ஆத்துமாக்களே ஆஸ்தி
ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான். ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது, ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள். (ஆதி. 23:63-65)
'பெற்றுக்கொள்வதோடு மாத்திரமல்ல, அவர் விரும்பினதைச் செய்து முடித்தால் மாத்திரமே நம்முடைய ஆவிக்குரிய ஓட்டம் முற்றுப்பெறும்.' பெண் தேடும்படியாக ஆபிரகாம் தன் ஊழியக்காரனை அனுப்பிவைத்தபோது, பொன், வெள்ளி, விலையுயர்ந்த வஸ்திரங்கள் மற்றும் உச்சிதமான பொருட்களைக் கொடுத்து ஊழியக்காரனை அனுப்பிவைத்தான்; எஜமானின் அத்தனை நம்பிக்கைக்குப் பாத்திரவான் அந்த ஊழியக்காரன். தன்னுடைய வீட்டில் அந்த ஊழியக்காரனுக்கு இருந்த எல்லா பொறுப்புகளிலிருந்தும் அவனை விடுவித்து, 'பெண் தேடவேண்டும்' என்ற ஒரே நோக்கத்தோடு அந்த ஊழியக்காரன் அனுப்பப்பட்டான். தொலைத் தொடர்பு சாதனங்களோ அல்லது வசதிகளோ இல்லாத அந்நாட்களில், அனுப்பிவைத்த ஊழிக்காரன் எத்தனை நாட்களில் என்று திரும்பிவருவான் என்ற எவ்வித எதிர்பார்ப்புமின்றியே அவன் அனுப்பப்பட்டிருந்தாலும், அவனது வருகைக்காக ஒவ்வொரு நாளும் எஜமானாகிய ஆபிரகாம் ஆவலுடன் காத்திருந்திருக்கக்கூடும். ஆபிரகாம் மாத்திரமல்ல ஈசாக்கின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்திருக்கும்.
நம்முடைய ஆண்டவரிடத்திலும், நம்மைக் குறித்த இத்தகைய எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் இருக்குமே. சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக இவ்வுலகத்தினுள் அனுப்பப்பட்டிருக்கிற நாம், ஒவ்வொரு நாளும் யாரையாவது அவருக்காக ஆதாயப்படுத்தி அழைத்துவந்துவிடமாட்டோமா என்று அவர் காத்திருக்கின்றாரே.
இரண்டாவதாக, நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆஸ்திகள் அனைத்தும் இன்னும் மணவாட்டிகளை அவருக்காக அழைத்துக்கொண்டுவருவதற்காகவே. பெண்ணைத் தேடும் பணிக்காக நம்முடைய கரங்களில் அவர் கொடுத்திருந்த ஆஸ்திகளை கைகளில் எடுத்துக்கொண்டு, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நாம் அவரை எதிர்கொண்டு செல்வேண்டியதில்லை; மாறாக, புத்தியுள்ள கன்னிகைகளைப் போல எரிகிற தீவட்டிகளை கைகளில் ஏந்திக்கொண்டுசென்றால் போதுமானது (மத். 25:4). சாஸ்திரிகளைப் போல பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளத்துடன் அவரைச் சந்திக்கச் செல்லவேண்டிய அவசியமில்லை; மாறாக, சாட்சியுள்ள வாழ்க்கையுடன் அவரைச் சந்தித்தால் போதுமானது. மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை நாம் சந்திக்கும்போது, கலியான வஸ்திரம் நமக்குப் போதுமானது (மத். 22:11,12). மற்றவர்களை மணவாட்டிகளாக்கும் வசனத்தை அறிந்தும் நாம் தேடிச் சென்று அவர்களுக்கு அறிவியாமலிருந்துவிட்டால், கரியாணத்திற்கு கைவிடப்பட்டதற்கு நாம் காரணமாகிவிடக்கூடுமே.
அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது (மத் 25:14) என்று இயேசு கிறிஸ்து சொன்னாரே; ஆஸ்திகள் கொடுக்கப்படுவதின் ரகசியம் ஆத்துமாக்களைச் சம்பாதிக்கவே. ஆனால், ஒரு தாலந்தை வாங்கிய ஊழியக்காரனோ, எஜமான் திரும்பிவரும்போது, 'உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்' (மத் 25:25) என்று சொன்னானே. ஆபிரகாமின் ஊழியக்காரனோ அப்படிச் சொல்லவில்லையே. பயனற்ற நிலையில் பத்திரப்படுத்திவைக்கப்படுவதற்கு ஆஸ்திகள் நமக்குக் கொடுக்கப்படுவதில்லை. நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். என்றும், நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன் (2கொரி 12:14,15) என்றும் ஆவிக்குரிய வாரிசுகளுக்காக ஆஸ்திகள் செலவிடப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றாரே. ஆத்துமாக்களுக்காகச் செலவழிக்கப்படவேண்டிய ஆஸ்திகளை ஆசீர்வாதங்கள் என்ற பெயரில் நமக்கு நாமே செலவழித்துக்கொண்டு, நம்மை நாமே சிங்காரித்துக்கொள்ளக்கூடாது. ஊழியர்களாகிய நாம் மணவாட்டிகளோடு திரும்பிவந்தால், எஜமானின் மனம் திருப்தியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக