திங்கள், 11 அக்டோபர், 2021

விலைக்கிரயம் (ஆதி 23:1,2)

 விலைக்கிரயம்


சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது. கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கிரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான். (ஆதி 23:1,2)

  

ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான் (ஆதி 21:34). அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார் (ஆதி 22:2). இந்தச் சோதனை, அழைக்கப்பட்ட ஆபிரகாமின் வாழ்க்கையில் புயலைப்போலத் தோற்றமளித்தாலும், பொன்னாகும்படியாகப் புடமிடுவதற்காகவே அது அனுமதிக்கப்பட்டது. தனது ஏகசுதனும், நேசகுமாரனுமான ஈசாக்கை தகனபலியாகப் பலியிட ஆபிரகாம் ஆயத்தமானது, அழைக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கான ஆயத்தமே. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமிதான்; என்றாலும், மனைவியாகிய சாராளின் மரணத்திற்குப் பின், ஆபிரகாமை சோதிக்கும்படியாக ஈசாக்கை தகனபலியாக ஆண்டவர் கேட்டிருந்தாலும் ஆபிரகாம் ஆயத்தமாகவே காணப்பட்டிருப்பான்; கர்ப்பத்தின் கனி அல்ல, கர்த்தருக்குக் கீழ்ப்படிவதே ஆபிரமின் ஆஸ்தியாயிருந்தது. ஆரம்ப நாட்களில், பஞ்சம் உண்டானபோது கானானை விட்டு எகிப்து தேசத்திற்குச் சென்றவன்தான் (ஆதி. 12:10); என்றாலும், பலனடைந்தபோதோ, பலியிடும்படியாக கானானுக்குள் நுழைந்தது அவனது கால்கள்.

சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான் (2நாளா 3:1). ஆபிரகாம் விலைக்கிரயம் செலுத்த ஆயத்தமான மோரியா மலையிலேயே கர்த்தருக்கு ஆலயம் கட்டப்பட்டது. கர்த்தருடைய ஆலத்திற்குரிய அஸ்திபாரம் விசுவாசத்தினாலும், தன் ஒரே குமாரனை தகனபலியாக ஆண்டவருக்கென்று ஒப்புக்கொடுத்ததினாலும் மோரியா மலையில் ஆபிரகாமினால் அன்றே போடப்பட்டது ஆச்சரியமானதே. 

கானானில் ஆபிரகாம் தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது, மனைவியின் மரணத்தைச் சந்திக்கவேண்டியதாயிருந்தது. கானானுக்குள் அபிரகாம் பிரவேசித்தபோது, 'நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி; உனக்கு அதைத் தருவேன்' (ஆதி. 13:17) என்றார் ஆண்டவர்; என்றபோதிலும், மனைவியைப் புதைப்பதற்குக் கூட கானான் தேசத்தில் ஆபிரகாமுக்கு இடம் இல்லாதிருந்தது. எனவே ஆபிரகாம் ஏத்தின் புத்திரரோடே பேசி: நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான் (ஆதி. 23:4). எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை (ஆதி 23:6) என்று, கிரயமில்லாமல் கல்லறையைக் கொடுக்க ஏத்தின் புத்திரர் ஆயத்தமாயிருந்தபோதிலும், கிரயத்திற்குக் கொள்ளாத கல்லறையிலே சாராளை அடக்கம் செய்ய ஆபிரரகாம் ஆயத்தமாயில்லை. 

இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும், அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது. அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையில் அடக்கம்பண்ணினான். இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது (ஆதி 23:17-20). சாராளின் மரணம் சொந்தமாக ஓர் நிலத்தை கானானிலே வாங்குவதற்குக் காரணமானதே. அவள் அழைக்கப்பட்ட நிலத்தில் விழுந்த விதையே. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக