ஞாயிறு, 10 அக்டோபர், 2021

உஷ்ணவேளை (ஆதி 18:1)

 உஷ்ணவேளை


பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலிலே உஷ;ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, (ஆதி 18:1)


மூன்று விதமான கோணங்களில் இந்நிகழ்வை இன்னும் நாம் சிந்திக்க இயலும். முதலாவது, வீட்டிலே உஷ்ணம் தாங்க இயலாமல் வீட்டு வாசலில் காற்று வாங்கிக்கொண்டிருந்த ஆபிரகாம்; இரண்டாவது, பகலின் உஷ்ணமான வேளையிலும் ஆபிரகாமின் வீட்டு வாசலுக்கும் வெளியே நின்றுகொண்டிருந்த ஆண்டவர்; மூன்றாவதாக, பகலின் உஷ்ணத்தைக் காட்டிலும் பலமடங்கு அதிகமான உஷ்ணத்தினால் அழிவைச் சந்திக்கவிருக்கும் அக்கிரமச் சந்ததியாரான சோதோமின் ஜனக்கூட்டம். 

முதலாவதாக, மம்ரேயின் சமபூமியில் கூடாரத்தினுள் தங்கியிருந்த ஆபிரகாமை உஷ;ணம் கூடாரவாசலுக்குக் கூப்பிட்டுக்கொண்டுவந்தது. வாசலில் கிடைத்த காற்றிலே பகலின் உஷ்ணத்தை ஆற்றிக்கொண்டிருந்தான் ஆபிரகாம். இத்தகைய உஷ்ணமான வேளையின்போது, தான் விட்டு வந்த சொந்த தேசத்தையும், ஜனத்தையும், அங்கிருந்த சுகமான சூழ்நிலைகளையும் ஒருவேளை ஆபிரகாம் நினைத்திருக்கக்கூடும்.  'பரதேசியான' வாழ்கை ஒருபுறம், 'பகலின் உஷ;ணம்' மற்றொருபுறம் என அழைக்கப்பட்ட இடம், சுகத்தை அனுபவிக்கத் தகுந்த இடமாக ஒருவேளை ஆபிரகாமுக்குக் காணப்படாதிருந்திருக்கக்கூடும். என்றாலும், அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கேயே தங்கினதினாலேயே, ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பனானான். 

இன்றைய நாட்களில், சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சுவிசேஷம் அறிவிக்கும் பணியை விட்டுவிட்ட அழைக்கப்பட்டோரின் பட்டியல் உண்டே. அழைக்கப்பட்ட இடத்திற்கு வந்த மனிதர்களிடத்தில், 'இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே' (லூக். 16:24) என்ற பாதாளத்தின் சத்தம் கேட்கப்படக்கூடாது. இவ்வுலக அக்கினியிலிருந்து நாம் தப்புவதற்கு அல்ல, நித்திய அக்கினிக்கு நேராக நின்றுகொண்டிருப்பவர்களைத் வென்றுவரும்படியாகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நமது அஸ்திபாரமாகட்டும். நம்முடைய வாழ்க்கையிலும், வீட்டிலே ஏற்படுகிற சில உஷ;ணமான சூழ்நிலைகள், நம்மை நமது வீட்டு வாசல் வரைக்கும் கொண்டுவந்துவிடக்கூடும்; என்றாலும், அக்கினியால் அழிக்கப்படவிருக்கும் பட்டணங்களைப் பார்க்கக்கூடாதபடிக்கு வாசலிலேயே பலரது பார்வைகள் பறிபோய்விடுகின்றது.  பரிதபிக்கப்படவேண்டியோர் காணப்படுகின்றபோதிலும், தாங்கள் பாதுகாக்கப்படுகின்றதையே விரும்பிக்கொண்டிருக்கின்றனர் பலர்.

இரண்டாவதாக, 'பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தராக' (ஆதி 3:8) ஆதாம் மற்றும் ஏவாளிள் நாட்களில் ஏதேன் தோட்டத்தில் ஆண்டவர் காணப்பட்டபோதிலும், அழிக்கப்படவிருக்கும் சோதோமின் சந்ததியாரின் நாட்களிலோ, பகலில் உஷ்ணமான வேளையில் ஆண்டவர் உலா வருகின்றார்; ஆபிரகாமினால் தாங்கக்கூடாத உஷ்ணமான வேளையின்போது, ஆண்டவரோ, வாசலுக்கு வெளியே வீதியிலே நிற்கிறார் (ஆதி. 18:2). 'நான்தான் ஆபிரகாமை இங்கே அனுப்பினேன்' என நினைத்து, ஆபிரகாமின் வீட்டிற்குள் அனுமதியின்றி ஆண்டவர் நுழைந்துவிடவில்லை; தன்னை அவன் அடையாளம் கண்டுகொண்டு அழைக்கும் வரை வீதியிலேயே நிற்கிறார். சோதோமை அழிக்கும் முன் அவரும் பகலின் உஷ்ணம் தன்மேல் பட அனுமதித்தாரே.  

மூன்றாவதாக, பகலின் உஷ்ணத்தைக் காட்டிலும், பலமடங்கு உஷ்ணத்தினால் அழிக்கப்படவிருக்கும் பட்டணங்கள் மீதான பாரம் நமக்குத் தூரமாகிவிடக்கூடாது. சுவிசேஷப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் நாம், சுகம் என்னும் வீட்டிற்குள் அடங்கிவிடாதபடியும், வீட்டின் உஷ்ணத்தையே வீதியில் நிற்கும் தேவனிடத்தில் சொல்லிச் சொல்லி, நரக அக்கினியில் வீசப்படவிருக்கும் மக்களைக் குறித்ததான கரிசனையினை விட்டு அகன்றுபோகாதபடிக்கும் கவனமாயிருப்போம். நாம் ஆண்டவரை உபசரிப்பதுடன், ஆண்டவரை உபசரிக்கும் ஜனங்களையும் உருவாக்கவேண்டும்; அதுவே நமது அழைப்பு. வீட்டிலே ஆண்டவருக்கு விருந்துகொடுத்துவிட்டு, வெளியின் அழிவைக் குறித்து நாம் கவலையற்றிருக்கக்கூடாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக