உடைக்கப்பட அல்ல ஒட்டிக்கொள்ள
ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள். (ஆதி 31:16)
கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் (ஆதி 31:3) என்று சொன்னபோது, முதலில் தன் மனைவிகளாகிய ராகேலையும், லேயாளையும் அழைத்தே, தன்னுடைய நிலையினை விவரித்துக் கூறுகின்றான் யாக்கோபு. தனக்கு அவர்கள் மனைவிகளாயிருந்தபோதிலும், தகப்பனைக் குறித்து அவர்களுக்கு இருக்கும் மனநிலையினை அறிந்துகொள்ள யாக்கோபு முற்பட்டான். 'திரும்பிப்போ' என்ற தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, லாபானுடைய வீட்டை விட்டு வெளியேற யாக்கோபு ஆயத்தமானபோது, மனைவிகளான ராகேலும், லேயாளும் அதற்குச் சம்மதிப்பார்களா? என்ற கேள்வி ஒருபக்கம் யாக்கோபின் மனதில் எழுந்திருக்கக்கூடும். என்றபோதிலும், 'லாபான் உனக்குச் செய்த யாவையும் கண்டேன்' (ஆதி. 31:12) என்று யாக்கோபுக்குச் செய்யப்பட்ட அநீதியை தேவன் யாக்கோபுக்கு எடுத்துரைத்ததைக் கேள்விப்பட்ட ராகேலும், லேயாளும், தகப்பனால் தங்களுக்குச் செய்யப்பட்ட அநீதியையும் யாக்கோபினிடத்தில் எடுத்துரைக்கின்றார்கள்.
அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ? அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார். ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள் (ஆதி 31:14-16). 'அந்நியராக எண்ணப்படுகிறோம்' 'எங்களை விற்று' போன்ற கடினமான வார்த்தைகள், யாக்கோபின் மனைவிகளுக்கு தகப்பன் மீது இருந்த கனத்த இருதயத்தினையே வெளிப்படுத்துகின்றது.
இரண்டு மனைவிகளை வைத்துக்கொண்டு, அவர்களுக்குள் எழும் பிரச்சனைகளினால், இடிபட்டுக்கொண்டிருந்தான் யாக்கோபு. எனினும், லாபான் மூலமாக யாக்கோபுக்கு உண்டான பெரிய பிரச்சனை குடும்பத்தை ஒன்றாக்கினது. 'எங்களுக்கு' 'நாங்கள்' 'எங்கள்' 'நமக்கு' 'நம்முடைய' 'எங்களை' போன்ற வார்த்தைகள், அவர்கள் ஒன்றாகிவிட்டதின் உண்மையினையே எதிரொலிக்கின்றன. நம்முடைய வாழ்க்கையிலும், பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருவதன் காரணம் இதுவே. மேலும், மேலும் நாம் உடைக்கப்படுவது உருக்குலைந்து போவதற்கு அல்ல; மாறாக, உடைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் ஒட்டிக்கொள்ளும்படியாகவே சில பிரச்சனைகள் நமது வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகின்றன. இதனைப் புரிந்துகொண்டால், புலம்பமாட்டோம்.
மற்றொரு ஆவிக்குரிய உண்மையினையும் இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். பரம தகப்பனுடைய அழைப்பினைப் பெறும்போது அல்லது பெற்றவர்களுடன் இணைந்து பயணிக்கும்போது, உலகப்பிரகாரமான உறவுகளை விட்டுப் பிரியவும் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதே. 'நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்' (ரூத். 1:8) என்று நகோமி கூறினபோது, உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் (ரூத் 1:10) என்பதே மருமக்கள் இருவரின் மறுமொழியாயிருந்தது; என்றபோதிலும், வருங்கால வாழ்க்கையைக் குறித்தும் நகோமி விவரித்தபோது, ஓர்பாள் விலகிப்போனாள்; எனினும், ரூத்தோ தன்னுடைய தாய் வீட்டிற்குச் செல்லாமல், மாமியாகிய நகோமியையே விடாமல் பற்றிக்கொண்டாள். நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள் (ரூத். 1:16,17). பெற்றவர்கள் பெற்றோர்களே; எனினும், பாதங்கள் பரலோகத்தை நோக்கியே பயணிக்கவேண்டும்.
இன்றோ, அநேகர் பரலோகத் தகப்பனுடைய அழைப்பினைப் பெற்றபின்னும், தங்களுடைய உலகப்பிரகாரமான பெற்றோரை விட்டுப் பிரிந்துசெல்ல விரும்புவதில்லை; இந்த விருப்பம் அழைப்பிற்கு விரோதமானதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக