திங்கள், 11 அக்டோபர், 2021

ரகசியம் (ஆதி 24:1,2)

 ரகசியம்


ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார். அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: (ஆதி 24:1,2)

  

ஆசீர்வாதம் நம்முடையதென்றால், அதனை யார்மூலமாகவும் கர்த்தர் கொடுத்தனுப்பக்கூடும் தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான் (ஆதி 21:5) என்றும், ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள் (ஆதி 25:20) என்றும் வாசிக்கின்றோமே. அப்படியென்றால், இநிகழ்வின்போது ஆபிரகாமின் வயது நூற்று நாற்பது என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும். ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார்; என்றாலும், குமாரனுக்குரிய ஆசீர்வாதமோ, உன்னதத்திலிருந்து ஊழியக்காரன் மூலமாகவே வரவேண்டியதாயிருந்தது. நம்முடைய வாழ்க்கையிலும், நேரடியாக கர்த்தர் நம்மை அநேக விதங்களில் ஆசீர்வதித்திருந்தாலும், பிற தேவமனிதர்களையும், நம்முடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவர்களையும்கூட ஆசீர்வாதத்திற்குப் பாலமாக பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகக்கூடும்; உபயோகப்படுத்தவேண்டியவர்களை நாம் உதறிவிடக்கூடாது. அப்படிப்பட்ட தேவமனிதர்களை அடையாளங்கண்டுகொண்டு அனுமதித்தால் மாத்திரமே அத்தகைய ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் சாத்தியமாகும். 

தன் குமாரனான ஈசாக்கிற்கு பெண் தேடுவதற்குக் கூட தான் விட்டுவந்த தேசத்திற்குத் போய்வர ஆபிரகாம் ஆயத்தமாக இல்லை; நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு (ஆதி 24:6) என்று ஊழியக்காரனையே அனுப்புகிறான். அழைப்பு என்னும் ஒருவழிப் பயணத்தில் தன்னையும் தன் சந்ததியையும் காத்துக்கொள்ளவேண்டும் என்பதில் ஆபிரகாம் உறுதியாயிருந்தான். தன் ஊழியக்காரனை ஆபிரகாம் நோக்கிப் பார்ப்பதின் ரகசியம் இதுவே. இத்தகைய உறுதி நம்மிடத்தில் உண்டா? தேவைகள் வரும்போது, 'எகிப்திலே இருந்தால் நலமாயிருக்கும்' என்று சொன்ன இஸ்ரவேல் ஜனங்களைப் போல, விட்டுவந்த இடத்திற்குச் திரும்பிவிடத்தானே பலவேளைகளில் கால்கள் தீவிரப்படுகின்றன.  

சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன் (ஏசா 7:8) என்றே வேதத்தில் வாசிக்கின்றோம்; இன்றைய சீரியாவின் தலைநகரமும் தமஸ்குவே. ரெபேக்காளின் தந்தையாகிய பெத்துவேல் சீரிய தேசத்தான் என்று அழைக்கிறது வேதம். ஆபிரகாமின் சகோதரன் நாகோர் (ஆதி. 11:26) மற்றும் ஆரானுடைய குமாரத்தி மில்க்காள் (ஆதி. 11:29); இவர்களுக்குப் பிறந்தவர்களுள் ஒருவனே ரெபேக்காளின் தந்தையாகிய பெத்துவேல் (ஆதி. 22:20-23). சீரிய தேசத்திலேயே இவர்கள்  வசித்தபடியினால், சீரிய தேசத்தார் என்று இவர்களள் அழைக்கப்படுகின்றனர். அப்படியே ஆபிரகாமின் ஊழியக்காரனாகிய தமஸ்கு ஊரானாகிய எலியேசரும் (ஆதி. 15:2) 

சீரியனாகவே இருந்திருக்கவேண்டும். சீரியாவிலுள்ள தன் இனத்தண்டைக்கு சீரியனையே அனுப்புகிறான் ஆபிரகாம்; என்றபோதிலும், இது கர்த்தரின் செயலும்கூட என்பதை நாம் உணர்ந்துகொள்வது அவசியம். தேசத்தையும் தேவனையும் அறிந்த ஓர் ஊழியக்காரனே அனுப்பப்பட்டான். பெண்ணைத்தேடி அங்கும் இங்கும் அலையவிலலை, வலதுபுறம் இடதுபுறம் விலகாமல் ஆண்டவரே அவனை நேர்வழியாக நடத்தினார் (ஆதி. 24:48). சரியான இடத்திற்கு அனுப்பப்பட்ட சரியான மனிதன், சீரியாவிலிருந்து சரியான பெண்ணை சந்ததியைப் பெருக்கும்படியாக ஆபிரகாமின் மகனுக்குக் கொண்டுவந்தான்.   

உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே (ஆதி 15:7) என்றும், நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்றும் ஆண்டவர் கூறுவதும், 'என் தேசத்திற்குப் போய்' (ஆதி. 24:4) என்று ஆபிரகாம் ஊழியக்காரனிடத்தில் சொல்வதும், சீரிய தேசத்திலுள்ள கல்தேயர்கள் வாழும் மெசொப்பொத்தாமியா பட்டணத்திலுள்ள ஆபிரகாமின் இனத்தாரில், ஆயத்தம்பண்ணப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் மணமகளை அழைத்துவரவே ஊழிக்காரன் அனுப்பப்பட்டான். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக