செவ்வாய், 12 அக்டோபர், 2021

வழி விலகாத வாழ்வு (ஆதி 25:21)

வழி விலகாத வாழ்வு



மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.(ஆதி 25:21)


அவரால் அடைக்கப்பட்ட வாசல்கள் அவராலேயே திறக்கப்படவேண்டும். ஆபிரகாமின் மனைவியாகிய சாராளின் கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருந்தார் (ஆதி. 16:2). அடைக்கப்பட்டிருந்த நாட்களில், வழி விலகி, வாழ்க்கையில் வலியை உண்டாக்கிக்கொண்டது ஆபிரகாமின் குடும்பம். வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற வேளையில் நாமும் வழிதவறிப் போய்விடக்கூடிய வாய்ப்பு உண்டு. தனது எண்பத்தாறாவது வயதில் இஸ்மவேலையும் (ஆதி. 16:16), நூறாவது வயதில் ஈசாக்கையும் பெற்றெடுத்தான் ஆபிரகாம் (ஆதி. 21:5).  ஆபிரகாம் தனது நூற்று எழுபத்தைந்தாவது வயதில் மரிக்கும்போது, ஈசாக்கின் வயதோ எழுபத்தைந்து; இஸ்மவேல் ஈசாக்கைக் காட்டிலும் பதினான்கு வயது மூத்தவன்; எனவே, இஸ்மவேலின் வயது அப்போது எண்பத்தொன்பது.  ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் செய்கிறபோது நாற்பது வயதாயிருந்தான் (ஆதி. 25:20). ஈசாக்கின் திருமணத்திற்குப் பின் முப்பத்தைந்து வருடங்கள் ஆபிரகாம் உயிரோடு இருந்தான். ரெபெக்காளினிடத்தில் இரட்டையர்களாக ஏசா யாக்கோபு பிறந்தபோது, ஈசாக்கின் வயது அறுபது (ஆதி. 25:26). எனவே, இருபது வருடங்கள் ஈசாக்கு ரெபெக்காள் தம்பதியர் பிள்ளைகளற்றவர்களாகவே வாழ்ந்துவந்தனர், என்றாலும் வழிவிலவில்லை.  

ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் (ஆதி 21:12) என்று ஆண்டவர் ஆபிரகாமினிடத்தில் சொல்லியிருந்தார்; என்றபோதிலும், இருபது வருடங்கள் சந்ததியில்லாமலிருந்த ஈசாக்கின் குடும்பத்திற்காக ஆபிரகாம் விண்ணப்பித்திருந்திருக்கக்கூடும். அப்படியே, தான் வழிவிலகினதினால் உண்டான வலியினை மனதில் கொண்டவனாக, கர்;ததருக்கே காத்திருக்கும்படியாக ஈசாக்கிற்கு ஆபிரகாம் ஆலோசனையும் அளித்திருக்கக்கூடும். மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள் (ஆதி 25:21). பேரன்மார்களுடன் பதினைந்து வருடங்கள் வாழும் பாக்கியம் ஆபிரகாமுக்கும் கிடைத்தது. சந்ததி இல்லையே என்ற கவலையில், ஆபிரகாம் ஆகாரோடு சேர்ந்துவிட தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டான்; அப்படியே, தன்னுடைய விட்டில் பிறந்த பிள்ளையையும் சுதந்தரவாளியாக்கிவிடத் துணிந்துவிட்டான். இத்தகைய வாழ்வு நமக்கு வகுத்துவைத்திருக்கும் வாக்குத்தத்தத்தின் பயணத்தில் வலியை உண்டாக்கிவிடும். ஆனால், ஈசாக்கோ பிள்ளையில்லையே என்ற வலியின்போதும் ஆண்டவருடைய வழியிலேயே நின்றான், ஆண்டவரையே நோக்கிப் பார்த்தான், பரத்திலிருந்து பலன் வந்தது. 

பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தih நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள் (யாத் 14:10-12). பார்வோனைப் பார்த்ததும், எகிப்துக்கு நேராகத் திரும்பியது இஸ்ரவேல் மக்களின் மனம். 

அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள் (யாத் 16:2,3). பசி உண்டானபோதும், எகிப்து தேசத்திற்கு நேராகவே திரும்பியது இஸ்ரவேல் மக்களின் மனம். எனினும், ஆண்டவரே அவர்களை திருப்தியாக்கினார்.  திருப்தியாக்கும் ஆண்டவர் அருகிலேயே இருக்க, நாம் ஏன் பிரச்சனைகளைக் கண்டு திரும்பிப் பார்க்கவேண்டும்? 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக