காவலாளி
அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். (ஆதி 19:6,7,9)
'பிறரைப் பாதுகாக்கும் பலவான்களை பாதித்துவிட சத்துரு பலவிதங்களில் பலமாகப் போராடுவான்.' விருந்தினர்களாக வீட்டிற்குள் இருக்கும் புருஷர்களை சோதோமின் மனிதர்களிடமிருந்து பத்திரமாகப் பாதுகாக்க லோத்து முயற்சித்துக்கொண்டிருந்தான்; தன்னுடைய வீட்டிற்குள் வந்துவிட்ட அவர்களுடைய வாழ்க்கையில் விரும்பத்தகாதவைகள் ஏதாகிலும் நேர்ந்துவிட்டால், சோதோமின் மீது மாத்திரமல்ல, தன்மீதும் அதற்கான பழி சுமந்துவிடும் என்று அவன் கவனமாயிருந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலை உண்டாகுமென்றால், வீட்டிற்குள்ளேயே விருந்தினர்களாக அவர்களை அனுமதித்திருக்கமாட்டேனே என்று, தன்னைக் காத்துக்கொள்ள, கதவைத் திறந்து சத்துருக்களை உள்ளே விட்டுவிடவில்லை; மாறாக, அவர்களைக் காக்க வாசலிலேயே நின்றுகொண்டான். 'உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால்...' (எபி 13:17) என்று எபிரேய ஆக்கியோன் எழுதுகின்றாரே. நம்மைக் குறித்து மாத்திரமல்ல, நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவர்களைக் குறித்தும் நாம் அவருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்ற சிந்தை நம்மில் பெருகுமென்றால், நாமும் பிறரைப் பாதுகாக்கும்படியாக இத்தகைய நிலைக்கு கடந்துவரமுடியும். இல்லையெனில், 'கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்' (யோவா 10:12) என்ற நிலயில் உள்ளயிருப்பவர்களையும் இழந்து நிற்போம்.
லோத்துவின் பாதுகாப்போ வாசலுக்கு வெளியே கேள்விக்குரியானபோதிலும், உள்ளே இருக்கும் புருஷர்களின் மீதான சத்துருக்களின் கவனம், லோத்துவின் மீது திரும்பினது. 'அவர்களுக்குச் செய்வதைப் பார்க்கிலும், உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம்' என்று அவர்கள் கொன்னது, 'இதுவரை உன்னை விட்டுவைத்தது தவறு' என்று அவர்கள் சிந்திப்பதையே சுட்டிக்காட்கின்றது. வாசலை அடைத்துக்கொண்டிருப்பவனை அகற்றி, வீட்டிற்குள் பிரவேசிக்க லோத்துவை நெருக்கினபோதிலும், லோத்து பின்வாங்கவில்லை. நாம் நமது பெலத்தை உபயோகப்படுத்தும்போது, சத்துருவும் தனது பெலத்தைப் பிரயோகப்படுத்துவான்; ஆனால், பதறவேண்டாம்.
அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம் (மத் 12:29) என்று சத்துருவைக் குறித்து இயேசு போதித்தைப் போன்றே, 'பலவானாகக் காணப்படும் மனிதர்களை' முந்திக் கட்டுவதற்கு சத்துருவும் முயற்சிக்கிறான். 'தாவீது' என்னும் வீரன் 'பத்சேபாளினாலும்', 'சிம்சோன்' என்னும் பராக்கிரமசாலி தெலீலாளினாலும்; கட்டப்பட்டார்கள். இன்றும், இப்படிப்பட்ட கயிறுகளை சத்துரு கைகளில் வைத்திருக்கிறான். எனவே சாலமோன், 'கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான் (பிர 7:26) என்று எழுதுகின்றான். பலவான்கள் பாவத்திற்குத் தங்களை விற்றுப்போடும்போது, கயிறுகள் பலவான்களின் கழுத்திலே சுற்றிக்கொள்ளுகின்றன. 'யோசேப்பு' தன்னைக் கட்டவந்த கயிற்றை விட்டோடியபோது, சிறையிலே பணியமர்த்தப்பட்டான் (ஆதி. 39:22); போத்திப்பாரின் மனைவியோ யோசேப்பைத் தொடமுடியாதபடி வீட்டிலே சிறையாகிப்போனாள்.
ஆத்துமாக்களை மறைத்து நிற்கும் நம்மை பல்வேறு பிரச்சனைகள் எதிர்த்து நிற்கலாம்; மந்தையை அழிக்க மேய்ப்பனை வெட்ட முயற்சிக்கலாம்; எனினும், நம்முடைய பாதுகாப்பு அவருடைய கைகளில் இருக்கிறது; 'உள்ளே வா' என்று பரலோகத்திற்குள் நம்மை அவர் இழுத்துக்கொள்ளும்வரை தொடர்ந்து போராடுவோம். பாதுகாப்பின் வேலியாய் நிற்போம்; நம்மைக் காக்க பிறரைப் பறிகொடுத்துவிடவேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக