துஷ்டன் மீதிருந்த இஷ்டம்
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரனாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதி 25:7-9)
ஆண்டவருக்கு விரோதமானவைகள், நமக்குப் பிரியமாயிருக்கக்கூடாது. எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேல் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு, ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது (ஆதி 21:9-11). இஸ்மவேலை அனுப்பிவிட மனதில்லாதிருந்தபோதிலும், சாராளின் கட்டாயத்தின் பேரிலும், 'சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்' (ஆதி 21:12) என்ற ஆண்டவரது கட்டளையின்படியும் இஸ்மவேலையும் அவனது தாயாகிய ஆகாரையும் தனது வீட்டிலிருந்து அனுப்பிவிட்டான் ஆபிரகாம். என்றாலும், சாராள் உயிரோடு இருக்கும்வரை இஸ்மவேலோடுகூட எந்த தொடர்பையும் ஒருவேளை ஆபிரகாமினால் உருவாக்கியிருந்திருக்கக் கூடாதிருந்திருக்கும். எனினும், சாராளின் மரணத்திற்குப் பின்னர், இஸ்மவேலின் மீது தனக்கு இருந்த ஆசையினால் ஆபிரகாம் ஒருவேளை அவனைத் தேடியிருந்திருக்கக்கூடும், அல்லது இஸ்மவேல் வந்திருக்கக்கூடும்.
ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான் (ஆதி 16:16); அப்படியே, குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான். (ஆதி 21:5). ஈசாக்கை விட இஸ்மவேல் பதினான்கு வயது மூத்தவன். ஈசாக்கிற்கு முன்பாகவே இஸ்மவேலுக்கு திருமணம் நடந்திருக்கக்கூடும், குமாரர்கள் குமாரத்திகள் அவனுக்குப் பிறந்திருக்கக்கூடும். என்றாலும், சாராள் உயிரோடிருக்கும் நாள் வரைக்கும் ஈசாக்கிற்கும் இஸ்மவேலுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருந்ததாக எழுதப்படவில்லை. எனினும், சாராளின் மரணத்திற்குப் பின், இஸ்மவேலையும் ஈசாக்கையும் சேர்த்துவைத்துவிடவேண்டும் என்று ஒருவேளை ஆபிரகாம் நினைத்திருந்திருக்கலாம். அல்லது, ஆபிரகாம் தன் மரணவேளையின்போது, இஸ்மவேலைப் பார்க்கவேண்டும் என்று விரும்பியிருக்கக்கூடும். அந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்மவேல் ஒருவேளை அழைத்துவரப்பட்டிருக்கலாம்.
மரணத்திற்கு முன்னமே தன்னுடைய வீட்டின் காரியங்களை ஒழுங்குபடுத்துவதில் ஆபிரகாம் கவனமாயிருந்தான். சாராளின் மரணத்தின்போது இஸ்மவேல் அங்கு வரவில்லை. இஸ்மவேலும் ஈசாக்கும் இணைந்து நிற்பதை சாராள் பார்க்கவில்லை. எனினும் ஆபிரகாம் மரித்தபோதோ, குமாரர்களாகிய இஸ்மவேலும், ஈசாக்கும் இணைந்து ஆபிரகாமை அடக்கம்பண்ணினார்கள். ஒருவேளை ஆபிரகாமின் மரணத்தை ஈசாக்கு இஸ்மவேலுக்கு அறிவித்திருந்திருக்கக்கூடும். அப்படி அறிவித்திருந்திருப்பானென்றால், இஸ்மவேல் வசிக்கும் இடமும் ஈசாக்கிற்குத் தெரிந்திருந்திருக்குமே, அத்துடன் இஸ்மவேலுடன் ஈசாக்கு தொடர்பு வைத்திருந்திருக்கக்கூடுமே. ஆபிரகாமை சாராளின் கல்லறையில் அடக்கம்பண்ணுவதற்கு ஒத்துப்போன இஸ்மவேல், தனது தாயாகிய ஆகாரும் ஆபிரகாமின் மனைவியே, எனவே ஆகாரும் அந்தக் கல்லறையிலேதான் அடக்கம்பண்ணப்படவேண்டும் என்று எதிர்த்துநிற்கவில்லை. தாயாகிய சாராளினால் துரத்தப்பட்டவன்தான் இஸ்மவேல்; என்றாலும் ஈசாக்கின் மனதிலோ இஸ்மவேலுக்கு ஈரமிருந்தது. தகப்பனாகிய ஆபிரகாமின் மனமும் இஸ்மவேலை மறவாமலேயே இருந்தது. யூகத்தின் அடிப்படையிலேயே இத்தனை காரியங்களை நாம் சிந்தித்தாலும், ஆபிரகாமின் மரணமும், அவனது அடக்கமும் கற்றுக்கொடுக்கும் ஆவிக்குரிய பாடம் என்ன? இஸ்மவேல் இஷ்டமான குமாரன் என்றாலும், துஷ்டன் என்று அறிமுகப்படுத்தி தூரத்தில் வைக்கப்பட்டன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக