செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஏணி இருப்பது எங்கே? (ஆதி 28:13)

 ஏணி இருப்பது எங்கே?




அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். (ஆதி 28:13) 


அழைக்கப்பட்ட இடத்திலேயே அறுவடை இருக்கும். ஆபிரகாம் தன் ஊழியக்காரனை நோக்கி, நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போ என்றும், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று ஊழியக்காரன் கேட்டபோது, நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு (ஆதி 24:3-6) என்றும் உறுதியாகச் சொன்னான். ஆனால், ஈசாக்கோ யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான் (ஆதி 28:1,2). தன் தகப்பனாகிய ஆபிரகாம் விட்டுவந்த ஆரானுக்கே தன்னுடைய குமாரனாகிய யாக்கோபை ஈசாக்கு மீண்டும் அனுப்புகின்றான். 

யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டபோது, அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; 'நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்' (ஆதி 28:10-13) என்று ஆண்டவர் அவனுக்கு ஞாபகமூட்டினார். ஆரானை நோக்கிச் சென்றாலும், உனக்கும் உன் சந்ததிக்கும் சொந்த சேதம் நீ படுத்திருக்கும் பூமிதான் என்பதையே ஆண்டவர் யாக்கோபிற்கு உணர்த்தினார். கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூ ளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும் (ஆதி 13:14-16) என்று சொன்ன எல்லைக்குள்ளேயே யாக்கோபு படுத்திருந்திருக்கக்கூடும்; எனவே, 'நீ படுத்திருக்கிற பூமியை' என்று தெளிவாகக் கூறுகின்றார் ஆண்டவர். ஆபிரகாமுக்கு ஒரு பூமியை தருவேன் என்று வாக்களித்துவிட்டு, வேறொரு பூமியில் சந்ததியாகிய யாக்கோபு படுத்திருக்கும்போது அதைத் தருவேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கமாட்டாரே. 

அழைக்கப்பட்டபோது, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றான் பேதுரு (லூக். 5:11); ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோதோ, மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். பிற சீஷர்களும், நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை (யோவா. 21:3). அழைக்கப்பட்டபோது, எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான் பேதுரு; அப்படியென்றால், 'மீன்பிடிக்கப்போகிறேன்' என்று மீண்டும் சென்றபோது, அவனுக்கு படகு கிடைத்தது எப்படி? பின்னோக்கிச் செல்பவர்களுக்காகவும், மீன்பிடிக்கும்படியாக இன்றும் சில படகுகள் காத்திருக்கின்றன; ஆனால், அவைகளால் மீன்களைக் கொண்டுவந்துவிடமுடியாது. வஸ்திரம்கூட இல்லாத நிலையிலிருந்தான் பேதுரு. பின்னோக்கிச் சென்ற சீஷர்களைத் தேடி இயேசு கிறிஸ்து வந்தபோது அழைக்கப்பட்ட நாளைப்போல மீண்டும் வலை நிரம்பியது (லூக். 5:6); 'இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்' (லூக் 5:10) என்ற நிலை, 'என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக' (யோவா 21:15) என்று ஒருபடி உயர்ந்தது. பேதுருவின் பிரசங்கம் அநேகரை பரலோக ராஜ்யத்திற்கு நேராக இழுத்தது. பேதுருவின் வலை மனிதர்களால் நிரம்பியது. தருவேன் என்று கர்த்தர் சொன்ன தரிசன பூமியிலேயே ஏணி வைக்கப்பட்டிருக்கும். (ஆதி. 28:12)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக