செவ்வாய், 12 அக்டோபர், 2021

பின்னோக்கிய பயணம் (ஆதி. 28:10)

பின்னோக்கிய பயணம்




யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, (ஆதி. 28:10)  


அழைப்பின் திசையிலிருந்தும், பயணத்தின் பாதையிலிருந்தும் அர்ப்பணித்தோரை பின்னிட்டுத் திருப்புவதும், பாதிவழியிலேயே போதுமென்று அவர்களை நிறுத்திக்கொள்ளச் செய்வதுமே சத்துருவின் நோக்கம். தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள் (ஆதி 11:31). கல்தேயருடைய பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள்; ஆனால், ஆரானிலேயோ பயணத்தை நிறுத்திவிட்டார்கள். அதுவரை தலைவனாக பயணத்தை முன்னின்று நடத்திய தேராகுகூட, ஆரான் வரை வந்ததும் அங்கேயே இருந்துவிட்டான். போகவேண்டிய தேசத்தை விட்டுவிட்ட தேராகு, போதும் என்று வாழ்ந்த இடத்திலேயே புதைக்கப்பட்டான். அழைத்துக்கொண்டுவந்த தேராகு அடக்கம்பண்ணப்படும்வரை கானானுக்குப் பயணமாகவேண்டியவர்கள், ஆரானிலேயே இருந்துவிட்டார்கள். ஆரானிலிருந்து ஆபிராமை மீண்டும் புறப்படச் செய்தார் ஆண்டவர். (ஆதி. 12:2) 

அவ்வாறே, ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள் (எண் 32:1). அந்த இடத்தை விட்டுச் செல்லுவதற்கு அவர்களுக்கு மனதில்லாதிருந்தது. உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்க வேண்டும் என்றார்கள் (எண் 32:5). அதினால், அந்நாளிலே கர்த்தருடைய கோபம் மூண்டது. (எண். 32:10)  

கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்று சொன்னார். அப்படியே, ஆபிரகாம் ஆரானை விட்டுப் புறப்பட்டான். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான்; ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். (ஆதி 12:4). ஆனால் யாக்கோபோ, தகப்பனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின், ஆரானை நோக்கிப் புறப்பட்டான். இது ஓர் பின்னோக்கிய பயணமே. இளையகுமாரன் ஆஸ்தியில் பாதியை பெற்றுக்கொண்டபின் தகப்பனை விட்டுத் தூரமாகச் சென்றதுபோலவே, யாக்கோபும் உலகத் தகப்பனை விட்டும், உன்னதத் தகப்பனின் பாதையை விட்டும் பின்னோக்கிச் செல்கிறான். சிலருடைய பயணம் இழப்பிற்குப் பின் தொடங்குகின்றது; சிலருடைய பயணமோ ஆசீர்வாத்திற்குப் பி;ன்னும் பின்னிட்டுப் போகின்றது. 

அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் எல்லோரும் கானானுக்குள் பிரவேசித்துவிடவில்லையே. அவர்களுடைய சரீரம் கானானை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது; ஆனால், அவர்களுடைய இருதயமோ எகிப்துக்கு நேராக அவ்வப்போது திரும்பிக்கொண்டிருந்தது. நம்முடைய அழைப்பின் பயணத்திலும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. பாவத்திலிருந்து நாம் விடுதலையாக்கப்பட்டிருக்கலாம், அழைப்பின் திசையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கலாம்; என்றாலும், இப்போது நாம் எங்கே நிற்கிறோம்? என்பதே பிரதானமானது. ஆவிக்குரிய பயணத்தில் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோமா? அல்லது ஓட்டத்தை நிறுத்திவிட்டோமா? ஆதியில் கொண்டிருந்த தரிசனங்கள், அழைக்கப்பட்ட நாட்களில் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் திசையினை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றோமா? அல்லது அவ்வப்போது திரும்பிப் பார்த்து, திசையறியாதவர்களைப்போல திரிந்துகொண்டிருக்கின்றோமா? 

இரட்சிக்கப்பட்டதும் ஆண்டவருக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்து, அவருடைய சித்தம் வாழ்க்கையில் நிறைவேறவேண்டும் என்று வாழ்ந்தவர்கள், நாட்கள் செல்லச் செல்ல நடுவழியிலேயே நின்றுவிடுகிறார்கள். இதுவரை பயணித்தது போதும் என்ற எண்ணம் இறப்பு வரை அவர்களை அங்கேயே நிறுத்திவிடுகின்றது. தேராகு ஆரானிலே அடக்கம்பண்ணப்பட்டதுபோல அடக்கம்பண்ணப்பட்டவர்கள் அநேகர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக