வேரும் வேதனையும்
தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். (ஆதி 21:11,12)
கேட்கக்கூடாத நேரத்தில் சாராளின் வார்த்தையினைக் கேட்டு, கீழ்ப்படியக்கூடாத காரியத்தில் கீழ்ப்படிந்துவிட்டதால், அடிமைப்பெண்ணாகிய ஆபிரகாமோடும், அவளிடத்தில் பெற்றெடுத்த தன் குமாரனான இஸ்மவேலோடும் ஆபிரகாம் மறைமுகமாகக் கட்டப்படவிருந்தான். இன்னும் தொடர்ந்து ஆகார் ஆபிரகாமோடு இருந்திருந்தால், ஒருவேளை ஆகார் ஆபிரகாமுக்கு மேலும் சில குமாரர்களையும் மற்றும் சில குமாரத்திகளையும் பெற்றெடுத்திருக்கக்கூடும்; விளைவு, ஆகார் மற்றும் அவளது பிள்ளைகளின் பெலன் ஒருவேளை பலுகிப் பெருகியிருக்குமென்றால், அது சாராளை பலவீனப்படுத்தியிருக்கக்கூடும் அல்லது ஒடுக்கியிருக்கக்கூடும். ஆபிரகாமின் சந்ததியோடு சாராளுக்கு சம்பந்தமே இல்லாது போயிருக்கக்கூடும். அடிமைப்பெண்ணாகிய ஆகாருக்குப் பதிலாக சொந்த சரீரமான சாராள் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைகூட எதிர்காலத்தில் உருவாகியிருக்கக்கூடும்.
அதுமாத்திமல்லாது, ஆபிரகாம் சாராள் இவர்களது மன வாழ்க்கையிலும் விரிசலையே அது உண்டாக்கியிருக்கக்கூடும். ஏனெனில், ஆகார் சாராளை அற்பமாக எண்ணியபோது, சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும். என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்று சொன்னாளே (ஆதி. 16:4,5). 'நடுநின்று நியாயந்தீர்ப்பாராக' என்ற வார்த்தை, ஆபிரகாமும் சாராயும் மனதளவில் பிரிந்துநின்றதைத்தானே சுட்டிக்காட்டுகின்றது. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான் (சங். 7:15) என்ற நிலை சாராளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். இத்தனை பெரிய ஆபத்திலிருந்து ஆண்டவர் சாராளை பாதுகாத்தார். வேதனை வேர்விடும் முன்பதாக, அதனை நாட்டிய சாராளைக்கொண்டே தூரோடு அது தோண்டப்பட கர்த்தர் அனுமதித்தார். என்றாலும், ஆபிரகாமுக்கோ அது வேதனையாகவே இருந்தது. தேவையற்றவைகளை மற்றவர்கள் நுழைக்க நாம் இடங்கொடுத்துவிட்டால், அவர்களைக் கொண்டே பிடுங்க கர்த்தர் அனுமதிக்கும்போது, வேதனையை நாம் சகித்தேயாகவேண்டும்.
எனினும், ஆபிரகாமுக்கோ சாராளின் வார்த்தைகள் துக்கத்தைக் கொண்டுவந்தன. சாராளின் வார்த்தைக்குச் செவிகொடுத்துதான் ஆகாரை ஏற்றுக்கொண்டான் ஆபிரகாம். ஆகார் கருவுற்றிருக்கும்போது தொடங்கிய பிரச்சனை, சாராளின் வயிற்றில் ஈசாக்கு பிறக்கும் வரை தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. இஸ்மவேல் பிறக்கும்போது ஆபிரகாமின் வயது 86 (ஆதி. 16:16), ஈசாக்கு பிறக்கும்போதோ ஆபிரகாமின் வயது 100 (ஆதி. 21:5); இடைப்பட்ட 14 வருடங்களுடன், ஆகார் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள் (ஆதி 16:4) என்பதால், ஒன்பது அல்லது பத்து மாதங்களைச் சேர்த்து, ஏறக்குறைய 15 வருடங்கள் சாராள் மற்றும் ஆகார் ஆகியோருடன் பிரச்சனையுடனான குடும்ப வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு ஆபிரகாம் தள்ளப்பட்டான். எனவே, மீண்டும் சாராளின் வார்த்தையைக் கேட்க ஆபிரகாம் தயங்கிநின்றான்.
சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்று சொன்னபோது, சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான் (ஆதி 16:2); அப்பொழுது ஆண்டவர் ஆபிரகாமைத் தடைசெய்யவில்லை. ஆனால், ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்று (ஆதி 21:10) சொன்னபோதோ, 'சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்' என்றார் ஆண்டவர். அறிந்தும் தவறும்போது அமைதியாயிருந்தாலும், சரிவிலிருந்து மீளுவதற்கோ சரியான பாதையை காட்டத் தவறவில்லையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக