திங்கள், 11 அக்டோபர், 2021

தாமதம் எதற்கு? (ஆதி 19:14,15)

 தாமதம் எதற்கு?


அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்களின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். (ஆதி 19:14,15)

  

'மற்றவர்களுடைய அழிவைக் குறித்து நாம் கரிசனைகொள்ளுகின்ற வேளையில், நாம் அழிக்கப்பட்டுவிடாதபடிக்கு ஆண்டவர் மிகுந்த அக்கறையுடையவராயிருக்கிறார்.' 'நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?' (ஆதி 18:18) என்று சொன்னதைப்போலவே, லோத்துவுக்கும் தான் செய்யவிருப்பதை வெளிப்படுத்தினார். 'விருந்திருனர்களாக வீட்டுக்குள் வந்தவர்கள், கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள்' என்பதையும், அவர்கள் மூலமாகச் தனக்குச் சொல்லப்படும் செய்தி நிறைவேறப்போகிறது என்பதையும் லோத்து நிச்சயமென நம்பியபோது, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரையும் காப்பாற்றும்படியாக அவன் எழுந்து சென்றான்; எனினும், 'மருமக்களின் பார்வைக்கோ மாமனார் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது' (ஆதி. 19:14). ஆண்டவரிடமிருந்து வந்த செய்தியை நம்பவும், தன்னோடு புறப்படவும் மருமக்கள் மறுக்கிறார்களே, குமாரத்திகளையும் விட்டுவிட்டுச் செல்லமுடியாதே, குமாரத்திகளின் திருமணமே நின்றுவிடுமே போன்ற சிந்தனைகள் லோத்துவை சற்று தாமதிக்கச் செய்திருக்கக்கூடும். என்றாலும், மருமக்கள்களுக்காக நீதிமானை அழிவிற்குள் விட்டுவிட தூதர்கள் ஆயத்தமாயில்லை. துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பது அவருக்குத் தூரமானது. எத்தனைதான் அருகிலிருந்து அறிவித்தாலும் வருகையோ ஒருநாள் நம்மை மனந்திரும்பாதோரிடமிருந்து பிரித்துவிடும்.   

இன்றும், கர்த்தரிடத்திலிருந்து நமக்கு கிடைக்கும் எச்சரிப்பின் சத்தத்தை கேட்டவர்களாக, வரவிருக்கும் அழிவினைப் புரிந்துகொண்டவர்களாக, மற்றவர்களுக்கும் அதனை அறிவிக்க நாம் முற்படும்போது,  அருகில் உள்ள ஜனங்களுக்கும், உடனிருக்கும் நண்பர்களுக்கும், வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், நம்மைக் குறித்து கேள்விப்படுகின்ற உலகத்தாருக்கும் முன் நாம் பரியாசம்பண்ணுகிறவர்களைப் போலவே காணப்படக்கூடும்; என்றாலும், மற்றவர்களின் மனந்திரும்பாமை நம்மைத் தாமதிக்கச் செய்துவிடக்கூடாது; நம்மையும் அழிவுக்குள் அகப்படச்செய்துவிடக்கூடாது. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 10:23) என்று இயேசு போதித்தாரே; இந்த வேகம் நம்முடைய வாழ்விலும் இருக்கட்டும்.

லோத்துவின் மருமக்கள்மாரைப் போல இன்னும் பலர் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வர இயலாததற்குக் காரணம் உள்ளத்தில் இருக்கும் உலகத்தின் ஆசைகளே; அவைகளே அவர்களது தாமதத்திற்கான காரணங்கள். எரிக்கப்படவிருப்பவைகளோடு, ஒட்டியிருந்தால் உடன்கட்டை ஏறவேண்டியதாகிவிடும். 

இன்று கர்த்தர் நம்மை அழைத்தால்; தாமதிக்காமல் புறப்பட்டுச் செல்ல நாம் ஆயத்தமா? கட்டிவைத்திருக்கும் வீடுகளை விட்டுவிட்டும், சேர்த்துவைத்திருக்கும் சொத்துக்களை தள்ளிவிட்டும், சேர்ந்து வாழ்ந்த சொந்தங்களைக் பிரிந்துவந்தும், உலகத்தின் சுகங்களை உதறிவிட்டும் தாமதிக்காமல் பரலோகத்திற்குப் புறப்பட நாம் ஆயத்தமா? ஒருபுறம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த சோதோம் மக்கள் இப்போதோ கதவைத் தேடிக்கொண்டிருக்க, மறுபுறமோ, மருமக்கள்மார்களையும் எப்படியாவது கூடக் கூட்டிச்சென்றுவிடவேண்டும் என்று இராமுழுவதும் லோத்து பிரயாசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்திருக்கக்கூடும். என்றாலும், 'ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை' என்ற நிலைதான் லோத்துவுக்கு உண்டானது. எத்தனைபேரை இன்று நம்மால் கூட்டிச்செல்ல முடியும். வீடே எரியப்போகின்ற நேரத்தில், வீட்டிலுள்ள பொருட்களை ஒழுங்குபண்ணுவதால் என்ன பயன்? அக்கினிக்கு இரையாகவிருப்பவைகளை அப்படியே விட்டுவிட்டு செல்வதுதானே சிறந்த முடிவாயிருக்கும்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக