ஞாயிறு, 10 அக்டோபர், 2021

திருப்தியாகவா? திரளாகவா? (ஆதி 17:5)

 திருப்தியாகவா? திரளாகவா?


இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். (ஆதி 17:5)

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். (ஆதி 17:15)


ஆசீர்வதிப்பதற்கு முன்பாக, 'ஆபிராம்' என்ற பெயரை 'ஆபிரகாம்' என்றும், 'சாராய்' என்ற பெயரை 'சாராள்' என்றும் மாற்றுகின்றார் ஆண்டவர். இந்த பெயர் மாற்றம் பெயரளவிற்கு அல்ல திரளாவதற்கு. நம்முடைய வாழ்க்கை அழைப்போடு கலந்திராவிட்டால், பிழைப்போடு அதனை திருப்தியாக்கிவிடவே நாம் முயற்சித்துக்கொண்டிருப்போம். நம்முடைய பிழைப்பைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை, சில நேரங்களில் அவரோடு வழக்காடுமளவிற்குக்கூட நம்முடைய பாதங்களை வழுக்கிவிடச்செய்துவிட முடியும்.    

எனவே, ஆசீர்வதிக்கும் முன்னதாக, ஆத்துமாவோடு கலந்துவிட விரும்புகின்றார் ஆண்டவர் என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டியது. ஆண்டவரது கரங்களிலிருந்து வரும் ஆசீர்வாதங்களுக்காகவும், வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் தங்களுக்காகவும் அவர் களமிறங்கவேண்டும் என்று விரும்புகிற மனிதர்கள் பலர், தங்களை நல்ல நிலமாக்க  அவருக்கு அனுமதியளிப்பதில்லை. தங்களோடு அவர் கலந்திருக்கவேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலேயே, முன்னேற நினைக்கும் மக்கள், தங்களுக்குத் தாங்களே முட்டுக்கட்டையாகும் வாய்ப்பினை பல்வேறு தருணங்களில் தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். சாலை மாத்திரமல்ல, சாலையில் பயணிக்கும் பேருந்தும் சரியாக இயங்கினால் மாத்திரமே பயணம் என்பதும், நியமித்த இலக்கினைச் சென்று சேருவது என்பதும் சாத்தியம். பாதை தெரிந்தும், அநேகருடைய பயணம் பாதியில் நின்றுபோனதற்கு காரணம் 'வாகனம்தான்' என்பது இப்போது புரிகிறதா? 

யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டபோது, பார்வோன் யோசேப்புக்கு 'சாப்நாத்பன்னேயா' என்கிற பெயரிட்டான் (ஆதி. 41:15). பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதாவின் புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களுக்கு பெல்தெஷhத்சார், சாத்ராக், மேஷhக், ஆபத்நேகோ என்று பெயரிட்டான் பாபிலோனிய பிரதானிகளின் தலைவன். 'யோசேப்பின் பெயர் மாற்றமோ' அல்லது 'தானியேல், அனனியா, மீஷhவேல், அசரியா என்பவர்களின் பெயர் மாற்றமோ' தேவனை அவர்களது வாழ்க்கையிலிருந்து மாற்றமுடியவில்லையே. ஆனால், இன்றோ, 'பாபிலோனியப் பெயர்களான சாத்ராக், மேஷாக்' போன்ற பெயர்களை மீண்டும் கிறிஸ்தவர்கள் வைத்துக்கொள்வது அதிர்ச்சியானதே. 'ஆபிரகாம்' என்று பெயர் வைத்துக்கொண்டு  'ஆபிராமாகவும்', 'சாராள்' என்று பெயர் வைத்துக்கொண்டு 'சாராயாகவும்', 'இஸ்ரவேல்' என்று  பெயர் வைத்துக்கொண்டு 'யாக்கோபாகவும்', 'பவுல்' என்று பெயர் வைத்துக்கொண்டு 'சவுலாகவும்' இன்னும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

பிள்ளையே இல்லாத நிலையிலிருந்த ஆபிராம், 'தான் தகப்பனானால் போதும்' என்ற குறுகிய எல்லைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருந்தான். இத்தகைய குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டிருந்த ஆபிராமின் குடும்ப வாழ்க்கையிலும் சீர்குலைவு உண்டானது. ஆகாரிடத்தில் ஒரு குமாரன் பிறந்துவிட்டபோது, போதும் என்ற மனதுடன், 'இஸ்மவேலுக்காகவே அவன் ஜெபித்துக்கொண்டிருந்தான்.' ஆனால், ஆண்டவரோ, 'திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக அவனை மாற்றும்' சித்தம் கொண்டிருந்தார். நாமும், அநேக நேரங்களில் குறுகிய எல்லைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்; 'வேண்டியது கிடைத்தால் போதும்' 'போதுமானது கிடைத்தால் போதும்' என்ற வேலிக்குள்ளேயே நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முற்படுகின்றோம்; ஆனால், ஆண்டவரோ, திராள ஜாதிகளுக்குத் தகப்பனாக நம்மை மாற்ற விரும்புகின்றாரே. கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன் (1கொரி 4:15) என்கிறாரே பவுல். திருப்தியாக அல்ல திரளாக முயற்சிப்போம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக