திங்கள், 11 அக்டோபர், 2021

வலைக்குள்ளே வாழ்க்கை (ஆதி 19:29)

வலைக்குள்ளே வாழ்க்கை


தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார். (ஆதி 19:29) 

 

லோத்து நீதிமான்தான்; என்றபோதிலும், சோதோமின் அக்கிரமக்கிரியைகளைக் கண்டும், கேட்டும் நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டும் அந்த இடத்தை விட்டு வெளியேற மனதில்லாமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தான். 'நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க' (2பேது. 2:8) என்று பேதுரு எழுதுகின்றபோதிலும், லோத்து இரட்சிக்கப்படுவதற்கு ஆண்டவரோடு ஆபிரகாம் போராடவேண்டியதாயிருந்தது (ஆதி. 18:23-33). ஆண்டவருடனான உரையாடலின்போது, லோத்து என்ற பெயரை ஆபிரகாமின் உதடுகள் உச்சரிக்கவில்லையென்றபோதிலும், 'லோத்தை மனதில் வைத்தவனாகவே' உரையாடலைத் தொடருகிறான் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார். ஆண்டவர் ஐம்பது என்று சொன்னபின், நாற்பத்தைந்து, நாற்பது, முப்பது, இருபது மற்றும் பத்து என்று ஆபிரகாம் சொல்வதன் அர்த்தம், ஒருவனாக சோதோமிற்குள் நுழைந்த லோத்து சில நீதிமான்களையாவது உருவாக்கியிருக்கமாட்டானா என்ற உள்ளர்த்தம் கொண்டதே. லோத்து யாரையும் நீதிமான்களாக அங்கே உருவாக்கவில்லை, தன்னைக் காத்துக்கொள்ளவே ஒருவேளை ஒருவேளை நேரம் அவனுக்குப் போதுமானதாயிருந்திருக்குமோ! தன்னுடைய ஆத்துமாவை பாதுகாப்பான இடத்தில் வைத்திராதவர்கள், ஆத்தும அறுவடை செய்வது கடினமானதே. 

சத்துருவின் கண்ணிகள் நீதிமான்களை ஒன்றும் செய்துவிடமுடியாது; ஆனால், நீதிமான்கள் தானாகச் சென்று சத்துருவின் கண்ணிகளில் சிக்கிக்கொள்வார்களென்றால், விடுவிக்கும் பொறுப்போ அவர்களுடையதாகிவிடும். 'பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்' (சக 2:7) என்ற வசனத்தின்படி செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள். கறைபடாமல் லோத்து தன்னைக் காத்துக்கொண்டிருந்தாலும், தன்னைத்தானே விடுவித்துக்கொள்ளவேண்டிய நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருந்தான்; எனினும், சோதோமின் சுகம் அந்த நினைவை அவனுக்குக் கொடுக்கவில்லை. தண்ணீரில் மிதக்கும் தாமரையைப் போலவும் அல்லது கடலில் இருக்கும் உப்பேறாத மீன்களைப் போலவும் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்; என்று எண்ணிக்கொண்டு, விடுவித்துக்கொள்ளவேண்டிய இடத்தினை விட்டுவிடாமல், அசுத்தத்திற்குள்ளேயே பரிசுத்தத்தைப் பாதுகாக்க முயன்றுகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். 

பல நேரங்களில் உலக மனிதர்களின் நிலையும் இதுவே. தங்களைத் தாங்களே வலைகளில் சிக்கவைத்துக்கொண்டு, 'விடுவிக்கும்படியாக ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டேயிருக்கின்றார்கள்.' போதை வஸ்துக்களிலும், சினிமாக்களிலும், தேவையற்ற வார்த்தைகளிலும் மற்றும் வாழ்க்கையிலும், உலகத்திற்கடுத்த பிற காரியங்களிலும் தங்களைச் சிக்கவைத்துக்கொண்டு, 'தாங்கள் வெளியேற மனதில்லாமல்,' வெளியேற்றும்படியாக தேவனை நோக்கி வேண்டிக்கொண்டிருப்பது வேடிக்கையானதே. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28:13) என்றல்லவோ வேதத்தில் வாசிக்கின்றோம். விட்டுவிடும் பொறுப்பு நம்முடையது; பாவத்திலிருந்து கழுவி விடுதலையாக்கும் பணியோ அவருடையது. 

யோசேப்பு அசுத்தத்தைக் கண்டதும், இது தான் வாழத் தகுந்த இடமல்ல என்பதைக் கண்டுகொண்டவனாக, தன்னைத்தானே காத்துக்கொள்ள, வீட்டை விட்டே வெளியேறினான். எனினும், சிம்சோனோ விழும்வரை வெளியேறவில்லை. அவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஓர் மனிதனே. கர்த்தருடைய பெலம் அவனிடத்தில் காணப்பட்டது; அத்தகைய பெலம் பிற மனிதர்களுக்கு அவனை வித்தியாசமாகவும் காண்பித்தது; என்றபோதிலும், தானாகவே சென்று வலையிலே வீழ்ந்துவிட்டான். தப்பிக்கொள்ளும்படியான தருணங்களையும் இழந்துநின்றான். முடிவு, சத்துருக்களோடு சேர்ந்து அழிந்துபோனான்.  நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? (1பேது 4:18) என்று பேதுரு எழுதுவது, உலகத்திற்குள் சிக்கிக்கொண்ட நீதிமான்களைக் குறித்துதானோ? 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக