், மனதளவில் யாக்கோபு விரும்பாத லேயாளைப் போல, உடன் இணைந்திருந்தும் உள்ளத்தால் இணையாதவர்களை இடையிலும். உள்ளம்போலிருப்பவர்களையோ கடைசியாகவும் நிறுத்திவிடுகின்றனர்.
எனினும், சபை என்றோ, ஸ்தாபனம் என்றோ, ஊழியம் என்றோ வரும்போது, இந்த வரிசையை மாற்றிக்கொள்ளுகின்றனரே! போர்முனையில் பின்வரிசையிலும், ஆலயத்திலோ, பதவியிலோ முன்வரிசையிலும் அமர்த்தப்படும் ஊழியர்களின் வாரிசுகள் இன்றைய நாட்களில் எத்தனை! எத்தனை!! யாக்கோபு ராகேலை முதலில் நிறுத்தினதைப் போல முதலில், தான் நேசிக்கும் தன்னுடைய மனைவி, குடும்பம்; மற்றும் பிள்ளைகளையும், இடையில் லேயாளை யாக்கோபு நிறுத்தினதைப் போல, தன்னுடைய உறவினர்களையும் அல்லது தனக்கு விருப்பமானவர்களையும், கடைசியில் பணிவிடைக்காரிகளை யாக்கோபு நிறுத்தினதைப் போல, உடன் பணிசெய்வோரையும் நிறுத்திவிடுகின்றனரே. முன்வரிசையில் யாராவது வந்து போராடட்டும் என்ற எண்ணத்தோடு, ராஜாவாயிருந்தபோதிலும் உயிருக்குப் பயந்து ஜனங்களோடு உட்கார்ந்துகொண்டான் சவுல் (1 சாமு. 17:11). ஆனால், போர்முனைக்கே அழைக்கப்படாமல் பின்வரிசையில் விடப்பட்டிருந்த தாவீதின் மூலமாக அல்லவோ வெற்றி கிடைத்தது.
மேலும், தாவீதின் வாழ்க்கையில் காணப்பட்ட தவறு, நம்முடைய வாழ்க்கையிலும் காணப்பட்டுவிடக்கூடாதே. தன்னுடைய பாவத்தை மறைக்க, 'மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று தாவீது எழுதிவிட்டானே. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான் (2சாமு 11:15,16). அம்மோனியரை ஜெயிக்கவேண்டும் என்ற மனநிலை மாறி, 'உரியா சாகவேண்டும்' என்று மனநிலையிலேயே போர் நடைபெற்றது; எத்தனை பரிதாபமான நிலை.
'உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான்' (2சாமு 11:24,25) என்ற செய்தி, தாவீதுக்கு சந்தோஷத்தையே தந்தது. போர்முறையில் தவறும் மனிதர்களுக்குள் இப்படிப்பட்ட சந்தோஷத்தை சத்துரு உருவாக்கிவிடக்கூடும். போர்முனைமாத்திரமல்ல, போர்முறையும் ஆண்டவரால் கண்காணிக்கப்படுகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக