தாவீதின் திறவுகோல்
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன். அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். (ஆதி 18:10,14)
இரண்டுபுறமும் வாசல்கள் பூட்டப்பட்டாலும், இருண்டதாகவே வாழ்க்கை மாறிவிட்டாலும், வானத்தின் வாசல் திறந்திருக்குமென்றால், வாழ்க்கையில் வெளிச்சம் எந்த நேரத்திலும் உதிக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி (சங் 139:12) என்பதே தாவீது அவரைக் குறித்து அறிந்துவைத்திருந்த அனுபவம். மேலும், கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ? (ஆமோஸ் 5:20) என்றும், கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம் (2 பேதுரு 3:10) என்றும் இருளிலும் பயணிக்கும் அவரது பாதத்தை வேதம் வெளிப்படுத்தகின்றதே. நம்முடைய வாழ்க்கையில் உண்டாகியிருக்கும் இருளான சூழ்நிலைகள், அவரது வருகையை ஒருபோதும் தடைசெய்துவிட முடியாது.
கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டால், நம்முடைய கண்களும் அக்கரையைப் பார்க்க இயலாதபடி வரையரைக்குட்பட்டதாகவே காணப்படும்; என்றாலும், இருளின் எல்லையைத் தாண்டி, ஆசீர்வாதத்தின் உள்ளே அழைத்துச் செல்கிறவர் ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வது, அவரை இன்னும் ஆனந்தம் வழிந்தோடும்படியாக வாழ்க்கையில் அனுபவிக்க வழிசெய்யும்.
சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள் (ஆதி 16:2); ஒருபுறவாசல்தான் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதை மனதில்கொண்டவளாக, அறிந்துகொண்டவளாக, அதனைத் திறக்கும் பெலனற்றவளாக, வாசலைத் திறக்க ஆபிரகாமை வற்புறுத்தி ஆகாருடன் இணைத்துவிட்டாள் சாராள். ஆனால், இப்பொழுதோ, ஆபிரகாம் என்ற அடுத்த வாசலும் அடைபட்டுவிட்ட நிலை. 'ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்' (ஆதி. 18:11); 'நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு' (ஆதி. 18:12) என்று சாராளே கூறும் நிலை. சாராள், செத்துப்போனவைகளையும், அடைபட்டிருப்பவைகளையுமே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் ஆபிரகாமோ, விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான் (ரோம 4:19)
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான் (ஏசா 22:22) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டதே. பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் அவர் (வெளி 3:7). அத்திமரம் கனிகொடாமற்போனாலும் (லூக். 13:7; ஆகாய் 2:19), துளிர்விடாமற்போனாலும் (ஆப. 3:17), ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் (ஏசா 11:1); ஈசாயென்னும் அடிமரம் துளிர்விடுவதை எவரும் தடுக்க முடியாது.
உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றும் (யோவா 8:56), ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றும் (யோவா 8:58) இயேசு சொல்லுகிறாரே. 'தாவீதின் திறவுகோலான, இயேசு கிறிஸ்து' என்றும் சாவி நம்மிடத்தில் இருந்தால், இருளான நம்முடைய வாசலுக்குள்ளும் அது ஒளியைக் கொண்டுவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக