அடைத்துவைக்க அல்ல அழைத்துவர
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். (ஆதி 28:15)
அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார். (ஆதி 28:20,21)
நம்மீது கர்த்தர் காட்டும் அக்கறையும், பாதுகாப்பும் எதற்கு என்பதை பல நேரங்களில் நம்மால் சரிவரப் புரிந்துகொள்ள இயலுவதில்லை. எத்தனையோ பாதுகாப்பை தொடர்ந்து கர்த்தர் கொடுத்துக்கொண்டேயிருந்தபோதிலும், இன்னும் அநேகர் அழைப்பின் எல்லைக்குள் வந்து சேரவேயில்லை. விளைவு, ஆத்தும அறுவடைக்காக, அழைப்பின் எல்லைக்குள்ளே விதைக்கப்படவேண்டிய அநேகர், அழைப்பின் எல்லைக்கு வெளியே புதைக்கப்பட்டுவிட்டனர். காப்பாற்றப்படுவதும், உண்ண உணவளிப்பதும், உடுக்க வஸ்திரம் கொடுப்பதும், 'ஆசீர்வாதம்' என்று மாத்திரமே நினைத்து நினைத்து, ஆத்துமாவுக்கு அடுத்த அழைப்பை மறந்துபோனவர்கள், அழைக்கப்பட்ட தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்லாமல் ஆசீர்வாதத்துடனேயே மரித்துப்போயினர். உலகத்தார் பார்வையில் 'திரளான ஆஸ்திகளைச் சேர்த்துவைத்திருக்கும் ஐசுவரியவானைப் போல அத்தகைய மனிதர்கள் காட்சியளித்தாலும், ஆண்டவரின் பார்வையிலோ, ஒரு ஆத்துமாவைக்கூட சம்பாதித்திராத தரித்திரர்களாகவே காட்சியளிப்பர். 'மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்? (லூக் 12:20) என்று உலகப்பிரகாரமான ஆஸ்திகளை வைத்திருந்த ஐசுவரியவானைப் பார்த்து தேவன் கேட்டாரே; 'யாருடையதாகும்?' என்ற கேள்வியில், தனக்கென்று அந்த ஐசுவரியவான் ஒரு ஆத்துமாவைக்கூட சேர்த்துவைக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றார். 'நம்மைப் பாதுகாப்பது, அழைப்பை நோக்கி நாம் திரும்பிவரவே.' 'திரும்பிவரப்பண்ணுவேன்' என்று உறுதியாக யாக்கோபினிடத்தில் ஆண்டவர் கூறியிருந்தபோதிலும்; அழைக்கப்பட்ட தேசத்தை மறந்தவனாக, ஆசீர்வாதத்தின் மேலேயே குறிவைத்தவனாக அங்கேயே வாழ்ந்துகொண்டிருந்தான் யாக்கோபு.
ரெபெக்காள் தன்னுடைய சகோதரனாகிய லாபானுடைய வீட்டிற்கு யாக்கோபை அனுப்பியபோது, உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு. உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள்அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரேநாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள் (ஆதி 27:44,45). 'நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்' என்று ரெபெக்காள் சொன்னபோதிலும், அவளால் அந்தக் காரியத்தினைச் செய்ய இயலவில்லை; திரும்பிவரும்படி யாக்கோபினிடத்திற்கு அவள் ஆள் அனுப்பவும் இல்லை. என்றபோதிலும், 'திரும்பிவரப்பண்ணுவேன்' என்று சொன்ன கர்த்தரோ யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் 'நீ திரும்பிப்போ'; நான் உன்னோடேகூட இருப்பேன் (ஆதி 31:3) என்று அழைக்கின்றார்.
இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்கு நேராக அழைத்துச்செல்லப்படவேண்டியவர்கள்; என்றாலும், அவர்களோ எகிப்திலே, பார்வோனின் கைகளின்கீழ் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ளும் வலிமையற்றவர்களாக அவர்கள் காணப்பட்ட நிலையில், அவர்கள் மீது மோசேயை தலைவனாக ஏற்படுத்தி, அடிமைத்தன எல்லையை உடைத்து கானானின் எல்லையை நோக்கி நடத்தினார் ஆண்டவர். அழைக்கப்பட்ட தேசத்தை நோக்கியே தாங்கள் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள இயலாதவர்களாக, பாதையில் உண்டான தேவைகளுக்கெல்லாம் பார்வையை எகிப்தை நோக்கித் திருப்பியபோது; பாதையிலேயே அவர்கள் புதைக்கப்பட்டுவிட்டனரே.
அழைக்கப்பட்டவர்களை சத்துரு அடைத்துவைத்துவிட முடியாது. தேவனுடைய வார்த்தைகளையும், அடைப்பினைத் தகர்க்க தேவனால் அனுப்பப்படும் ஊழியர்களையும் புரிந்துகொண்டால், எல்லையை விட்டு வெளியேறி, மீண்டும் அழைப்பின் உள்ளே நாம் பிரவேசித்துவிட முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக