வெள்ளி, 15 அக்டோபர், 2021

இஸ்ரவேல் இரண்டு அர்த்தங்கள் (ஆதி 32:22)

 இஸ்ரவேல் இரண்டு அர்த்தங்கள்



கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவது மாத்திரமல்ல; கிறிஸ்துவை எதற்காக உபயோகித்துக்கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமானது. லாபானுடைய வீட்டிலிருந்து யாக்கோபு புறப்பட்டபோது, இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான் (ஆதி 32:22). எல்லாரையும் ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தும்வரை அவனும் உடன்சென்றான்; எனினும், அக்கரையிலிருந்து அவர்களை தொடர்ந்து பயணிக்கும்படி அனுப்பிவிட்டபோது, யாக்கோபோ பிந்தித் தனித்திருந்தான். ஆசீர்வாதத்திற்காக தொடைச்சந்து சுளுக்கும்வரை (ஆதி. 32:25) ஆண்டவரோடு போராடிக்கொண்டிருந்தான் யாக்கோபு. அப்போதைய சூழ்நிலையில், ஆசீர்வாதத்திற்காக மாத்திரமே யாக்கோபு தன்னைச் சார்ந்திருப்பதை அறிந்த ஆண்டவர், 'நான் போகட்டும்' (ஆதி. 32:26) என்றார். எனினும், 'நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்' என்று யாக்கோபு சொன்னபோது, அவனது பெயரைக் கேட்ட தேவன், 'இனி உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே' என்றார் (ஆதி 32:28). ஆசீர்வாதத்திற்காகவே ஏசாவினிடத்திலும் போராடி மேற்கொண்டான்; அவ்வாறே, ஆசீர்வாதத்திற்காகவே தேவனிடத்திலும் போராடி மேற்கொண்டவன் யாக்கோபு.  

யாப்போக்கு ஆற்றின் அருகிலேயே யாக்கோபின் பெயர் 'இஸ்ரவேல்' என்று மாற்றப்பட்டுவிட்டது (ஆதி. 32:28); எனினும், யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு மீண்டும் இஸ்ரவேல் என்று பேரிடுவதின் (ஆதி 35:10) நோக்கம் என்ன? அர்த்தம் என்ன? தொடர்ந்து வரும் வசனங்கள் அதற்கான விளக்கங்களை நமக்குப் போதிக்கின்றனவே. 

பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி, தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார் (ஆதி 35:11-13). இந்த சந்திப்பின்போது, யாக்கோபு தேவனை போகவிடாமல் பிடித்துவைத்திருக்கவில்லை. எனினும், 'இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும்' என்று மீண்டும் ஒருமுறை ஆண்டவர் அவனிடம் அறிவிப்பதன் நோக்கம், 'இஸ்ரவேல் என்னும் பெயர் ஆசீர்வாதத்திற்கானது அல்ல; மாறாக, நீ பலுகிப் பெருகுவதற்காகவே' என்பதை யாக்கோபுக்கு உணர்த்துவிப்பதற்காகவே. 

இன்றும், அநேக கிறிஸ்தவர்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அழைத்துவரப்பட்டு, ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டாலும், அனுதின வாழ்க்கையிலோ முதல் தரமான இஸ்ரவேலர்களாகவே முடங்கியிருக்கின்றனர். தேவனை வழிமறித்து, எப்படியாகிலும்  வாழ்க்கைக்குத் தேவையான ஆசீர்வாதங்களை பரத்திலிருந்தும், அவரது கரங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும், 'ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே அவரைப் பின்பற்றுகிறவர்களாகவுமே' தங்கள் பயணத்தை அவர்கள் மாற்றிவிட்டனர். தாங்கள் இஸ்ரவேலர்களாக மாறினது, 'தேவனோடு போராடி பெற்றுக்கொள்வதற்காகவே' என்ற தவறான திசையிலேயே தினம் தினம் அவர்கள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். அநேக ஊழியர்களும்கூட ஆசீர்வாதத்திற்காகப் போராடும்படியாகவே ஆத்துமாக்களைத் தூண்டிவிடுகின்றனர். இத்தகையோரின் ஆத்துமதாகம் ஆசீர்வாதங்களோடு நின்றுபோய்விட்டது. சரீரத்தை அவரது சமுகத்தில் வற்புறுத்தியாகிலும், சரீரத்திற்கானவைகளையே பெற்றுக்கொள்ளவேண்டும் என்றே ஆண்டவரோடு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். 'உபவாசம்' என்ற பெயரில் ஜெபித்தாலும், உண்மையிலோ, 'பெற்றுக்கொள்வதே  வாழ்க்கையில் பிரதானமாகிவிட்டது.' ஆத்துமாக்கள் அவருடையதாகவேண்டும்; தேவனுடைய சந்ததி பெருகவேண்டும்; 'பலுகிப் பெருகுங்கள்' என்ற வார்த்தை விசுவாசிகளால் நிறைவேறவேண்டும்; 'இஸ்ரவேலர்' என்று இன்று நாம் அழைக்கப்படுவதின் நோக்கம் இதற்காகவே. புரிந்துகொண்டால், ஆசீர்வாதங்களுக்காக ஆண்டவரை மறிப்பதை விட்டுவிட்டு, நரகம் செல்லும் ஆத்துமாக்களை மறித்து நிற்போம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக