செவ்வாய், 12 அக்டோபர், 2021

சரியான முடிவு (ஆதி 26:3)

 சரியான முடிவு



இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். (ஆதி 26:3)

 

வாழ்க்கையை ஆசீர்வதிப்பது தேசம் அல்ல தேவனே. நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு என்றார் ஆண்டவர் (ஆதி. 26:2). அதைத் தொடர்ந்து, 'இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு' என்று குறிப்பிட்டும் சொல்லுகின்றார். ஈசாக்கு எகிப்துக்குச் செல்லவில்லை; என்றபோதிலும், ஆகாரம் கிடைக்கும் கேராரிலே குடியிருந்தான் (ஆதி. 26:6). ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி 26:12). வாழ்க்கையில் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ள ஒரு தேசத்தை விட்டு மறுதேசத்தை நோக்கி பயணப்படும் மக்கள் அநேகர்; என்றாலும், எந்த தேத்திற்குச் சென்றாலும், 'ஆசீர்வதிப்பவர் தேவனே.' ஆண்டவர் நம்மோடு கூட இருப்பாரென்றால், எந்த தேசத்திற்கு நாம் சென்றாலும், அவரது ஆசீர்வாதம் நம்மைத் தொடரும். இரண்டு பரிவாரங்களோடு வருவது முக்கியமல்ல, ஏசாவின் கைகளில் அவைகள் ஒரு பங்கு  சிக்கிக்கொள்ளக்கூடாதே; அவரது ஆசீர்வாதமே ஏசாவின் கைகளிலிருந்து பரிவாரங்களைப் பாதுகாக்க வல்லது. (ஆதி. 32:10,11,29)  

ஆகாரத்திற்காக ஈசாக்கு கேராருக்குச் சென்றான்; என்றாலும், ஆபத்து அங்கே காத்திருந்தது. எகிப்திலே ஆபிரகாமுக்கு என்ன நடந்ததோ, அதுவே கேராரிலே ஈசாக்கிற்கும் நடைபெற்றது. உயிரைப் பணையம் வைத்துதான் உணவைத் தேடவேண்டியதாயிருந்தது. அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான் (ஆதி 26:7). மனைவியை மறுதலிக்கும் நிலைக்கு ஈசாக்கு தள்ளப்பட்டுவிட்டானே. 

மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள் (மத் 9:15) என்று சீஷர்களுக்கும், தனக்கும் இடையிலான உறவை இயேசு எடுத்துக்கூறினாரே. நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள் (மத் 26:35). பேதுருவும் சீஷர்களும் உதடுகளில் மாத்திரமே தங்கள் உறுதியை பேதுரு வெளிப்படுத்தினார்கள். ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்று சொன்னபோது, அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான் (லூக் 22:56,57). அப்படியே, இயேசுகிறிஸ்துவி பாடுபட்டபோது,  சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள் (மத் 26:56). இன்றும் அநேகருடைய வாழ்க்கையில், மணவாளனின் மீதான உறுதி சில நேரங்களில் உதடுகளில் மாத்திரமே காணப்படுகின்றது. பாடுகளோ உபத்திரவங்களோ வரும்போது, மணவாளனை விட்டுவிட்டு ஓடிவிடுகின்றார்கள். நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் (அப் 21:13) என்பதுதானே மணவாளனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பவுலின் வார்த்தைகள். 

சீஷர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள் (யோவா 11:8). லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான் (யோவா 11:14-16). 'அவனிடத்திற்குப் போவோம்' என்றால் மரித்தால்தானே போகமுடியும் என்ற அர்த்தமுடன் அறியாமலேயே பேசுகிறான் திதிமு; என்றாலும் மறுபுறத்திலோ 'மணவாளனுடன் மரிக்கும்படி நாமும் போவோம்' என்பது சரியான முடிவே.  


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக