துரவுகள் தொடரட்டும்
அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது. (ஆதி 26:32,33)
தொடரும் தடைகளைக் கண்டு, முன்னேறிக்கொண்டிருக்கும் பயணத்தையே பலர் முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவதுண்டு. தடைகளைத் தாங்கும் பெலன் இல்லாததினாலும், தடைகளைத் தாண்டிச் செல்லும் பாதை தெரியாததினாலும், தடைகளைத் தொடரும் விடை என்ன? என்பதை வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து அறியாததினாலும், தடைகளைத் தகர்ப்பவரே உடனிருக்கிறார் என்பதை உணராததினாலுமே இன்றும் பலருடைய ஆவிக்குரிய பயணங்கள் பின்வாங்கிய நிலைக்குப் போய்விட்டன. பாதங்கள் இடறும்படியான இடையூறுகளைக் சத்துருக்கள் கொண்டுவந்து வைத்தாலும், தொலைதூரத் தரிசனத்தோடு பயணிப்போரின் கண்களோ இடையூறுகளிலேயே தொலைந்துபோய்விடுவதில்லை; மாம்சத்தில் காயங்கள் உண்டாகிவிட்டாலும், தரிசனத்தின் பாதையில் திடமாய் நிற்போரின் ஆவிக்குரிய கண்களோ, தரிசனத்தின் திசையை நோக்கிப் பயணிப்பதிலேயே நிலைகொண்டிருக்கும்.
ஈசாக்கிற்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள் (ஆதி 26:14,15). மீண்டும் ஈசாக்கின் வேலைக்காரர்கள் துரவுகளைத் தோண்டினபோது, கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணினார்கள். வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான் (ஆதி 26:20,21). பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான் (ஆதி 26:22). தன்னை விரோதிப்பவர்கள் எத்தனையாய் வாக்குவாதம் பண்ணிக்கொண்டேவந்தாலும், துரவு வெட்டுவதையோ ஈசாக்கின் வேலைக்காரர்கள் நிறுத்தவில்லை (ஆதி. 26:19,21,22); மனிதனுடைய வாழ்க்கையில் தண்ணீர் என்பது தவிர்க்க இயலாததாயிற்றே. தொடர்ச்சியான முயற்சியினால் 'ரெகோபோத்' உண்டாயிற்றே.
அப்படியே, பவுலும் தடைகளைக் கண்டு நின்றுவிடவில்லை. அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள் (அப் 17:16-18). ஞானிகளில் சிலர் வாக்குவாதம் செய்தபோதிலும், பவுல் தொடர்ந்து கிறிஸ்துவை அறிவித்துவந்தான். வாக்குவாதங்களினால், பவுல் தனது வாயை மூடிக்கொள்ளவில்லை.
இன்றும், எத்தனை வாக்குவாதங்களை நாம் சந்திக்க நேர்ந்தாலும், 'ஜீவ தண்ணீர் ஊறும்படியாக' (யோவான் 4:14, 7:38) விசுவாசத்தின் துரவை ஆத்துமாக்களின் மனதில் வெட்டவேண்டியது நமது கடமையல்லவா. வாக்குவாதங்களைக் கண்டு நாம் விலகிச் சென்றுவிட்டால், வயல்நிலமாகவேண்டிய ஆத்துமாக்கள், வனாந்தரமாகவே காட்சியளிக்கும், நீரூற்றுகளால் நிரம்பிக் காட்சிதரவேண்டிய நிலங்கள் வெட்டாந்தரையாகவே காட்சிதரும். இன்று நாம் ஒருவரிடத்தில் வெட்டும் துரவு அநேகருக்கு ஆசீர்வாதமானதாகவும் மாறக்கூடுமே. நம்மால் சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களிடத்திலிருந்து வழிந்தோடும் ஜீவதண்ணீரினால், அவர்களுடைய பாத்திரம் நிரம்பி வழிவதினால், (யோவா. 4:14, சங். 23:5) அருகிலிருக்கும் பலருடைய தாகம் தீருமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக