வெள்ளி, 15 அக்டோபர், 2021

பாசமா? பாகமா? (ஆதி 35:28,29)

பாசமா? பாகமா?



ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற் றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,  பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரனாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதி 35:28,29)


நம்முடைய வாழ்க்கையில் குறிக்கப்பட்ட திட்டங்கள் மாத்திரமல்ல, நம்மைக் கொண்டு மற்றவர்களுடைய வாழ்க்கையில் குறிக்கப்பட்ட திட்டங்களும் நிறைவேறவேண்டும்.  நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறிவிட்ட காரியங்களை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடும் அதே நேரத்தில், நம்மைக் கொண்டு அடுத்தவருடைய வாழ்க்கையில் நிறைவேற்றப்படாமல், நிர்விசாரமாக நாம் விட்டுவிட்ட அநேக காரியங்களைக் குறித்து பரலோகம் பரிதபித்துவிடக்கூடாது. சுயத்தையே சுமந்துகொண்டிருக்கும் மனிதர்களின் மனம், பிறரைச் சுமப்பது கடினமே. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில்கூட, நாம் எட்டிப்பிடிக்கவேண்டிய காரியங்கள் அநேகம் இருக்கக்கூடும்; எனினும், கைநீட்டிப் பறிக்கும் தூரத்திலேயே அவைகள் இருந்தும், கண்ணுக்கு அவைகள் தெரியாததைப் போல, கரங்களை முடக்கிக்கொண்டு அமர்ந்துவிட்டால்,  கூடையில் சேரவேண்டியவைகளும், கூளமாகப்போய்விடக்கூடுமே. உலகம் வழியனுப்பும் நேரத்திலும், பரலோகத்pதற்காக நாம் சிலரை வாரிக்கொள்ள முடியும்.

ஈசாக்கினுடைய வாழ்க்கையில், நிறைவேற்றப்படவேண்டிய காரியங்கள் அநேகமிருந்தபோதிலும், வாழ்க்கை நிறைவுக்கு வந்துவிட்டதைப் போன்றே உணருகின்றான். ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி,  அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்கிறான். (ஆதி 27:1-4) 

சரீரத்தில் பெலவீனம் உண்டாகிவிட்டதும், மரணத்தை பார்க்கத் தொடங்விட்டான் ஈசாக்கு. வாழ்க்கையின் மறுபுறம் அவனது கண்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கையின் இறுதிநாட்களில், சரீரத்தின் சுவைக்கே முன்னுரிமை கொடுத்தான் ஈசாக்கு. விரும்பினதைச் சுவைக்க வாயும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஜீரணிக்கவும் வயிறும் வேட்கையாயிருந்தன; ஆனாலும், கண்கள் இருளடைந்துவிட்டதினால், உலகமே ஈசாக்கிற்கு இருண்டதாயிற்று. தூரத்திலிருக்கும் மரணத்தையும், அருகில் இருப்பதைப் போன்றே உணருகின்றான். அவனது உள்ளத்தின் உணர்வினையே அருகிலிருப்போரிடத்திலும் உதடுகளால் உச்சரிக்கின்றான். 

'மரணத்திற்கு முன் தனது விருப்பத்தை நிறைவேற்றவே ஆசையாயிருந்தான் ஈசாக்கு.' எனினும், கல்லறைக்கு முன் தன் கடைசி ஆசையை நிறைவேற்றுவதுபோலவே அவனது வார்த்தைகள் வெளிவருகின்றன. முதலாவது, 'சுவையான உணவே அவனது மரணத்திற்கு முன்னான இறுதி ஆசையாயிருந்தது.' இரண்டாவதாக, 'சுவையான உணவை யார் கொடுக்கிறாரோ அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற விருப்பம்தான் ஈசாக்கினிடத்தில் மேலோங்கியிருந்தது.' ருசியான உணவைக் கொடுத்ததினாலேயே அவன் ஏசாவை ஆசீர்வதிக்க நினைத்தான். உணவிற்காக் ஒருபுறமாகச் சாய்ந்திருந்தான் ஈசாக்கு. இறுதியிலோ, விருப்பத்திலேயே விழுந்துபோனான்.

சுவையானதைக் கொடுத்தால் ஆசீர்வாதம் என்ற ஈசாக்கின் சூத்திரப்படி, யாக்கோபை அவன் ஆசீர்வதித்தது ஒருபுறத்தில் சரியே; என்றாலும், ஏசாவுக்கு வாக்குக் கொடுத்ததினாலே, யாக்கோபு ஏமாற்றிவிட்டதாக நினைத்தான் (ஆதி. 27:35). எனவே, யாக்கோபையும் ஈசாக்கு மனதார நேசிக்கவேண்டியதிருந்தது. விருப்பமான வேட்டைக்கறியைக் கொடுத்துக்கொண்டிருந்த ஏசா, ஈசாக்கின் இறுதி நாட்களில் தகப்பனை விட்டு விலகி ஏதோமில் தூரமாகவே வாழ்ந்துகொண்டிருந்தான். தகப்பனாகிய ஈசாக்கு மரணத்தருவாயில் இருந்தபோது, ஏசா வந்து பார்த்திருந்திருக்கக்கூடும்; தகப்பனது மரணத்தின்போது ஏசா யாக்கோபோடு கூட இருந்தான் (ஆதி. 35:29); எனினும், தகப்பன் மீதான பாசத்தினால் அல்ல; தனக்குரிய பாகத்தை பெற்றுக்கொள்வதற்காகவே என்பதே வரலாறு. ஆனால், யாக்கோபோ பாசத்தைப் பெற்றுக்கொள்ள திரும்பி வந்தான். நாம் பிதாவிடம் வருவது எதற்காக? பாசத்திற்காகவா அல்லது பாகத்திற்காகவா? நம்முடைய மரணத்திற்கு முன் நாம் பிதாவினிடத்தில் தேடுவது 'அப்பா' என்ற பாசத்தையா? 'ஆசீர்வாதம்' என்ற பாகத்தையா? 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக