சனி, 9 அக்டோபர், 2021

காவலாளி (ஆதி 37:2)

 

 காவலாளி


யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.  (ஆதி 37:2)


ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் உணர்ந்துகொள்வோமென்றால், வழியெங்கும் வீணானதைப் பரப்பிக்கொண்டேயிருக்கமாட்டோம். துன்மார்க்கருடைய ஆலோசனையில்

நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1:1,2) என்பது, பிதாவோடு இருக்கும் பிள்ளைகளுக்கு வேதம் தரும் வழிகாட்டுதல். என்றபோதிலும், பாதாளத்திற்கும், பரதீசிற்கும் இடையிலான பெரும்பிளப்பினை (லூக். 16:26) பூலோகத்திலேயே நாம் உருவாக்கிவிடக்கூடாது என்றும் வேதம் நமக்கு ஆலோசனை கூறுகின்றதே. 

எனவே பவுல், ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப் போகவேண்டியதாயிருக்குமே. நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது (1கொரி 5:11) என்றே எழுதுகின்றார். 

சுத்தமாகிவிட்டோம் என்பதினால் சுவிசேஷம் அறிவிக்காமல்  நாம் சென்றுவிடமுடியுமா? அசுத்தத்திலிருக்கும் பிறரையும்  அறைகூவல் விடுத்து சுத்தமாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்ந்துகொள்வது அவசியமல்லவா. காணாமல் போன ஆடுகளையும் தேடிச் செல்வதுதானே நல்ல மேய்ப்பனின் பொறுப்பு (மத். 18:12). யோசேப்பு பதினேழு வயதாயிருக்கும்போது, தன் சகோதரர்களுடனே கூட ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவனே; சகோதரர்களுடனேகூட ஆடுகளை மேய்க்கும்படியாகச் சென்றுகொண்டிருந்த நாட்களில், தன் தக்பபனுடைய மறுமனையாட்டிகளாகிய பில்கால் சில்பாள் என்பவர்களது குமாரர்களின் துன்மார்க்கத்தை யோசேப்பு தன் தகப்பனுக்குச் சொல்லிக்கொண்டுவந்தான் (ஆதி. 37:2). இன்றைய நாட்களில் இத்தகைய பொறுப்பு நமக்கும் உண்டு. துன்மார்க்கத்தைக் கண்டு, தூரமாகச் சென்றுவிடாமல், நமக்கென்ன என்று ஆவிக்குரிய நித்திரை கொள்ளாமல், விண்ணப்பத்தின் மூலம் அதனை பிதாவுக்கு தெரிவிப்பது பிள்ளைகளான நமது பொறுப்பு. 

இந்தப் பணியினையும் நாம் செய்வதற்காகவே, மற்ற குமாரர்களோடுகூட நாமும் ஆடுகளை மேய்க்க அனுப்பப்பட்டிருக்கிறோம். தன் ஆடுகைள மட்டும் மேய்த்துவிட்டு, எந்த ஓநாய்க்கும் இரையாகிவிடாமல் பத்திரமாக அவைகளைப் பாதுகாத்து, தகப்பனுடைய வீட்டிற்கே மீண்டும் கொண்டுவந்து விட்டுவிடவேண்டும் என்று, தனக்கு ஒப்புவிக்கப்பட்ட பணியில் மாத்திரம் கவனம் செலுத்துகிறவனாக யோசேப்பு காணப்படவில்லை; மாறாக, தன்னோடுகூட, உடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் மற்ற மேய்ப்பர்களான தன் 

சகோதரர்களையும் கண்காணித்துக்கொண்டேயிருக்கும் காப்பாளனான பொறுப்பு (எசே. 38:7) தனக்கு உண்டு என்பதை யோசேப்பு அறிந்திருந்தான். தனக்கு தகப்பனிடத்திலிருந்து கிடைக்கும் அன்பு போதும் என்று யோசேப்பு திருப்தியடைந்துவிடவில்லை; மாறாக, தகப்பனுடைய அன்புக்கு விரோதமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் சகோதரர்களைக் குறித்த கரிசனை அவனுக்குள் காணப்பட்டது.  

இன்றை நாட்களில், சகோதரர்களான பிற மேய்ப்பர்கள் செய்யும் துன்மார்க்கங்களையும் மற்றும் தவறுகளையும் உலகத்தின் திசையெங்கும் பறைசாற்றும் மனிதர்களே பெருகிவருகிறார்கள். அவர்களுக்காக விண்ணை நோக்கிப் பரிந்துபேசும் சகோதர மேய்ப்பர்களின் எண்ணிக்கை குறைவே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக