கடந்துபோகாத கிருபை
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். (ஆதி 18:3)
ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து தன்னை அர்ப்பணித்தவனாகிய ஆபிரகாமுக்கு, ஆண்டவரின் கண்களில் கிருபை கிடைத்தபடியினால், 'அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்' என்ற வேண்டுதலுக்கு ஆண்டவர் செவிகொடுத்தார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது (சங் 103:11).
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே (புல. 3:22); எல்லா மனிதர்களையும் காப்பது அவரது கிருபையே; என்றாலும், இது கிருபையின் முதற்பரிமாணமே; விசுவாசிகளாகவேண்டும் என்ற விருப்பத்தினாலேயே இன்றும் இத்தகைய கிருபை வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனினும், அப்பொல்லோவைக் குறித்து எழுதப்பட்டபோது, 'அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்' (அப் 18:28) என்று கிருபையின் இரண்டாவது பரிமாணத்தை வாசிக்கின்றோமே. மேலும், கிருபையின் மூன்றாவது பரிமாணமாக, கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே 2:8) என்று எழுதுகின்றார் பவுல். இந்நிகழ்வுகள் தரும் செய்திகள் என்ன? ஆண்வர் நம்மீது காட்டும் கிருபையும், கொடுத்திருக்கும் கிருபையின் காலங்களும் அவர்மீதுள்ள விசுவாசத்திற்கு நேராக நம்மை வழிநடத்தவேண்டும் என்பதும்; அந்த விசுவாசம் நம்மை இரட்சிப்பினை அனுபவிக்கச் செய்து 'அடியேனை விட்டுக் கடந்துபோகவேண்டாம்' என்று உள்ளத்தையே அவருக்கு ஆலயமாக்கி அங்கேயே தங்கிவிட அவருக்கு இடமளிக்கவேண்டும் என்பதுதானே. கிருபையின் இத்தகைய நிலையினைப் புரிந்துகொள்ளாத பலர், வாசலில் நின்று தட்டிக்கொண்டிருந்தாலும் ஆண்டவருக்குக் கதவைத் திறக்காமல், அவரைக் கடந்துபோகச் செய்துவிடுகின்றனர்; விளைவு, 'இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை' (உன் 3:1,2) என்ற நிலையை தாங்களே தங்கள் வாழ்க்கையில் உருவாக்கிக்கொள்கின்றனர். எனவே இயேசு கிறிஸ்து, பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவா 9:4) என்று போதித்தார். இன்று வீதிக்கு வீதி சபைகள், வீட்டைத் தேடிவரும் ஊழியர்கள்; என்றாலும், கதவைத் தட்டும் கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்காவிட்டால், இராக்காலத்தில் 'சபைகளும், தேவ ஊழியர்களும்' கூட அப்படிப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய முடியாது. எனவே, வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார் (சங் 24:7). இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2கொரி 6:2). நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3:19,20) என்கிறார்.
நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது (உன் 5:2) என்று பனியும், தூறலும் பொழிந்துகொண்ருக்கும் இரவிலே, மணவாட்டியாகிய நமது வீட்டைத் தேடி அவர் வருவதன் காரணம் என்ன? அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அல்ல, நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக