வாசலுக்கு வெளியே
அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். (ஆதி 19:6,7,9)
'அந்நியர்களை வீட்டிற்குள் வரவழைத்து விருந்தளிப்பதோடு நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை; அவர்களைத் தாக்கும்படியாகக் குறிவைத்துக்கொண்டிருக்கும் சத்துருக்களோடு போராடும் பொறுப்பும் நமக்கு உண்டு' என்பதை நாம் மறக்கலாகாது. 'என்னுடைய விட்டில் நான் விருந்து கொடுத்துவிட்டேன், வீதியிலே அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன?' என்று நாம் அசதியாக இருந்துவிட்டால், நாம் அளித்த விருந்தின் பலனை நாமே அழித்துவிடுமளவிற்கு சத்துருக்களை விருந்தினர்களின் வாழ்க்கையில் அனுமதித்துவிடுவோம். சோதோமின் மனுஷர் லோத்துவின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு, மனிதர்கள் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த, லோத்துவின் வீட்டிற்கு வந்த தூதர்களை வேட்டையாடும்படியான வேட்கையுடன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, வீட்டிற்குள் இருக்கும் புருஷர்களைக் காக்கும்படியாக, முதற்கட்டமாக லோத்து வீட்டிற்கு வெளியே வரவேண்டியதாயிற்று.
சத்துருவாக வந்து நிற்பவர்களை 'சகோதரரே' என்று லோத்து பேசுவது, கெத்சமெனேயில் இயேசு 'சிநேகிதனே' என்ற வார்த்தைக்கு ஒப்பானதே. நீதியின் மார்க்கத்தில் பயணிக்கிற நம்மிடத்திலும் இத்தகைய வாய்மொழி வளரவேண்டும். 'அக்கிரமம் செய்ய' நின்றவர்களோ, லோத்துவின் 'அன்பின் வார்த்தைகளை' அசட்டைபண்ணினார்கள். அக்கிரமத்துக்குத் தங்களை விற்றுப்போட்டவர்களுக்கு அன்பின் அர்த்தம் புரிவதில்லையே. 'சகோதரரே' என்று லோத்து பேசியபோதிலும், 'பரதேசி' என்று பேசியதுதான் அவர்களது பண்பாயிருந்தது. பதிலுக்குப் பதில் கிடைக்கவில்லை; காரணம், அன்பின் மதிலுக்குள் அவர்களது வாழ்க்கை இல்லை; 'அன்பில்லாதவன் தேவனை அறியான்' (1யோவான். 4:8). 'அப்பாலே போ சாத்தானே' என்று பேதுவை தற்காலிகமாகப் பேசவைத்த பிசாசை இயேசு அதட்டினார்; ஆனால், 'அப்பாலே போ' என்று துன்மார்க்கர்கள் நீதிமான்களைச் சொல்லும் சூழ்நிலையும் நீதிமானாகிய லோத்துவின் வாழ்க்கையில் உண்டானது. என்றாலும், வீட்டிலிருந்த விருந்தினர்களுக்காக லோத்து பரிந்துபேசினான்.
நாம் போதித்தவைகளைச் சோதித்துப் பார்க்க வெளியிலே சத்துரு ஆயத்தமாயிருக்கும்போது, நம்முடைய வீட்டில் விருந்துண்டவர்கள் தங்களை வாசலுக்கு வெளியே விட்டுக்கொடுத்துவிட்டாலோ அல்லது நாம் அவர்களை விட்டுக்கொடுத்துவிட்டாலோ, சோதனையிலே அவர்கள் வீழ்ந்துவிடக்கூடும்; எனவே, அவர்கள் பெலனடையும்வரை அவர்களுக்காகப் போராடவேண்டியது நீதிமான்களின் கடமை. சீமோன் சோதிக்கப்படுவதற்கான வேளை நெருங்கியபோது, இயேசு கிறிஸ்து சீமோனை நோக்கி: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் 'விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு' உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து (லூக் 22:32) என்றாரே. சீமோன் பேதுரு இயேசு கிறிஸ்துவின் சீஷன், இயேசுவின் போதனைகளை அறிந்தவன், இத்தனையாய் இயேசு கிறிஸ்து சீமோனை பயிற்றுவித்திருந்தாலும், 'வெளியுலகத்திற்குச் செல்லும்போது, வீழ்ந்துவிடும் ஆபத்து இருந்தது;' எனவே, இயேசு சீமோனுக்காக வேண்டிக்கொண்டார். 'மனங்கசந்து அழுத' (மத். 26:75) சீமோன் பேதுருவின் விசுவாசம் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது. யூதாஸோ, தொடர்பையே துண்டித்துக்கொண்டு,
வாசலுக்கு வெளியே போய் தன்னைத் தானே தூக்கிட்டுக்கொண்டுச் செத்தான்.
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், 'விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்'. இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் (2தீமோ 4:7,8) என்ற பெற்றுக்கொண்ட விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும் வீரர்களை உருவாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக