திங்கள், 11 அக்டோபர், 2021

சமாதானமும், சவாலும் (ஆதி 24:60)

 சமாதானமும், சவாலும்



ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். (ஆதி 24:60)


ஆபிரகாமுக்கு ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின் மறுபக்கத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆத்தும அறுவடைக்கு நேராக நம்மை வழிநடத்தும். ஆசீர்வாதங்களை அனுபவித்துக்கொண்டு, அதனையே சுகம் என்று எண்ணினவர்களாக சுவற்றிற்குள்ளேயே தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டவர்கள் ஆத்தும அறுவடையினை நோக்கி முன்னேறுவது என்பது முடியாததே. 'சுகம் என்ற அடைப்பினை உடைத்து, சுதந்தரிக்கவேண்டும் என்ற தரிசனத்திற்கு நேராக அத்தகையோரின் கால்கள் பயணிப்பதில்லை.' விளைவு, விளைச்சல் ஏராளமாயிருந்தும், வேலையாட்களை இல்லாத நிலையே தேவனுடைய ராஜ்யத்திற்கு உருவாகிவிடும். 

நாம் வாழுகின்ற காலத்தில் மாத்திரம் நம்மை பெலமுள்ளவர்களாகவும், பயனுள்ள தேவனுடைய பாத்திரங்களாகவும், அறுவடைக்களங்களில் அலைந்து திரிகிறவர்களாகவும், கர்த்தரின் களஞ்சியத்தை நிரப்புகிறவர்களாகவும் நாம் காணப்பட்டுவிட்டால் போதாது. பாபிலோன் தேசத்திலிருந்து வந்த மனிதர்களிடத்தில், தன்னுடைய வீட்டின் எல்லாவற்றையும் எசேக்கியா ராஜா காண்பித்தபோது, ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவை நோக்கி: நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான் (2இரா 20:18,19). இத்தகைய மனநிலை நம்மிடத்தில் காணப்படக்கூடாது. 

நாம் செய்கின்ற பணியினை நமது சந்ததி தொடராவிடில், சடுதியாய் அதனை முடித்துவைத்துவிட சத்துரு துடியாய் துடித்துக்கொண்டிருப்பான். தன்னை மாத்திரமே முன்னிறுத்தி, தன்னுடைய சந்ததியைக் குறித்து கவலையற்றவர்களாகவும், ஆவிக்குரிய சந்ததியான சக ஊழியர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டவர்களாகவும், தன்னை மாத்திரமே பெலவானாகக் காட்டிக்கொண்டிருக்கும் மனிதர்களின் மரணத்தில், அவர்களது ஊழியத்தின் ஓட்டமே முடிவுக்கு வந்துவிடக்கூடும்.  என்றாலும், விட்டுவிடப்பட்ட தரிசனம் என்ற கோட்டினை வேறொருவரைக் கொண்டு நிச்சயம் ஆண்டவர் வரைந்து முடிப்பார். 

நாம் மாத்திரம் சத்துருவை ஜெயித்துவிட்டால் போதாது, நமது சந்ததியும் சத்துருவை ஜெயித்தால் மாத்திரமே, 'கோடாகோடியாய்' என்ற ஆசீர்வாதத்தின் வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும். சத்துருவின் வாசல்களைச் சுதந்தரிப்பது, சந்ததியாருக்கு இருக்கும் சவாலான ஓர் ஆசீர்வாதமே. நம்முடையதை பாதுகாத்துக்கொள்ளும்படியாக கற்றுக்கொடுப்பது எளிது, ஆனால் சத்துருக்களின் ஆக்கிரமிப்பில் உள்ளவைகளை சுதந்தரிப்பது என்றால் தேவ ஒத்தாசையின்றி அது சாத்தியமாகாது என்பதை சந்ததி கற்றுக்கொள்ளவேண்டுமே; போரிடாமல் சத்துரு போகவிடமாட்டான். எகிப்தின் வாசலுக்குள் அடிமைகளாக மாட்டிக்கொண்ட இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படியாக மோசேயை ஆண்டவர் அனுப்பியிருந்தபோது, வார்த்தைகளுக்கு பார்வோன் செவிகொடுக்கவில்லையே, வாதையினால் ஆண்டவர் பார்வோனோடு போரிடவேண்டியதாயிருந்ததே.   

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங். 127:3-5) என்று சாலொமோன் தனது சங்கீதத்தில் பாடுகின்றானே. நம்முடைய பிள்ளைகள் வாலவயதாகும்போது, சத்துருக்களோடு போராடத்தக்க வீரர்களாகவேண்டும், அப்பொழுதுதான் பகைஞருடைய வாசல்களில் இருப்போரைச் சுதந்தரித்து, பரலோகத்தின் வாரிசுகளாக அவர்களை மாற்றும் பணி தொடரும். சத்துருவின் வாசல்களை சுதந்தரிக்கும் சந்ததிகளையே நாம் உருவாக்கவேண்டும்; மாறாக, சத்துரு நம்முடைய சந்ததியின் வாசல்களைச் சுதந்தரித்துவிடக்கூடாது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக