உடன்படிக்கையின் வலி
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். (ஆதி 17:2)
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.(ஆதி 17:10,11)
நோவாவோடு தேவன் உடன்படிக்கை செய்தபோது, 'உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியம், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்' (ஆதி. 6:18) என்றார். நோவாவோடு மாத்திரமல்ல, 'நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியோடும், உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்' (ஆதி 9:9,10) என்றார்; இந்த உடன்படிக்கையின் அடையாளமாக 'நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்' (ஆதி. 9:13) என்றார் ஆண்டவர். நோவா உடனான உடன்படிக்கை ஆண்டவரை மட்டுமே சார்ந்ததாகக் காணப்பட்டது.
ஆனால், ஆபிராமோடுடனான உடன்படிக்கையோ, சரீரத்தோடும் சம்பந்தப்பட்டதாயிருந்தது. 'இந்த தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன்' (ஆதி. 15:18-21) என்றும், உன்னை திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினேன்' (ஆதி. 17:4) என்றும் சொன்னதோடு நிறுத்திவிடவில்லை, 'இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்' (ஆதி. 17:9) என்றும், 'விருத்தசேதனத்தையே' உடன்படிக்கையின் அடையாளமாகவும் ஆக்குகின்றார் கர்த்தர்; இதன் காரணம் என்ன? 'திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்' என்று ஆண்டவர் சொன்னதற்குக் காத்திராமல் ஆகாரிடத்தில் ஆபிராம் பிரவேசித்ததே.
பார்வோன் ஆபிராமை நோக்கி: இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான் (ஆதி 12:19). அப்படியே, நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே (ஆதி 20:3) என்று அபிமெலேக்கை எச்சரித்தார் ஆண்டவர். ஆனால், ஆபிராமோ, அடிமைப்பெண்ணாகிய ஆகாருடன் ஆண்டவரது அனுமதியின்றி பிரவேசித்தான்; தாவீது பத்சேபாளைச் சேர்ந்தபோது அமைதியாயிருந்தாரே அதைப்போலவே, அறிந்தும் ஆபிராம் செய்த இந்த தவற்றின்போது அமைதியாயிருந்தார் ஆண்டவர். எனினும், அதற்கான வலியினை சந்ததி சந்ததியாகச் சரீரத்திலே சுமக்கச் செய்தார். விருத்தசேதனம் என்பது, ஆபிராம் தவறியதற்காகவும், ஆண்டவர் ஏற்றுக்கொண்டதற்காகவுமான ஓர் அடையாளம். தொண்ணூற்றொன்பது வயதான ஆபிரகாமும், பதின்மூன்று வயதான இஸ்மவேலும் ஒரேநாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்டது (ஆதி 17:24-26), காரணத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதே.
ஆபிராம் செய்த தவற்றை சந்ததியினர் புரிந்துகொள்ளும்வண்ணமாகவும், மீண்டும் செய்யாதிருக்கும்படியாகவும், அதனை நினைவுகூறும் வண்ணமாகவுமே வலியுடனான 'விருத்தசேதனம்' என்ற உடன்படிக்கை கொடுக்கப்பட்டது. எனினும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமோ, விருத்தசேதனத்தினின்றும் நம்மை விடுதலையாக்கினது.
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். (கலா 6:15)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக