ஞாயிறு, 10 அக்டோபர், 2021

உள்ளே, வெளியே (ஆதி 18:8)

உள்ளே, வெளியே


ஆபிரகாம் வெண்ணையையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். (ஆதி 18:8)

 

ஆண்டவரும், தேவதூதர்கள் இருவரும் ஆபிரகாமைச் சந்தித்தபோது, சந்தித்த இடத்திலிருந்த மரத்தினடியிலேயே சாப்பிடும்வரை அவர்கள் சாய்ந்துகொண்டிருந்தார்கள்; ஆபிரகாமின் கூடாரத்திற்குள் அவர்கள் பிரவேசிக்கவில்லை. ஆகாரம் கூடாரத்தில் ஆயத்தப்படுத்தபட்டபோதிலும், சமைத்தவைகளோ கூடாரத்துக்கு வெளியிலேதான் பரிமாறப்பட்டன. அழைக்கப்பட்ட மனிதனுடைய உபசரிப்பை, எவ்விடத்திலும் ஆண்டவர் அங்கீகரித்துக்கொள்கிறார். ஆனால், தனக்கு தூரமாயிருப்பவர்களை நோக்கியோ, 'முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து' (மத் 5:24) என்கிறார். விருந்துக்கு முன் வீடு அவருடையதாகவேண்டும்.

லாபான், அந்நிய தெய்வங்களை வணங்கிக்கொண்டிருந்தவன் (ஆதி. 31:30-32).  லாபான் ஆபிரகாமின் வேலைக்காரனைச் சந்தித்தபோது, 'கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன்' என்று சொன்னான் (ஆதி. 24:31). உபசரிப்பினைத் தொடர்ந்து, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரிடத்தில் மகளை மணவாட்டியாகக் கொடுத்து அனுப்பினான் லாபான். 'கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' நம்முடைய வீட்டிற்குள் பிரவேசிப்பது, நம்மை 'இயேசு கிறிஸ்துவுக்கு மணவாட்டிகளாக மாற்றவே.' அவர்கள் உபசரிக்கப்படவேண்டியவர்கள் மாத்திரமல்ல, உங்களை மணவாட்டியாக இயேசுவினிடத்தில் அழைத்துச் செல்லும்படியாகவே அனுப்பப்பட்டவர்கள். நூற்றுக்கு அதிபதியின் வீட்டிற்கு இயேசு வருகிறேன் என்று சொன்னபோது, அவன் ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான் 

(மத் 8:5-8). நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தினால் வேலைக்காரனுக்கு சுகம் உண்டாகிவிட்டபோதிலும், அவனது வீடு இயேசு பிரவேசிக்கும் அளவிற்கு சுத்தமாகவேண்டும் என்ற செய்தி இந்நிகழ்வில் மறைமுகமாகச் சொல்லப்படுகின்றதே. கானானிய ஸ்திரீ இயேசுவை பின்தொடர்ந்து வந்து, 'ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்' என்று சொல்லிக் கூப்பிட்டபோது  அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார் (மத் 15:22,26). ஆனால், எரிகோவுக்குச் சமீபமாய் இயேசு வந்தபோது, வழியிலே பிச்சைகேட்டுக்கொண்டிருந்த குருடன் ஒருவன், 'இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்' என்று கூப்பிட்டபோது (லூக் 18:37), உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றாரே; அது அவனது சரீர மற்றும் ஆத்தும சுகத்தையும் உள்ளடக்கியது.

அவ்வாறே, இயேசு சகேயுவை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். இயேசு சகேயுவின் வீட்டிற்குச் சென்றபோது, 'அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.' சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே (லூக் 19:5-9) என்றார். நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்பதுதானே தன்னைக் குறித்த இயேசுவின் அறிமுகமாயிருந்தது. (லூக் 5:32). 

பாவிகளின் உபசரிப்பை ஏற்கும் முன், அவர்களது வீட்டில் அவர் பிரவேசிக்க விரும்புகிறார். இதனை அறியாத அநேகர் இன்னும் பாவமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வெளியிலேயே அவரை உபசரித்துக்கொண்டிருக்கிறார்கள்; தங்களுடைய இருதயத்தை ஆண்டவருக்குக் கொடுக்காமல், தங்களிடம் இருப்பதை ஆண்டவருக்குக் கொடுத்துக்கொண்டிருப்பது அவரை ஒருபோதும் திருப்திப்படுத்தாது. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக