திங்கள், 11 அக்டோபர், 2021

வாதையும் வார்த்தையும் (ஆதி 20:3,4)

வாதையும் வார்த்தையும்


தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? (ஆதி 20:3,4)

 

'தேவனிடத்தில் பட்சபாதமில்லை' (ரோம 2:11) எனினும், சிலரை அவர் அள்ளி அணைத்துக்கொள்வதற்கும், சிலருடைய வாழ்க்கையில் தள்ளி நிற்பதும், அவர்களே காரணம் என்பதை அறிந்துகொள்வதே சத்தியம். ஆபிரகாம் எகிப்து தேசத்திற்குச் சென்றிருந்தபோது, பார்வோன் சாராளை அழைப்பித்தான்; எனினும், பார்வோனோடு ஆண்டவர் நேரடியாக இடைபடவில்லை. வாதைகளாலேயே அவனது தவறான பாதையை மறித்து, அவள் ஆபிரகாமின் மனைவி என்பதை அறிந்துகொள்ளும்படி செய்தார். ஆண்டவர் இடைபடக்கூடிய நிலையில் பார்வோன் இல்லாததே அதற்குக் காரணம். ஆண்டவரது வார்த்தைகளைக் கேட்டு உணரக்கூடிய நிலையில் நாம் இருந்தால், நாம் தவறும்போது நம்மை அவர் தப்புவிப்பது எளிதானதே. அவரது சத்தத்தைக் கேட்கும் தூரத்தில் இருந்தால், 'நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும் (ஏசா. 30:21). 

இன்றும், கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும் இடத்தில் நாம் இல்லையென்றால், வாதைகளின் மூலமாக பார்வோனோடு இடைபட்டதைப் போலவே, ஏதாவது பிரச்சனைகளையோ, துக்கங்களையோ, பாடுகளையோ சந்தித்து, அதன்பின்னர் உணர்வடையவேண்டிய நிலை உருவாகும்; ஒருவேளை அது சந்திக்கப்பட்டதின் சாட்சியாகலாம். எனினும், தண்டிக்கப்பட்டபின்னரும் 'தாங்கள் கர்த்தரால் தண்டிக்கப்படுகிறோம்' என்பதை உணராமல், தங்கள் தடத்தை மாற்றிக்கொள்ளாத 'தள்ளுபடியான வெள்ளியைப் போன்ற' (எரே. 6:30) மனிதர்கள் உண்டு. ஆனால், ஆபிரகாம் கோராருக்குச் சென்றிருந்தபோது, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை அழைத்து அனுப்பியபோது, தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் 

தூரத்தில் அபிமெலேக்கு இருந்ததால், தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி அவனோடு இடைபட்டார். 'நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே' (ஆதி 20:3) என்று சொன்னபோது, 'அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான்' (ஆதி. 20:4). இது ஒரு நீதிமானுக்கு இணையான குணமல்லவோ. இயேசுவின் பிறப்பின்போது, மரியாளின் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனiவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது (மத் 1:19,20) என்று சொன்னபோது, அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (மத் 1:25). பார்வோன் தண்டனைக்குப் பின் சாராளைத் தள்ளிவிட்டான்; அபிமெலேக்கோ, கர்த்தராலேயே தடுக்கப்பட்டான். 

மேலும், அபிமெலேக்கு ஆண்டவரை நோக்கி: 'ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?' (ஆதி 20:4) என்று கேட்பது,  சோதோமை அழிக்கும்படியாக ஆண்டவர் இறங்கிவந்தபோது, ஆபிரகாம் ஆண்டவரை நோக்கி, துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? (ஆதி 18:23) என்று கேட்டதற்கு ஒப்பான வார்த்தை அல்லவோ. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று (ஆதி 20:5) அபிமெலேக்கு சொன்னபோது, தேவன் அவனை நோக்கி: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை 

(ஆதி 20:6) என்ற வர்த்தையின் ஆழம், அபிமெலேக்கின் வாழ்க்கை முறை ஆண்டவரின் வரையறைக்குட்பட்டதாகவே இருந்திருந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக்குகின்றது. இடைவெளி அதிகமாயிருந்தால், வார்த்தையால் இடைபடுவதும் கடினமாகிவிடும். 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக