ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நம்பிக்கையா? நகைப்பா? (ஆதி 18:15)

 நம்பிக்கையா? நகைப்பா?


சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். (ஆதி 18:15)


சந்தோஷமானதோர் செய்தி சொல்லப்படும்போது, சந்தேகத்தின் மனநிலையோ அதனை மேற்கொள்ள முற்படுகின்றது. ஆண்டவர் வாக்குக் கொடுத்தபோது, முடிந்துவிட்டதையும், முதிர்வயதினையுமே (ஆதி. 18:11) சாராள் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்ததினால், நம்பிக்கைக்குப் பதிலாக நகைப்பு அவளது உள்ளத்தை நிறைத்தது. நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும் (நீதி 13:12); ஆனால், காத்திருந்து காத்திருந்து இளைத்துப்போய்விட்ட இருதயத்திலே, 'இனி நடக்குமா?' என்று சந்தேகத்தின் விதைகளைக் களைகளாக விதைத்து, இப்போது இருக்கும் நிலையினையே வாழ்க்கையின் இறுதித் தீர்ப்பாக எழுதிக்கொள்வது, ஆண்டவர் தனது வல்லமையினை நமது வாழ்க்கையில் விளங்கப்பண்ணுவதற்கு விரோதமானதாகவே காணப்படும்.  

'உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்' என்று ஆபிரகாமினிடத்தில் ஆண்டவர் சொன்னபோது, ஆபிரகாமும், ஆண்டவரும் பேசிக்கொள்வதைக் கேட்கும் தூரத்தில், அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில்தான் நின்றுகொண்டிருந்த சாராள்  (ஆதி 18:10) தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ (ஆதி 18:12) என்று உள்ளத்திலே சொல்லிக்கொண்டதை, தனக்கு முன்புறத்திலே நிற்கும் ஆபிரகாமினிடத்தில், 'சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?' (ஆதி 18:13) என்று சொல்லுகின்றார் ஆண்டவர்.  மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1சாமு 16:7) என்று சாமுவேலுக்கு தனது பார்க்கும் திறனைப் படிப்பிக்கின்றாரே ஆண்டவர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத்  தூரத்திலிருந்து அறிகிறீர் (சங் 139:2) என்பது தாவீதின் அறிதல். நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாமுக்கு சாராளின் சிரிப்பு தென்படவில்லை; காரணம், உதடுகளில் அல்ல, உள்ளத்திலேயே அது வெளிப்பட்டது. ஆனால், பின்புறமாக நின்றுகொண்டிருந்த ஆண்டவருக்கு சாராளின் சிரிப்பு மறைவாயிருக்கவில்லை. உள்ளத்தில் நகைத்து உதடுகளால் மறைத்துவிட முடியாது; அப்படியே, 'இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது' (ஏசா 29:13) என்ற வசனத்தின்படி, உதடுகளினால் ஆராதித்து உள்ளத்தையும் மறைத்துவிட முடியாது. உள்ளத்தின் உண்மை நிலையைச் சொன்னதும், 'நான் நகைக்கவில்லை' என்று உதடுகளால் மறுத்தாள் சாராள்; ஆனால், ஆண்டவரோ 'இல்லை நீ நகைத்தாய்' என்று தனது உதடுகளால் உறுதிசெய்தார். 'பொய்யுரையாதவரோடு பொய்யினால் போராடுவது கூடாதது.' 'நகைப்பை நீக்கும்படியாகவே' சாரளை நோக்கிப் பார்த்தார் 'ஆண்டவர். ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி' (லூக். 7:44) என்ற சம்பவத்திற்கு ஒத்த நிகழ்வே இது. 

ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் 'இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்' என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 3:9) என்றும், 'இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்' என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 19:40) என்றும் இயேசு கிறிஸ்து சொல்லுகின்றாரே. 'இனி இவர்கள் மனந்திரும்புவதற்குச் சாத்தியமில்லை' என்று நாமும் அநேக நேரங்களில் கடினமான மனிதர்களின் மனந்திரும்புதலைக் குறித்து நகைத்துக்கொண்டிருக்கக்கூடும். கற்களைப் போல நாம் நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களைக் கூட பிள்ளைகளாக மாற்றி தன்னை நோக்கிக் கூப்பிடச் செய்ய அவர் வல்லமையுள்ளவர்.  நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் (மத் 4:3) என்றான் பிசாசு. ஆனால், இயேசுவோ கல்லுகளைச் சாப்பிட அல்ல கூப்பிடச் செய்கிறார்; நம்பினால் இது நடக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக