செவ்வாய், 12 அக்டோபர், 2021

வெறுப்பல்ல வரவேற்பு (ஆதி 28:1,2)

வெறுப்பல்ல வரவேற்பு




ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். (ஆதி 28:1,2) 


கொடுக்கும் பிதா, அன்பில் ஒருபோதும் குறைந்துபோவதில்லை. ஏசாவுக்குக் கொடுக்கப்படவிருந்த ஆசீர்வாதத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டவன் யாக்கோபு. யாக்கோபு ஈசாக்கினிடத்தில் வந்தபோது, ஈசாக்கினால் யாக்கோபை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை; என்றாலும், பின்னதாக ஏசா ஆசீர்வாதத்திற்காக வந்து நின்றபோது ஏமாற்றினவன் யாக்கோபு என்பது உறுதியானது. என்றபோதிலும், யாக்கோபை தான் ஆசீர்வதித்ததைத் திரும்பப் பெற்றுக்கொள்ள ஈசாக்கு ஆயத்தமாயில்லை. தவறாக ஆசீர்வதித்துவிட்டேனே என்று ஒருவேளை பிரமித்து நடுங்கினபோதிலும், 'நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்' (ஆதி. 27:33) என்றே கூறுகின்றான் ஈசாக்கு. சகோதரனாகிய யாக்கோபின் மீது ஏசாவுக்கு கோபம் ஏறிக்கொண்டேபோனபோதிலும், ஆசீர்வதித்துவிட்டேன், என்ற நிலையிலிருந்து ஈசாக்கு மாறவில்லை. 

ஏசாவினிடத்திலிருந்து தப்புவிக்கும்படியாக, ரெபெக்காள் யாக்கோபை தனது சகோதரனாகிய லாபானின் வீட்டிற்கு அனுப்பினபோதும் (ஆதி. 27:43), ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தே அனுப்புகின்றான். மீண்டும் ஈசாக்கு யாக்கோபை அழைத்தபோது, ஒருவேளை யாக்கோபு பயந்து நடுங்கியிருந்திருக்கக்கூடும். ஏமாற்றி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதினால், தகப்பன் என்னை சபித்துவிடுவாரோ என்று நினைத்திருக்கக்கூடும். 'என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்' (ஆதி. 27:8) என்று ரெபெக்காள் சொன்னபோது, யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன். ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்ளுவேனே' (ஆதி. 27:11,12) என்று சொன்னானே; அப்படியென்றால், மறுமுறை தகப்பனண்டை செல்லும்போது யாக்கோபின் மனம் அடிக்கத்தானேசெய்திருக்கும். என்றாலும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின் யாக்கோபை தகப்பனாகிய ஈசாக்கு பழிவாங்க விரும்பவில்லை. இன்றைய நாட்களிலும், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின், தகப்பனைவிட்டுத் தூரமாகச் சென்றுவிடும் மக்கள் அநேகர். எனினும், பிதா உடனில்லையென்றால், பெற்ற ஆசீர்வாதத்தைப் பறிகொடுப்பது நிச்சயம். தகப்பனிடமிருந்துதான் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டதே என்று நினைத்திருந்தால், 'நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்' (ஆதி 32:26) என்று ஆண்டவரிடத்தில் யாக்கோபு கேட்டது ஏன்? அவரே ஆசீர்வதிப்பவர் என்பதை உணர்ந்ததினால்தானே; இல்லையென்றால், ஒருபகுதி ஏசாவினால் ஒருவேளை பறிக்கப்பட்டிருக்கக்கூடும். சகோதரன் ஏற்றுக்கொண்டதே யாக்கோபுக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம். (ஆதி. 33:9,10) 

இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்று தகப்பனை வற்புறுத்திக் கேட்டபோது, தகப்பன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். ஆனால், சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான் (லூக் 15:12,13). எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டாகி அவன் குறைவுபடத்தொடங்கினபோதிலும் தகப்பனண்டை உடனே வருவதற்கு அவனுக்கு மனதில்லாமல், வேறொரு மனிதனிடத்திலேயே ஒட்டிக்கொண்டான்; அவனோ, இளையகுமாரனின் மதிப்பை அறியாததினால், பன்றிகளைக் காப்பாற்ற இளையகுமாரனை பன்றிகளுக்குள் அனுப்பிவிட்டான் (லூக். 15:15); ஆனால் இயேசு கிறிஸ்துவோ, மனிதனைக் காப்பாற்றும்படியாக, பிசாசை பன்றிகளுக்குள் அனுப்பினார் (மாற். 5:13). தகப்பனிடமே திரும்பிவருவதுதான் சரியானது என்பதை உணர்ந்தவனாக இளையகுமாரன் மீண்டும் வந்தபோது, வெறுக்கப்படுவேனோ என்று பயந்த அவன் வரவேற்கப்பட்டானே (லூக். 15:21-24).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக