சனி, 9 அக்டோபர், 2021

தகப்பனின் தியாகம் (ஆதி 37:5)

 

 தகப்பனின் தியாகம்


யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். (ஆதி 37:5)


சரீரப்பிரகாரமான தகப்பனோடு யோசேப்புக்கு நல்லதோர் உறவு இருந்ததைப் போல, பரலோகத் தகப்பனாகிய பிதாவோடும் அவனுக்கு நல்லதோர் உறவு தொடர்ந்துகொண்டேயிருந்தது. சகோதரர்களது துன்மார்க்கமான வாழ்க்கையை தகப்பனுக்கு யோசேப்பு அறிவித்;ததோடு மாத்திரமல்லாமல், பரம தகப்பன் தனக்கு வெளிப்படுத்தும் சொப்பனங்களையும் சகோதரர்களிடத்திலும், பெற்றோரிடத்திலும் சொல்லாமல் யோசேப்பு மறைத்துவைக்கவில்லை. 

ஒருபுறம், உலகப்பிரகாரமான தகப்பன் தைத்துக் கொடுத்த பலவருண அங்கியைக் கண்டு, உடன் பிறந்த சகோதரர்கள் பகையினை தங்கள் மனதில் வளர்த்துக்கொண்டிருந்தாலும், மற்றொருபுறம், பரமத் தகப்பன் யோசேப்புக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்த சொப்பனங்களைக் கேட்டும் சகோதரர்களது மனதில் பகை பற்றியெரிந்துகொண்டிருந்தது. சொப்பனத்தினிமித்தம் சகோதரர்கள் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள் (ஆதி. 37:5); அதுமாத்திரமல்ல, அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்று தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான் (ஆதி 37:9,10). சகோதரர்கள் மாத்திரமல்ல, உலகப்பிரகாரமான தகப்பனுக்கும், பரம தகப்பனின் வெளிப்பாடு வெறுப்பையே கொடுத்தது. இவ்விரண்டு சொப்பனங்களையும் யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் அறிவித்தபோது, அவர்களது மனதில் பகையையும், பொறாமையினையும் படரத்தொடங்கின (ஆதி. 37:11). சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்கப் போனபோது, யாக்கோபு யோசேப்பையும் உடன் அனுப்பாததற்கு இதுவும் ஓர் காரணமே. என்றபோதிலும், ஆடுகளை மேய்க்கும்படியாகச் சென்ற சகோதரர்களைக் குறித்த சிந்தை தகப்பனது மனதை நெருக்க நெருக்க, நேசிக்கும் யோசேப்பையும் பகைக்கும் சகோதரர்களிடத்திற்கு அனுப்பிவிட தகப்பனாகிய யாக்கோபு தயங்கவில்லை. உன்னை அவர்களிடத்துக்கு அனுப்புகிறேன், வா என்று தகப்பன் சொன்னபோது, இதோ, போகிறேன் என்றான் யோசேப்பு (ஆதி. 37:13) நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான் (ஆதி. 37:14). என்றபோதிலும், புரிந்துகொள்ளாத சகோதரர்களோ அவனைப் புதைத்துவிட நினைத்தார்களே. (ஆதி. 37:18)

இதனையே இயேசு கிறிஸ்துவும், அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினபோது, தோட்டக்காரர் அவனைக் கண்டு, இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள் (லூக் 20:13-15) என்று தனக்கு நடக்கவிருப்பதைக் குறித்து குறிப்பாகக் கூறினாரே.

நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்தது, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன் (நீதி. 8:30) என்ற உயர்ந்த ஸ்தானத்திலிருந்த இயேசு கிறிஸ்துவை, நம்மைச் சந்திக்கும்படியாக இந்த பூலோகத்திற்கு பிதா அனுப்பித்தந்தாரே. இயேசு கிறிஸ்துவின் சகோதரர்கள் என்ற ஸ்தானத்திற்கும் அத்துடன் பிதாவின் பிள்ளைகள் என்ற நிலைக்கும் உன்னதத்திற்கு நேராக நம்மை உயர்த்தவும், இழந்துபோன பிதாவின் அன்பினை திரும்பப் பெறவும், பிதாவுக்கும் நமக்கும் இடையிலிருக்கும் பிரிவினையைச் சரிசெய்யவும், பிதா நமக்காக வகுத்து வைத்திருக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்ளவும், பிதாவின் சித்தத்தை அறிந்து செயல்படவும், ஒரு வாழ்வினை இழந்தாலும், மறுவாழ்விலாவது மகிமையில் பிரவேசிக்கச் செய்யவும், தனது ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே இந்த உலகத்திற்கு பிதா அனுப்பித் தந்தாரே. நாம் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16). பிதாவின் அன்பில் களிகூர மாத்திரமல்ல, பிதா அனுப்பும் இடத்திற்குப் நாம் புறப்பட்டுச் சென்றால் மாத்திரமே, சகோதரர்கள் சந்திக்கப்படுவார்கள். சகோதரர்களைச் சந்திக்க நம் சரீரமும் தியாகமாகக்கூடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக