இருளும் ஒளியும்?
அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்களின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. (ஆதி 19:14)
'சத்தியத்தை நாம் அறிந்துகொள்வது மாத்திரமல்ல, சந்ததியை யார் வசத்தில் விட்டுச் செல்கிறோம்' என்பது ஒவ்வொருவருக்கும் முன் நிற்கும் பிரதானமான கேள்வி. 'லோத்து ஓர் நீதிமான்' என்றபோதிலும், மனந்திரும்பாத, ஆண்டவரை அறிந்திராத சோதோமின் மனுஷர்களை தனது குமாரத்திகளுக்குப் புருஷர்களாகத் தெரிந்துகொண்டான். லோத்துவின் இச்செயல், ஏற்கனவே அவன் தன் குமாரத்திகளை சோதோமின் மனுஷர்களிடத்தில் வீசிவிட்டான் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இன்றும், தங்களுடைய குமாரர்களை அல்லது குமாரத்திகளை தேவனுக்கு விரோதமான பாதையில் சென்றுகொண்டிருக்கும் மனிதர்களின் கைகளில் கொடுத்துவிடுவோர் உண்டு. 'என் நாட்களிலாவது சமாதானம் இருக்குமே' என்ற எண்ணத்தோடு மாத்திரமல்ல, சந்ததியையும் சமாதானம் தொடரவேண்டும் என்ற சிந்தையுடன் வாழாவிட்டால், சத்தியத்திலிருந்து சந்ததி சரிந்துபோய்விடும்; நீதிமானது சந்ததியின் தொடரோட்டம் சோதோமிலேயே முடிவுக்கு வந்துவிடும்.
லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்று சொன்னபோது, அவனுடைய மருமக்களின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது (ஆதி 19:14). லோத்துவின் வீட்டிற்கு தூதர்கள் வந்திருந்தபோது, அவர்கள் படுக்குமுன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் 'அனைவரும்' நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள் (ஆதி 19:4); அந்நேரத்தில், லோத்துவின் மருமக்கள் எங்கே போயிருந்தார்கள்? உதவிசெய்யும்படியாக லோத்துவின் விட்டிற்கே வரவில்லையே? இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் என்று லோத்து சொன்னதுகூட, 'மருமக்கள்மார்களின் காதுகளைச் சென்றடையவில்லையா?' ஒருவேளை அவர்களும் சூழ்ந்துகொண்ட கூட்டத்திற்குள்ளேயே இருந்தார்களோ? 'ஸ்திரீகளைக் காட்டிலும் புருஷர்களையே அறியும்படி ஆசைப்பபட்ட' (ஆதி. 19:8,9) மனிதர்களிடத்திலா லோத்து தன் குமாரத்திகளைக் கொடுக்கவிருந்தான்! 'நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்' என்று சொன்னபோது, பட்டணத்தை விட்டுவிட மனதில்லாத மனிதர்களோடு, சோமோமில் தன் குமாரத்திகளை அடைத்துவிட லோத்து மனதாயிருந்தானோ! ( 2கொரி 6:14-16)
சோதோமின் மனுஷர் வாசலைத் தேடித் தேடி அலுத்துப்போய்க்கொண்டிருக்கும் வேளையில், லோத்து புறப்பட்டுச் சென்று மருமக்கள்மாரோடே பேசியதும், தூதர்கள் லோத்துவின் குடும்பத்தை கைகளைப் பிடித்து வாசலுக்கு வெளியே அழைத்துச் சென்றதும் ஆச்சசரியமானதல்லவா! வாசலைப் பார்க்கக்கூடாதவர்களின் கண்கள், இவர்கள் வெளியேறிச் செல்வதையும் பார்க்கக்கூடாதவைகளாகவே காணப்பட்டவே.
தன்னுடைய குமாரனாகிய ஈசாக்கிற்கு பெண் தேடும்போது, ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான் ஆபிரகாம் (ஆதி 24:2-4). அழைக்கப்பட்டவனுடைய நிலை இதுவே; தன்னுடைய குமாரனை அங்கே அழைத்துக்கொண்டுபோகக்கூடாது; அவர்களே இங்கே வரவேண்டும் என்பது, ஆபிரகாமினுடைய ஆணையின் அடுத்த கட்டம். ஆனால், லோத்துவோ குமாரத்திகளையே விட்டுவிடவிருந்தானே! அழைக்கப்பட்டவனை விட்டு விலகினான் லோத்து; ஆனால், சந்ததியோ ஆண்டவரை விட்டே விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக