திங்கள், 11 அக்டோபர், 2021

சத்துருவும் சந்ததியும் (ஆதி 19:36)

 சத்துருவும் சந்ததியும்


அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். (ஆதி 19:26)

இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். (ஆதி 19:36)

 

நமது உதடுகளால் உதிர்த்துவிடும் வார்த்தைகளைக் கூட, சத்துரு உன்னிப்பாகக் கவனித்து, நம்மைப் பின்தொடர்ந்து தனது விருப்பத்தைச் சாதித்துவிடக்கூடும். சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா  (ஆதி 19:4,5) என்று சொன்னபோது, லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய், சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.  இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ;டப்படி செய்யுங்கள். இந்தப் புருஷர் என் கூரையின் நிழலில் வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான் (ஆதி 19:6-8). லோத்து நீதிமானாயிருந்தபோதிலும், தன்னுடைய குமாரத்திகளை சோதோமின் மனிதர்களுக்கு மணமுடித்துக்கொடுக்க மாத்திரமல்ல, தனது வீட்டைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கின்ற சோதோமின் புருஷர்களின் சரீரப் பசிக்குப் பலியாக்கிவிடவும் ஆயத்தமாயிருந்தான். அப்படி, லோத்து வீசியிருந்தாலும் மணமுடிக்கவிருந்த புருஷர்களால் அருவருப்பான சந்ததி உருவாகவிருந்ததைப்போல, வீட்டைச் சூழ்ந்திருந்த சோதோமின் மனிதர்களால் லோத்துவின் குமாரத்திகளினிடத்தில் அருவருப்பானதோர் சந்ததி உருவாகியிருக்குமே. 

எனினும், இத்தனை பெரிய ஆபத்துக்களிலிருந்து லோத்துவின் குமாரத்திகளை கர்த்தர் பத்திரமாகப் பாதுகாத்தார். தன்னை நீதிமானாக லோத்து காத்துக்கொண்டபோதிலும், தனக்குப் பின் தனது சந்ததியாக எண்ணப்படவிருக்கின்ற தனது குமாரத்திகளின் மீது அக்கறையில்லாமலிருந்த லோத்துவை சத்துருவே கறைபடுத்திவிட்டான். இன்றும், தங்களுடைய பிள்ளைகளை சத்துருக்களினிடத்தில் தள்ளிவிட்டு தங்களை மட்டும் காத்துக்கொண்டால் போதும் என்ற மனப்பாங்குடன் ஓடிக்கொண்டிருக்கின்ற ஊழியர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஊழியர்களின் எதிர்காலம் தங்களுடைய பிள்ளைகளாலேயே ஆபத்தின் பிடியில் சிக்கிவிட வாய்ப்புகள் அதிகம். தகப்பனது தரிசனத்தை தகர்த்துப்போடவும், தகப்பன் கட்டிவைத்திருந்தவைகளின் மேலே விழுந்து அவைகளை நொறுக்கிவிடவும், சத்துரு அத்தகைய பிள்ளைகளை சத்துரு கையிலெடுத்து உபயோகித்துவிடக்கூடும். லோத்துவின் சிந்தையை அறிந்த சத்துருவோ, அதனை தக்கவேளையின்போது தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். விருந்தினர்களைக் காக்க தன்னுடைய குமாரத்திகளை வீட்டைவிட்டு, சத்துருக்களினிடத்தில் வெளியே வீசிவிடவிருந்த லோத்துவின் திட்டத்தை தூதர்கள் தடுத்து கர்த்தர் நிறுத்தியிருளந்தபோதிலும், சத்துருவோ லோத்துவின் குமாரத்திகளை லோத்துவின் சரீரத்தின் மேலேயே வீசிவிட்டான். 

என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற் 10:29,30) என்று இயேசு சொல்வது, 'மனைவியையும் பிள்ளைகளையும் சத்துருவினிடத்தில் இழந்துவிட்டு வருவதைக் குறிப்பதல்ல' என்பது நமது அறிவிலேற்றிக்கொள்ளவேண்டியது. நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்  (யோசு 24:15) என்று யோசுவா சொன்னதைப் போல, 'முழுக் குடும்பத்தையும் கர்த்தரோடு தக்கவைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு' குடும்பத் தலைவனுக்கு உண்டு என்பதனை மறந்துவிடமுடியாது. லோத்துவின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து பிரிந்துபோனாள்; பிள்ளைகளோ, தகப்பன் மேலேயே தடுமாறி விழுந்தார்கள்.  செழிப்பான வாழ்க்கைக்காக மாத்திரமே சோதோமைத் தெரிந்துகொண்டு, குடும்பத்தைக் குறித்தோ கரிசனையின்றி வாழ்ந்துகொண்டிருந்த லோத்துவின் கையிலிருந்து முழுக் குடும்பத்தை மாத்திரமல்ல, சந்ததியையே பறித்துக்கொண்டான் சத்துரு. நீதிமானின் ஓட்டமே நின்றுபோனது. சத்தியத்தைச் சுமக்கும் நமக்கு இச்சரித்திரம் ஓர் எச்சரிப்பு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக