புதன், 13 அக்டோபர், 2021

வீழ்ச்சியினால் வந்த ஆட்சி (ஆதி 1:28)

 வீழ்ச்சியினால் வந்த ஆட்சி



தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாகச் செயல்படும்படியாக, சத்துரு மனிதர்களை தினமும் தூண்டிக்கொண்டேயிருக்கின்றான். ஆண்டவருடைய கட்டளைகளிலிருந்து மனிதர்களுடைய பாதங்கள் அகன்று பயணிப்பதையே அவன் விரும்புகின்றான். அத்துடன், தனது வலையில் விழுந்துவிட்டோரின் முழு சக்தியையும் தனக்காகவே பிரயோஜனப்படுத்திக்கொள்ளவும் அவன் முயற்சிக்கின்றான். எனினும், மனிதர்களுடன் சத்துரு தொடுக்கும் ஒவ்வொரு போரிலும், பரத்தையும் அவன் எதிர்கொள்ளவேண்டும் என்பதும், பரத்திற்குச் சாதகமாகச் சாய்ந்து நிற்கும் மனிதர்களுக்கு போரில் வெற்றி பரிசாகும் என்பதும் வேதம் கூறும் சத்தியம். மனிதர்களை தேவன் படைத்தபோது, நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1:28). ஆனால், சத்துருவாகிய சாத்தானோ அத்திட்டத்திற்கு எதிர்த்து நின்றான். 'உலகத்தின் அதிபதியாகிய' (யோவான் 12:31; 14:30; 16:11) சாத்தான், தன் வசத்திலிருக்கும் உலகத்தின் மிதான ஆளுகையை மனிதர்களிடத்தில் இழந்துவிட ஆயத்தமாயில்லாததே அதற்குக் காரணம். கர்த்தரால் அடக்கம்பண்ணப்பட்ட மோசேயின் சரீரத்தைக் குறித்து தூதனாகிய மிகாவேலோடு பிசாசு தர்க்கித்துப் பேசினவனாயிற்றே (யூதா 1:9). இந்த மண்ணில் உள்ளவைகள் அனைத்தும் எனக்கே சொந்தம் என்று விண்ணுக்கு விரோதமாக வாதாடுகிறவன் சாத்தான். 

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவா 1:3) என்று யோவான் சுட்டிக்காட்டுகின்றாரே. அப்படியிருக்க, இயேசு கிறிஸ்துவை சோதித்தபோது, பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று உண்டாக்கினவருக்கு முன் நின்றுகொண்டு சொன்னானே (மத் 4:8,9). நீர் படைத்திருக்கலாம்; ஆனால், இப்போதோ பூமி என்னுடையதாகிவிட்டது என்று சொல்ல ஒருவேளை பிசாசு முயற்சித்தானோ! அல்லது படைத்தவரையே தன்னைப் பணிந்துகொள்ளும்படிச் செய்துவிட்டால், இனி இப்பூமி தன்னுடையதாகிவிடும் என்று எண்ணினானோ! பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது (சங் 24:1); என்றபோதிலும், மனிதனுடைய வீழ்ச்சியே பூமியின் மீது சாத்தானின் ஆட்சியை கொண்டுவந்தது. 

இன்றும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்விலும், ஏன்? ஊழியங்களிலும் மற்றும் சபைகளிலும்கூட தனது ஆளுகையின் கீழ் தொடர்ந்து இயங்கும்படியாகவே சில பகுதிகளை சத்துரு தக்கவைத்துக்கொண்டேயிருக்க விரும்புகின்றான். இதற்காகவே, தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட மனிதர்களை ஆங்காங்கே சபைகளுக்குள் உலாவவிட்டுவிடுகின்றான். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள் (2 தீமோ. 3:8) என்ற எதிர்க்கும் கூட்டத்தை உருவாக்கிவிடுகின்றான். வாசிக்கும் வேதவசனங்களையோ, கேட்கும் பிரசங்கங்களையோ இருளான அப்பகுதிகளின் மீது ஆளுகைசெய்யவிடாதபடி தொடர்ந்து கிரியைசெய்கிறான், சத்தியத்தைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி கதவுகளை சாத்திவிடுகின்றான். 

சரீரம் ஒளியைப்போலிருந்தாலும், இன்னும் சில அங்கங்களையோ இருளிலேயே இருக்கும்படியாகச் செய்துவிடுகிறான். அந்தரங்க மற்றும் மறைவான பாவத்தில் இருக்கும் பகுதிகளை தனது பாதுகாப்பிலேயே பத்திரமாக வைத்துக்கொள்ள விரும்புகின்றான். அப்பகுதியில் விதைக்கப்படும் விதைகள் பலன் தராதபடி பொறுக்கிவிடுகின்றான் (மத். 13:19). மோசேயின் சரீரத்தைக் குறித்து தர்க்கித்துப் பேசினதைப்போல, உயிரோடிருக்கும்போதே, 'அப்படிச் செய்வது தவறல்ல, இதெல்லாம் பாவமல்ல, இது சகஜம்தானே' என்று ஜனங்களின் சரீரங்களைக் குறித்து தர்க்கித்துப் பேசத் தூண்டிவிடுகின்றான். இத்தகைய தர்க்கத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டோர்களை, அனலுமில்லாத, குளிருமில்லாத வெதுவெதுப்பான வாழ்க்க்கைக்குள்ளும், வாந்திபண்ணப்படும் நிலைக்குள்ளும் தள்ளிவிடுகின்றான் (வெளி. 3:16). தலை நசுக்கப்பட்டிருந்தாலும் (ஆதி. 3:15), தலையீடு இருக்கவேண்டும் என்று விரும்புகின்றான். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக