ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கருவும் உறவும் (ஆதி 16:15,16)

 கருவும் உறவும்


ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதி 16:15,16)


கர்த்தருடைய தூதனானவர், ஆகாரை வனாந்தரத்திலே சூருக்குப் போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டபோது, அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக (ஆதி 16:7,11) என்றார்.  எனினும், 'நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு' (ஆதி. 16:9) என்று கர்த்தருடைய தூதனானவர் சொன்னதைக் கேட்டு ஆகார் திரும்பி ஆபிராமின் வீட்டிற்குச் சென்றபோது என்ன நடந்திருக்கும்? ஆபிராமின் மனைவியாகிய சாராயின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? 'தன்னுடைய கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருக்கிறார்' 'திறந்திருக்கும் அடுத்தவளுடைய கர்ப்பத்திற்குள் நுழைந்தாலும் அற்பமாக எண்ணப்படுகிறோம்' எனவே, பிள்ளையில்லாமலேயே வாழ்ந்துவிடுவோம் என்ற தீர்மானத்திற்குள்ளாக ஒருவேளை சாராய் வந்திருந்திருப்பாள். ஆண்டவரது திட்டத்திற்குக் காத்திராமல், ஆகாரிடத்தில் திட்டம் போட்டதினால் வந்த தோல்வி அது.

திரும்பி வந்தபோது, அடிமையாகிய ஆகார் அதிகாரத்துடன் மீண்டும் ஆபிராமின் வீட்டிற்குள் தானாகவே நுழைந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை, வாசலுக்கு வெளியே நின்றவளாக, 'வனாந்தரத்தில் இருந்தபோது, ஆண்டவர் போ என்று சொல்லிவிட்டார்' ஆனால், எஜமானின் வீட்டிலே யார் என்னை ஏற்றுக்கொள்ளுவார்? என்ற கேள்வியைச் சிந்தையில் சுமந்தவளாகவே காணப்பட்டிருப்பாள்.  ஒருவேளை சாராய் முதலில் சந்தித்திருந்தால், ஓடிப்போனவள் திரும்பிவந்துவிட்டாளே... என்று நினைத்திருப்பாள். முகத்தைச் சுழித்துக்கொண்டு சரட்டென கண்டும் காணாமற்போயிருக்கவும்,  ஆகாரை வீட்டிற்குள் அனுமதிக்கவேண்டாம் என்று ஆபிராமுக்கு சாராய் ஆலோசனை கொடுத்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஒருவேளை, சாராய் ஆகாரை நோக்கி: ஏன் திரும்பி வந்தாய்? என்று கேட்டிருந்தால், ஆகார் அதற்குப் பதிலாக: ஆண்டவர் என்னைப் போகச்சொன்னார் அதனால்தான் திரும்பி வந்தேன் என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்? 'ஆண்டவரா? உன்னிடம் பேசினாரா? நீ எகிப்தைச் சேர்ந்தவளாயிற்றே? நீ அடிமையாயிற்றே? யெகோவா எங்களிடத்தில்தானே பேசுவார் என்று சாராய் சொல்லியிருப்பாள். ஆனால், ஆபிராம்; ஆகாரை ஏற்றுக்கொண்டான். கருவோடு மாத்திரமல்ல, யெகோவா உடனான உறவோடு ஆகார் வந்திருக்கிறாள் என்பதை ஆபிராம் புரிந்துகொண்டான். ஆகாருக்கும் ஆண்டவருக்கும் இடையில் நடந்த முழு உரையாடலையும் ஆபிராம் கேட்டறிந்திருக்கக்கூடும், எனவேதான் 'தன் குமாரனாக' ஏற்றுக்கொண்டதுடன், ஆகாருக்கு ஆண்டவர் சொன்னதான 'இஸ்மவேல்' என்ற பெயரை ஆபிராம் இடுகிறான்; ஆகார் சொல்லாதிருந்தால், ஆபிராமுக்கு இந்த பெயர் எப்படி தெரிந்திருக்கும். 

நம்முடைய வாழ்க்கையிலும், 'மீண்டும் திரும்பிப் போ' என்று ஆண்டவர் சொல்லும்போது, நம்மை ஏற்றுக்கொள்ளும்படியான நிலையினையும் எதிர்முனையில் உண்டாக்குகின்றார். இளையகுமாரன் புத்தி தெளிந்தவனாகத் திரும்பி வந்தபோது, அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் (லூக் 15:20). பிள்ளையாகவே தகப்பன் அவனை ஏற்றுக்கொண்டான். அப்படியே, நம்மை விட்டுப் பிரிந்துபோனவர்கள், மீண்டும் வரும்போது அவர்களை நாம் எப்படி நடத்துகின்றோம்? எவ்வாறு வரவேற்கின்றோம்? ஆண்டவருடனான உறவே அவர்களைத் திருப்பிக்கொண்டுவந்திருக்கிறது என்று உணருகிறோமா? அல்லது பழைய கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோமா?

பார்வோனுடைய வீட்டில் மோசே வளர்ந்ததுபோல, எகிப்திய ஸ்திரீயாகிய ஆகாரின் வயிற்றில் ஆபிரகாமின் வித்து வளர்ந்தது. மோசேக்கு தாயைக் கொண்டே பாலூட்டியதைப்போல, தகப்பனைக் கொண்டே இஸ்மவேலுக்கு வேண்டியதைச் செய்தார் ஆண்டவர்; அவர் பட்சபாதமுடையவரல்ல.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக