ஞாயிறு, 10 அக்டோபர், 2021

பரதேசியா? சுதேசியா? (ஆதி 17:8)

 பரதேசியா? சுதேசியா?


நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். (ஆதி 17:8)


சுதந்திரமாகக் கொடுக்கபடவிருக்கும் தேசத்தை ஆபிரகாம் வந்தடைந்திருந்தபோதிலும், ஆபிரகாமை 'பரதேசி' என்றே வர்ணிக்கிறார் ஆண்டவர். அந்நிய தேசத்தில் இருப்பதனையே 'பரதேசி' என்று அடையாளப்படுத்துகின்றது வேதம். ஆபிரகாமின் சந்ததி எகிப்து தேசத்திற்குச் செல்லவிருப்பதைச் சுட்டிக்காட்டும்போது, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய் (ஆதி 15:13) என்று சொன்னார். எகிப்து தேசத்தில் இருக்கும்போது உபயோகப்படுத்தப்பட்ட 'பரதேசி' என்ற பதம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தலும் உபயோகப்படுத்தப்படுகின்றதே! இதன் காரணத்தையே, இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள் (எபி 11:13) என்று எழுதுகின்றார் எபிரெய ஆக்கியோன். நாம் வைக்கப்பட்டிருக்கின்ற தேசத்தை கர்த்தருக்காகச் சுதந்தரிக்காத வரையில் நாம் வாழும் தேசத்தில் பரதேசிகளே. 

ஆபிரகாம் கானானை வந்தடைந்தபோது, கர்த்த அபிரகாமை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார் (ஆதி 15:7); என்றாலும், சுதந்தரிக்கவேண்டிய விசாலமான தேசத்தைக் குறித்து அல்ல, தனக்கு சந்ததி எப்போது உண்டாகும் என்பதற்குள்ளேயே முடங்கியிருந்தது ஆபிரகாமின் சிந்தை. 'சுதந்தரிக்கவேண்டிய தேசத்திற்கு' அல்ல, 'சுதந்தரவாளிக்கே' முக்கியத்துவம் கொடுத்தான் ஆபிரகாம். அந்நிய தேசத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுதான் ஆபிரகாமை ஆட்கொண்டிருந்தது. இன்றும், அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நமக்கே முக்கியத்துவம் கொடுப்போமென்றால், அழைக்கப்பட்ட தேசத்தை அந்நிய தேசமாகக் கருதிக்கொண்டிருப்போமென்றால் நாமும் அவரது பார்வையில் 'பரதேசிகளாகவே' காணப்படுவோம். நம்முடைய அழைப்பு ஆவிக்குரிய சந்ததிகளை உருவாக்கி, அச்சந்ததியினால் முழு தேசமும் ஆண்டவருக்குச் சொந்தமாகவேண்டும் அதுவே 'சுதந்திரம்'.  ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து (எபே 2:19) என்று பவுல் எழுதுவதின் ரகசியம் இதுவே. 

மேலும், 'நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது' (பிலி 3:20) என்கிறார் பவுல். அப்படியே, அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள் (1பேது 1:17) என்று எழுதுகின்றார் பேதுரு. அறிவிக்கப்படாத இடங்களும், அறிவிக்கப்படாத மக்களும் இன்னும் இருப்பார்களென்றால் அழைக்கப்பட்ட பரம கானானுக்காகவே காத்திருப்போமானால் பரலோகம் போகும்வரை நாம் பரதேசிகளே என்ற சத்தியமும் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.   பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் நாம்  பரலோகத்திற்குப் பரதேசிதான். பாவம் நிறைந்த உலகத்தில் பரதேசிகளாக பரிசுத்தவான்கள் வாழ்ந்துவிட முடியும்; ஆனால், பாவமான மனிதர்கள் பரலோத்தில் பரதேசிகளாக நுழைந்துவிடமுடியாது. ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக்கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் (யாத் 34:9) என்ற மோசேயின் ஜெபத்தின் அர்த்தம் இதுவே. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக