புதன், 13 அக்டோபர், 2021

துக்கத்திலிருந்து துதிக்கு (ஆதி 29:35)

துக்கத்திலிருந்து துதிக்கு



மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று. (ஆதி 29:35)


இரட்டை வேஷமுடைய மக்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு இன்னலும், இடறலுமானது. மாம்சத்தின்படி பிறரோடு மகிழ்ச்சியாயிருந்தாலும், மனதளவிலோ பிறரோடு அவர்கள் போரிட்டுக்கொண்டுதானிருப்பார்கள். வெளிப்புறத்தில் வெள்ளியைப்போல மினுங்கினாலும், இவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே. இத்தகையோரின் வேஷத்தில் ஏமாந்து, வேதனையை வாழ்க்கையில் அனுபவிப்பவர்கள் ஏராளம்.  

மாம்சத்தின்படி மனைவியாகிய லேயாளினிடத்தில் யாக்கோபு வரிசையாக பிள்ளைகளைப் பெற்றெடுத்துக்கொண்டேயிருந்தாலும், பாசத்திலும், இருதயத்திலும் அவன் அவளை தனக்குத் தூரமாகவே வைத்திருந்தான்.  லாபான் இரவிலே தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், யாக்கோபினிடத்தில் விட்டபோது, அவளை அவன் சேர்ந்தான் (ஆதி. 29:23). லேயாளுடைய கண்கள் கூச்சப் பார்வையுடையதாயிருந்தது உண்மைதான்; என்றபோதிலும், யாக்கோபின் கண்களையோ இரவு பார்க்கக்கூடாததாக்கியிருந்தது என்பதும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது. இருளிலே யாக்கோபு லேயாளைச் சேர்ந்தான்; ஆனால், பகலிலோ லேயாளை வெறுத்தான். அற்பமாய் எண்ணினாலும், அன்றோடு உறவை முறித்துக்கொள்ளவில்லை,  பல இரவுகள் அவளோடு இணைந்திருந்தான்; இந்த நிகழ்வு அவனது வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டேயிருந்தது. ஆசை எழும்போது அனுபவித்துவிட்டு, 'அற்பமானவள்' என்ற ஓசை இதயத்தில் ஒலிக்கும்போது ஒதுக்கிவைத்துவிடுவான். ராகேலினிடத்தில் யாக்கோபு பாசத்தோடிருந்தான்; அதே வேளையில் லேயாளினிடத்திலோ இரட்டை வேஷத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தான். 

இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட கணவர்கள் உண்டு. நினைத்தால் ஒட்டிக்கொள்வதும், நினைவு வெறுத்தால் வெட்டிவிடுவதுமே அவர்களது வாழ்க்கையாயிருக்கும். இரவின்போது காட்டும் பாசத்தை இல்லற வாழ்க்கையின்டபோது இத்தகையோரால் காட்ட இயலுவதில்லை. தேவைக்கென்று மாத்திரம் மனைவியின் தேகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மீதியான நேரங்களிலோ மனைவியின் மீது மனதில் கோபத்தைச் சுமந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள். தன்னுடைய சந்தோஷத்தை மாத்திரமே கருத்தில் கொண்டு, மனைவியையோ மனமகிழ்ச்சியாக நடத்த அறியாதவர்கள். இப்படிப்பட்டவர்கள், யாக்கோபைப் போல கண்களிருந்தும் பார்வையற்றிருப்பவர்களே; இவர்கள் இரட்டை வேஷமுடையவர்கள். ஆசீர்வாதத்திற்காக ஆண்டவரண்டை வந்துவிட்டு, கிடைத்ததும் அவரை வெறுத்துவிடும் மக்களும் யாக்கோபின் வரிசையில் நிறுத்தப்படவேண்டியவர்களே.

பாசத்திற்காக கணவனைப் பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்ட லேயாளை தன்னைத் துதிக்கும் நிலைக்கு உயர்த்தினார் கர்த்தர். என்றாவது, எப்படியாவது கணவன் என்னை நேசித்துவிடமாட்டாரா என்ற நினைவே லேயாளின் வாழ்க்கையை நிறைத்திருந்தது. எனவே, லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றபோது, 'கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார்' என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: 'நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார்' என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள். பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் 'அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார்' என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள். மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: 'இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்' என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று. (ஆதி 29:32-35)

'கர்த்தர் பார்த்தருளி' 'கர்த்தர் கேட்டருளி, 'கர்த்தரைத் துதிப்பேன்' என்ற பதங்கள், லேயாளுக்கும் கர்த்தருக்கும் இருந்த உறவையல்லவோ வெளிப்படுத்துகின்றன. அற்பமாய் எண்ணப்பட்ட 'லேயாள் ஆண்டவரோடிருந்தாள்'; ஆனால், ஆசைப்பட்ட ராகேலோ ஆகாத வீக்கிரகத்தை தன் வீட்டிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தாள். கணவன் என்னோடு சேர்ந்திருப்பார் என்று எண்ணின லேயாள் 'கர்த்தரைத் துதிக்கும்' நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டாள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக