திங்கள், 11 அக்டோபர், 2021

ஆசீர்வாதமா? ஆத்துமாவா? (ஆதி 24:29,30)

ஆசீர்வாதமா? ஆத்துமாவா?



ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான். அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான். (ஆதி 24:29,30)


ஊழியர்களாக இவ்வுலகத்தில் மணவாட்டிகளைத் தேடும் மகத்தான பணி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றபோதிலும், மதிக்கப்படவேண்டியவர் மணவாளவே என்பதை என்ற மனநிலை மறவாமலும் மாறாமலும்  நம்மிடத்தில் காணப்படவேண்டும். நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 13:20) என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாரே; அப்படியிருக்க, ஜனங்கள் நம்மை ஏற்றுக்கொண்டால் போதும் என்ற முதற்படியோடு நாம் நிறுத்திவிட்டால், யாருக்காக மணவாட்டியைத் தேடிச் சென்றோமோ, அவரிடத்திலிருந்து நாம் துண்டிக்கப்பட்டுவிடக்கூடும்; இறுதிப்படியில் நமது கால்கள் ஏறாது. ஊழியத்தின் பாதையில், மணவாளனுக்காகவே பெண்தேட நாம் அனுப்பப்பட்டிருக்கின்றோம்; மறாக, மணவாளனை மறந்து, மணவாட்டிகளாக்கவேண்டும் என்பதை மறந்து, மக்களோடு சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. இவர்களுடைய உபதேசங்கள் தன்னை அனுப்பின மணவாளண்டையும், பிதாவினண்டைக்கும் மக்களைக் கொண்டு சேர்ப்பதில்லை; மாறாக, மக்களை சந்தோஷப்படுத்துவதிலும், மக்களுடைய சந்தோஷத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதிலுமே தீவிரமாயிருக்கும். 

  தண்ணீர் கொடுத்தேன் என்பதைச் சொன்னதினால் அல்ல, தன்னிடம் ஆபிரகாமின் ஊழியக்காரன் கொடுத்ததைச் சொன்னபோது, ரெபேக்காளின் சகோதரனாகிய லாபான் துரவண்டைக்கு அவனைத் தேடிவந்தான். ஒருவேளை ரெபேக்காள் தண்ணீர் மட்டும் கொடுத்துவிட்டு, ஆபிரகாமின் ஊழியக்காரன் பதிலாக எதுவும் ரெபேக்காளுக்குக் கொடுக்காதிருந்திருந்தால் ரெபேக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரனை ஒருவேளை மறந்திருக்கக்கூடும்; ஆனால், அவன் கொடுத்த ஆசீர்வாதங்கள் அவளது சகோதரனை ஊழியக்காரனைத் தேடும்படிச் செய்தது. இன்றோ, துரவண்டைக்கு பலமுறை சென்றுவந்தாலும், 'தாகமாயிருக்கிறேன்' என்ற மணவாளனின் சத்தத்தைக் கேட்காமலும், அவர் கரங்களிலிருக்கும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளாமலும் வந்துவிடும் ஜனக்கூட்டம் உண்டே. அப்படியே, ஆசீர்வாதத்தைக் கண்டதினால் மாத்திரமே  மீண்டும் ஆண்டவரைத் தேடும் ஜனமும் உண்டே. 

'கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன்' என்று ரெபேக்காளின் சகோதரனாகிய லாபான் ஆபிரகாமின் ஊழியக்காரனை அழைத்துச் சென்றதோடு, ஆபிரகாமின் ஊழியக்காரனுடைய ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான் (ஆதி 24:31.32). ஒருவேளை அதுவரை ஆபிரகாமின் ஊழியக்hகரனைத்தான் ஐசுவரியமான ஓர் மனிதனைப்போல ரெபேக்காளின் வீட்டார் மதித்திருக்கக்கூடும், பார்த்திருக்கக்கூடும். அதனைத் தொடர்ந்து அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டபோது, 'நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன்' (ஆதி. 24:33) என்றும், 'நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்' (ஆதி 24:34) என்றும் தன்னை அறிமுகப்படுத்தினபின்னரே. மணவாட்டிகளைத் தேடும் நமக்கு எத்தனை மதிப்புகள், மரியாதைகள் கிடைத்தாலும், அவைகளை நம்முடையதாக்கிக்கொள்ளாமல், இப்படியே நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே (1கொரி 3:5) என்ற பவுலின் குணம் நம்மிலும்பரவட்டும். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் (யோவா 3:30) என்ற யோவானின் வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையாகட்டும். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக