சுகமான சிறை
தேவனுக்குப் பிரியமில்லாதவைகளின் மீது நாம் கொள்ளும் பிரியம் பரத்திற்கு விரோதமாக நம்மைப் பிரிந்துபோகச் செய்துவிடும். அப்படியே, அவருடைய சித்தத்திற்கு விரோதமானதாகக் காணப்படும் நம்முடைய செயல்களும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றக்கூடாதபடி செயலற்றவர்களாக நம்மை மாற்றிவிடும். தேவன் மனிதரை உண்டாக்கினபோது, நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1:28); ஆனால், ஜனங்களோ, நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டபோது (ஆதி 11:4), அங்கிருந்து அவர்களை சிதறப்பண்ணினார் தேவன். நகரத்தைத் கட்டி ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்துவிட நாம் உருவாக்கப்பட்டவர்களல்ல; மாறாக, நாலா திசையிலும் சென்று முழு பூமியையும் ஆண்டுகொள்ள அழைக்கப்பட்டவர்கள் நாம்.
எனினும், 'நமக்கு' என்ற எண்ணமோ நம்மை நகரவிடாமற் செய்துவிடும்; பிரயாணம்பண்ணுகையில் 'சமபூமியையும், 'செங்கல்லையும், நிலக்கீலையும்' ஜனங்கள் கண்டபோது (ஆதி. 11:2,3) 'நமக்கு என்ற எண்ணம் அவர்களிலே நிலைகொண்டுவிட்டது. நம்முடைய வாழ்க்கையிலும், வாழ்க்கைக்குத் தேவையானவைகளைக் காணும்போது 'நமக்கு' என்ற எண்ணத்தில் அவைகளையே வாழ்க்கையின் 'வேலிகளாக்கிவிட விரும்புகின்றோம்.' மேலும், அங்கிருந்து வெளியேறவும் மனதற்றவர்களாக, உடலையும் உள்ளத்தையம் அதனுள்ளேயே சிறையாகிவிடுகின்றோம். ரூபன் மற்றும் காத் புத்திரரின் நிலை இதுவே. ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள். ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி: கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம். உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு. உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்க வேண்டும் என்றார்கள் (எண்; 32:1-5). கர்த்தர் மோசேயை அழைத்தபோது, அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன் (யாத் 3:8) என்றே தனது திட்டத்தை முன்னறிவித்தார். ஜனங்களுக்குத் தகுந்த இடமாக கர்த்தருடைய கண்களோ கானானைக் கண்டது. ஆனால், ரூபன் மற்றும் காத் கோத்திரத்தாரின் கண்களோ 'ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடத்தைத் தேடினது.'
இத்தகைய தவறான தெரிந்துகொள்ளுதலினால், சுதந்தர பூமியிலிருந்தும், அழைக்கப்பட்ட இடத்திலிருந்தும் தூரமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இன்றும் அநேகர் உண்டே. ஆத்துமாவுக்குத் தகுந்த இடத்திற்கு நேராக கர்த்தர் வழிநடத்திக்கொண்டுசெல்லும்போது, வழியில் சரீரத்திற்கும், சரீர தேவைகளுக்கும், சுகத்திற்கும் தகுந்த இடங்களில் தங்விடும் மக்கள் அநேகர். ஆத்துமா முன்னேறிச்செல்லவேண்டிய பாதையையும், ஆண்டவர் வகுத்துவைத்திருக்கின்ற பயணத்தையும் மறந்து, சரீரத்தோடு சாய்ந்துபோய்விடும் மக்கள் அநேகர். கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் (சங் 23:1-3) என்று ஆத்துமாவை வழிநடத்திச்செல்லும் ஆண்டவரைக் குறித்த அறிவினை பாடல் வரிகளில் எழுதுகின்றார் தாவீது. ஆனால், ஆத்துமாவுக்கு மேய்ச்சலில்லாமல், புல்லில்லாமல், தண்ணீரில்லாமல், தேற்றுதலில்லாமல், சரீரத்தைக் குறித்த சிந்தையைச் சுமந்தவர்களாக மாத்திரமே வாழும் மக்களின் வாழ்க்கை சுதந்தர பூமியிலல்ல, சுகமான சிறையிலேயே இருக்கும்.
லோத்துவின் தெரிந்துகொள்ளுதல், இதற்கு ஓர் முன்னுதாரணம். ஆபிரகாமும், லோத்தும் ஒன்றாகப் பிரயாணம்பண்ணிக்கொண்டிருந்தாலும், 'ஒருமித்து வாசம்பண்ணவோ ஏதுவில்லாமற்போயிற்று' (ஆதி. 13:6). ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும், லோத்துவின் மந்தை மேய்ப்பருக்கும் இடையில் உண்டான வாக்குவாதம், ஆபிரகாம் மற்றும் லோத்து வரை எட்டியது (ஆதி. 13:8). கீழ்மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், மேல்மட்டத்தில் பிரிவினையை உண்டாக்கினது. அழைக்கப்பட்ட ஆபிரகாம் லோத்துவை நோக்கி: இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம்போனால், நான் வலதுபுறம் போகிறேன். நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்று சொன்னபோது, லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர்
சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள் (ஆதி 13:9-11). நீ என்னை விட்டுப் பிரிந்துபோகலாம் என்று சொன்னதும், செழிப்பான இடத்தை தெரிந்துகொண்டு விழிகளின் விருப்பத்திற்கிணங்க உடனே புறப்பட்டுவிட்டான் லோத்து.
ஆனால் ரூத்தோ, என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ? என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல. அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது (ரூத் 1:11-13) என்று பிரிந்துபோகும்படியாக நகோமி சொன்னபோதிலும், கசப்பான நிலையிலிருந்த மாமியோடேயே ஒட்டிக்கொண்டிருந்தாள்.
ரூபன் கோத்திரத்தாரிடத்திலிருந்தும், காத் கோத்திரத்தாரிடத்திலிருந்தும் மேலும் ஒரு பாடத்தினை நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். பசுமையைக் காண்பதும்
(எண். 32:1), பயத்தால் நிறைந்துவிடுவதும் (எண். 13:33) பிரயாணிக்கும் மனிதனைப் பின்னிட்டுத் திரும்பச் செய்யப் போதுமான பெலனுள்ளவைகள். அப்படியே, பயணத்தின்போது பின்வாங்குகிறவர்கள், பிரயாணித்துக்கொண்டிருக்கும் பிற ஜனங்களையும் திடனற்றுப்போகப்பண்ணிவிடுகிறார்கள். ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் பசுமையான யாசேர் தேசத்தையும், கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது இதுவரை போரிட்டது போதும் என்ற மனநிலையுடனும், சரியான இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்ற திருப்தியுடனும் அங்கேயே தங்கிவிட நினைத்தனர். அவர்களுடைய தீர்மானம், பிறரையும் பாதித்தது. எனவே, மோசே அவர்களை நோக்கி, 'இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?'
(எண்; 32:7) என்று கூறுகின்றான். ரூபன் மற்றும் காத் கோத்திரத்தாரின் தெரிந்துகொள்ளுதலைக் கண்ட மனாசேயின் கோத்திரத்தாரில் ஒரு கூட்டத்தினரும் அங்கேயே தங்கிவிட விரும்பினர் (எண். 32:23). ஒருவேளை மனாசேயின் கோத்திரத்தாருக்கிடையே இதினிமித்தம் வாக்குவாதம் உண்டாயிருக்கக்கூடும். ஒரு பிரிவினர் கானானுக்குப் போகவேண்டும் என்று சொல்லியிருக்கலாம்; மற்றொரு பிரிவினர், ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் இருக்கும் இடமே செழிப்பான இடமாகத் தெரிகின்றது; எனவே, இங்கேயே இருந்துவிடலாம் என்று சொல்லியிருக்கலாம். ரூபன் மற்றும் காத் கோத்திரத்தாரின் பின்வாங்குதலினால், மனாசேயின் கோத்திரமே இரண்டாகப் பிரிந்துபோனதே.
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்க வேண்டும் (எண்; 32:5) என்பதே ரூபன் மற்றும் காத் புத்திரரின் வேண்டுகோளாயிருந்தது. அங்கேயே தங்கிவிடவே அவர்கள் நினைத்தார்கள். எனினும், உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ? (எண்; 32:6) என்று மோசே கேட்டபோது, பின்வாங்கிப்போன பிதாக்களையும்; மற்றும் அதனால் உண்டான பின்விளைவுகளையும் மோசே சுட்டிக்காட்டினபோது (எண். 32:8-12), தகுந்த இடத்தை தெரிந்துகொண்ட கூட்டமாயல்ல, பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள் (எண். 32:14) என்று மோசே சொன்னதினாலேயே, அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காக தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம். நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம். இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை (எண்; 32:16-18) என்று சொன்னார்கள்.
எனினும், எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள். உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள் (எண்; 32:26,27). எல்லா கோத்திரத்தாரும் குடும்பமாகப் பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தபோது, இவர்களோ குடும்பத்தை விட்டுவிட்டுப் பிரிந்து செல்லும் நிலை உண்டானது. இப்படிப்பட்ட நிலைக்குள் இன்றும் அநேகரை சத்துரு ஆசைகாட்டி தள்ளிவிடுகின்றான். போர்முனையில் இருக்கும் வீரர்களின் ஒருபுற மனதை மனைவியோடும் மற்றும் பிள்ளைகளோடும் பிடித்துவைப்பதற்காக, அவர்களின் ஒருபுறத்தை மட்டுமே கர்த்தருக்காக உபயோகிப்பதற்காகவுமே சத்துரு செய்யும் சதி வேலையே இது. குடும்பத் தலைவர்கள் இல்லாமல், ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்கள் எத்தனை கஷ்டத்தை சகித்திருப்பார்கள்; கணவன் கானானுக்குச் சென்றுவிட்டு, போர்முனையிலிருந்து எப்போது வீடு திரும்புவார் என்று மனைவியும், பிள்ளைகளும் எத்தனை ஆவலாய் காத்துக்கிடந்திருப்பார்கள். இன்றும் செழிப்பினை மனதில் வைத்து குடும்பங்களை விட்டுப் பிரிந்து கிடக்கும் குடும்பத் தலைவர்கள் உண்டு. தங்களுடைய தேவை நிவிர்த்தியானதும், சந்திக்கப்பட்டதும் போரிலிருந்து பின்வாங்கிவிடும் மனநிலையோடு வாழும் மனிதர்கள் உண்டு. பிறருக்கான போரிலிருந்து பின்வாங்குபவர்கள் இவர்கள்.
அப்படியே, 'நமக்குப் பேர் உண்டாகப்பண்ணுவோம்' (ஆதி. 11:4) என்ற எண்ணமும், நம்முடைய பயணத்தை பயணிக்கவேண்டிய திசையிலிருந்து திருப்பி, பரத்திற்கு எதிராகப் பயணிக்கும்படி நம்மை மாற்றிவிடும். கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் மற்றும் மேற்கேயும் பயணிக்கவேண்டிய மக்கள், பூமியிலிருந்து வானத்திற்கு நேராகப் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பயணத் திட்டம் மனிதர்களுக்கு வகுக்கப்படாதது. எனினும், விண்ணுக்கு நேராகப் பயணித்தால், மண்ணிலே நமக்குப் பேர் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு அந்தப் பயணத்தைத் தொடங்கினார்கள். 'கோபுரத்தை' கட்டி,
மனிதர்களுடைய பெலத்தை வீணடித்துக்கொண்டிருந்ததோடு, மண்ணிலே கிடைத்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் வீணாக விரயம் செய்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன் (ஆமோ. 9:2) என்றும், நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் (ஒப. 1:4) என்றும் கர்த்தர் சொல்லுகின்றாரே.
இன்றும், நமக்குப் பேர் உண்டாகப்பண்ணுவோம் என்ற எண்ணத்தில், பூமியில் தாங்கள் பயணிக்கவேண்டிய திசைகளை மறந்து, தேவனுக்கு விரோதமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் மக்கள் அநேகர். வேத்திற்கு விரோதமாகவும், தேவனுக்கு எதிராகவும் செயல்பட்டு, தங்களுக்குப் பேர் வரவேண்டும் என்பதையே முன்னிறுத்தும் ஊழியர்களும் உண்டு. தங்களுடைய பெயர், தங்களுடைய ஊழியத்தின் பெயர், சபையின் பெயர், சத்தியத்தைக் காட்டிலும் அதிகமாகப் பேசப்படவேண்டும் என்றும் பரவவேண்டும் என்ற நோக்கத்தில் விளம்பரப்படுத்தும் மக்களும் உண்டு. விண்ணுக்கு விரோதமான இத்தகையோரின் பயணங்கள் ஒரு நாளும் வெற்றிபெறாது. அழைப்பினை மறந்து, இருக்கும் இடத்தில் அவருக்கு எதிரான காரியங்களைச் செய்ய சத்துரு நம்மைத் தூண்டிவிடாதபடி எச்சரிக்கையோடிருப்போம். நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற் 16:15) என்ற கிறிஸ்துவின் கட்டளையே நம்முடைய வாழ்க்கையின் பிரதானமானதாகட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக