துணையா? துக்கமா?
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள். (ஆதி 29:31)
பிரியமில்லாதவைகளின் மீது நாம் காட்டும் குணத்தின் பிரதிபலனினால், பிரியமானவைகளில் நமக்கு பலன் இல்லாமற்போய்விடக்கூடும், பழியாகவும் பிரதிபலிக்கக்கூடும். மனம் விரும்பாதவைகளாயிருந்தாலும், மடியில் கொடுக்கப்பட்டுவிட்டால் மனம் திரும்பியே ஆகவேண்டும். ஐசுவரியவான்களுக்கு வாசல்களைத் திறந்து, தரித்திரர்களையோ வாசலுக்கு வெளியே துரத்திவிடும் உலகத்தார் ஒருபுறமிருக்க, ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றவர்களையோ அற்பமாக எண்ணிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுபுறத்தில் வாசல் அடைபட்டுவிடுகிறது என்பதே வேதம் போதிக்கும் பாடம். பணமோ, பொருளோ, அழகோ, பதவியோ அல்லது அந்தஸ்தோ எதுவாயிருந்தாலும், நம்மிடத்தில் இருப்பவைகளைக் கொண்டு, இல்லாதவர்களை நாம் அற்பமாக எடைபோட்டுவிடக்கூடாது.
யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறின படியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் (ஆதி 29:21) என்று கேட்டபோது, அன்று இரவிலே அவன் (லாபான்) தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் (யாக்கோபினிடத்தில்) விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான் (ஆதி 29:24,25). ஏமாற்றப்பட்டதை மாமனிடத்தில் கேட்டது தவறல்ல; என்றாலும், லேயாளை யாக்கோபு அற்பமாக எண்ணினதினிமித்தம், ராகேல் கர்ப்பமாவதை ஆண்டவர் தடுத்தார். 'ராகேலை' மணந்துகொண்டது தவறல்ல; ஆனால், குறைவோடிருக்கும் 'லேயாள்' மனமடிவாகும்படி அற்பமாக எண்ணிக்கொண்டிருந்தது அவனது வாழ்க்கைக்கே தடையாகிவிட்டது. கர்ப்பவதியான ஆகார் மலடியாயிருந்த சாராளை அற்பமாக எண்ணினதைப் போல (ஆதி 16:5), ராகேலும் மலடியிருந்து அற்பமான நிலைக்குத் தள்ளப்பட்டாள். துணையைத் தேடும் மக்கள், யாருக்கும் துக்கத்தை வருவித்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருப்பது நல்லது.
தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான் (2 சாமு. 13:1), ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான் (2 சாமு. 13:2), அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படிக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் (2 சாமு 13:6) என்று தன் தகப்பனும் ராஜாவுமான தாவீதினிடத்தில் கேட்டான். பணியாரங்களைச் சுட்டு, அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான் (2 சாமு 13:11). பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான் (2 சாமு. 13:14); பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான் (2சாமு 13:15). மேலும், தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான் (2சாமு 13:17). உள்ளே வரவழைப்பதற்கு யோனதாப்பின் ஆலோசனையின்படி, ராஜாவை பயன்படுத்தினான்; வெளியே விரட்டுவதற்கோ வேலைக்காரனைப் பயன்படுத்தினான்.
ஏறக்குறைய யாக்கோபின் நிலையும் இதற்கு ஒத்ததாகவே காணப்படுகின்றது. இரவிலே லேயாளோடு சேர்ந்துவிட்டு, காலையிலோ அவளை வெறுத்தான், அற்பமாக எண்ணினான். இத்தகைய நிலையில் வாழும் மனிதர்கள் இன்றும் உலகத்தில் ஏராளம் உண்டு. குடும்பங்கள் பல குலைந்துபோனதற்குக் காரணம் இதுவே. திருமண நாளன்று திருப்தியானவர்கள் போல மேடையில் காட்சியளிக்கும் பலரது பயணம், பாதியில் எதிரெதிர் துருவங்களாகத் திசைதிரும்பி நிற்கின்றன. சாராளை அற்பமாக எண்ணின ஆகார் (ஆதி 16:4) அங்கிருந்தே விரட்டப்படவேண்டியதாயிற்றே. இருக்குமிடத்தில் நிலைத்து நிற்கவும், விருப்பமானவைகளிலிருந்து பலனைப் பெற்றுக்கொள்ளவும் அற்பமாக எண்ணும் எண்ணம் நம்மிலிருந்து அகன்றுபோகட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக