விசுவாசத்தின் பெலன்
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். (ஆதி 21:1,2)
வாக்குத்தத்தங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டால் போதும், நான் எப்படி வாழ்ந்தாலும் அது எனது வாழ்க்கையில் நிச்சயம் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தவறாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்வது எளிது; ஆனால், பெற்ற வாக்குத்தத்தங்களின் மேல் விசுவாசம் கொள்வது என்பதோ பலருக்கு கடினமானது. தேவனிடத்திலிருந்து வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்தபோதிலும். விசுவாசத்தில் வலுவிழந்ததால், வாக்குத்தத்தத்தையே இழந்துபோய்விட்ட மனிதர்கள் உண்டு; இத்தகையோர், தங்கள் விசுவாசக் குறைச்சலைக் குறித்துப் பேசாமல், 'சொல்லியும் செய்யவில்லை' என்று தேவனையே குறைத்துப் பேசுவார்கள்; அத்துடன், அவர் மீது பழிசுமர்த்தும் வார்த்தைகளையும் கூசாமல் பேசத்தொடங்கிவிடுவார்கள்.
ஆபிரகாமோ, அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனைமகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான் (ரோம 4:18-21). ஆபிரகாமின் விசுவாசத்தின் பெலன், ஆண்டவரது வார்த்தையை ஈசாக்கு என்னும் மாம்சமாக மடியில் பெற்றுக்கொள்ள வழிவகுத்தது நம்முடைய வாழ்க்கையின் வழிகளில் விசுவாசத்தின் நிலை என்ன?
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? (எண்; 23:19) என்பதே நம் தேவனைக் குறித்து நமக்கு உண்டாயிருக்கவேண்டிய அறிவு. சொல்லியிருந்தால், கிள்ளி அல்ல அள்ளிக்கொடுப்பவர் நம் தேவன்.
மேலும், அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான் (பிர 3:11) என்று ஆண்டவருடைய செய்கைகளுக்கும், அதைக் குறித்து மனிதர்களுக்கு இருக்கும் அறிவையும் வேதம் வேறுபடுத்திக்காட்டுகின்றதே. பவுலும் தனது நிருபத்தில், எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை (1கொரி 2:9) என்று எழுதுகின்றாரே. மேலும் யோபுவும் தனது வாழ்க்கையின் அனுபவத்தில், அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார். எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு (யோபு 23:13,14) என்று தனது உறுதியை வெளிப்படுத்துகின்றானே.
அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம் (ரோம 8:24,25). 'சொல்லியிருந்தபடி, உரைத்தபடி' என்று ஆண்டவரது வார்த்தையை இருமுறை அழுத்தக்கூறும் வேதம்; 'முதிர்வயதாயிருக்கையில், குறித்தகாலத்தில்' என மனிதனுடைய காலத்தையும் மற்றும் தேவனுடைய காலத்தையும் எடுத்துக்கூறுகின்றது. காலத்தினை மாத்திரம் கணக்கில் எடுத்துக்கொண்டு, கர்த்தரை செயலிழந்தவராக நாம் கணக்கிட்டுவிடக்கூடாது. வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் (மாற் 4:20); முட்களோ, கற்களோ நம்மை நெருக்கிவிடாதபடி காத்துக்கொண்டால் பலன்களால் நமது வாழ்க்கை நிரையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக