திங்கள், 11 அக்டோபர், 2021

அடங்கினால் அடக்கமில்லை (ஆதி 20:6)

அடங்கினால் அடக்கமில்லை


அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. (ஆதி 20:6)

  

'மனிதர்கள் தனக்கு விரோதமாகப் பாவம் செய்துவிடக்கூடாது' என்பதே தேவனது பிரதானமான நோக்கம். இதனைத் தகர்க்கும் எந்த ஒரு மனிதனையும் தேவ ஆலோசனையைத் தொடர்ந்து தேவ கோபமும் தாக்கும்' என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டியது. ஆபிரகாமும் சாராளும் பெலிஸ்தியரின் தேசத்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தபோது, அபிமெலேக்கு சாராளின் மேல் ஆசைகொண்டு, ஆள் அனுப்பி அவளை அழைப்பித்தான். சாராளினிடத்தில் 'சந்தோஷத்தை' அனுபவிக்கத் துடித்துக்கொண்டிருந்த அபிமெலேக்கின் வாழ்க்கையில் 'சாவு அருகிலிருந்தது.' தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே (ஆதி 20:3) என்றும், அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னாரே (ஆதி 20:7)

நாமும் அநேக நேரங்களில், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் சாவுக்குக் காரணமானவைகளை அடையாளங்கண்டுகொள்ளும் கண்களற்றவர்களாகவும், அத்தகைய ஆபத்திலிருந்து நம்மைத் தப்புவிக்கும்படியாக தேவனிடத்திலிருந்து வரும் ஆலோசனைகளைத் தள்ளிவிடுகிறவர்களாகவும் மாறிவிடுகின்றோம்; விளைவு 'அவருடைய சரீரத்தில்' அங்கமாயிருக்கும் நாம், செத்துவிழுந்துவிடுகின்றோம். வாழ்க்கையில் மரணம் நெருங்கிக்கொண்டிருப்பதற்கான காரணத்தை மறுபடியும் மறுபடியும் சொல்லியும் மனந்திரும்பாமற்போனால் மரணம் உண்டாகிவிடும்.

எலிசாவின் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டானபோது, தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான். ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள் (2இரா 4:38-40). இந்த நிலையே அபிமெலேக்கின் வாழ்க்கையிலும் காணப்பட்டது. அழகானவள் என்று நினைத்து அடைய நினைத்தபோது, அவனது வாழ்க்கையோ அவளாலேயே அடக்கம்பண்ணப்படவிருந்தது. இன்றும், பானையில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல், சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர் உண்டே. 

தேவனுக்கு விரோதமாக நாம் பாவம் செய்துவிடக்கூடாது. 'லஞ்சம் கொடுத்து வேலை வாங்கவேண்டும்' என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதா, சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்துவிட கையூட்டு கொடுக்கும்போதோ, நமக்குச் சாதகமாக காரியங்களைக் கைகூடிவரப்பண்ண பரிதானம் வழங்கும்போதோ, தீங்கு செய்துவிடாதபடியோ தேவன் நம்மைத் தடுக்கக்கூடும். என்றாலும், தேவனால் உண்டாக்கப்படும் அத்தடைகளை நாம் புரிந்துகொள்ள உணர்வற்றவர்களாக, தொடர்ந்து முன்னேறிச் செல்லும்போது, ஆலோசனை அளித்த அவராலேயே அடிகளை வாழ்க்கையில் வாங்கும் அளவிற்கு ஆளாகிவிடுவது உறுதி. 

'சாவை நோக்கி மனிதனை நகர்த்துவதே சத்துருவின் வேலை.' ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் (ஆதி 2:17) ஆண்டவர்; நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் (ஆதி 3:3) என்ற அறிவு ஏவாளுக்கு இருந்தபோதிலும், 'சாகவே சாவதில்லை' (ஆதி. 3:4) என்று சொல்லி ஏமாற்றிவிட்டான் சாத்தான். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் (ஆதி 3:19) என்று மனிதனின் மரணமும் மண்ணிலேயே அன்று உறுதிசெய்யப்பட்டது. உங்கள் பானையில் இருப்பது என்ன?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக