வேண்டாம் வேடம் வேண்டாம்
சாபம் வரக்கூடும் என்று எண்ணுகிறபோதிலும், ஆசீர்வாதத்திற்காக வரிசையில் நிற்கும் மனிதர்கள் அநேகர். ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்ளுவேனே என்று சொன்னபோதிலும் (ஆதி 27:12); ஆசீர்வாதத்திற்காக கொண்டிருந்த ஆசை அவனை விட்டுவிடவில்லை. இன்றும், கர்த்தருக்கு முன்பாக இப்படிப்பட்ட நிலையிலேயே வந்து நின்றுகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். பாவத்தையும், பரத்துக்கு விரோதமான துரோகத்தையும் விட்டு மனந்திரும்பாமல், உள்ளத்திலேயே அவைகளை வைத்துக்கொண்டு, ஆசீர்வாதத்திற்காக வந்து நிற்கும் மனிதர்கள் உண்டு. இராப்போஜனத்திற்காக, பாவம் கழுவப்படுவதற்காகச் சிந்தப்பட்ட இரத்தத்தை, பாவியாகவே வரிசையில் நின்றுகொண்டு பருகுவதால், ஆசீர்வாதத்திற்குப் பதிலாக சாபத்தையே பெற்றுக்கொண்டவர்கள் அநேகர். (1கொரி 11:29,30).
தவறான இடங்களில் தலையைக் கொடுத்து, ஆசீர்வாதத்தைப் பெறுவதற்குப் பதிலாக, தலையெழுத்தையே தவறாக மாற்றிக்கொள்ளும் மனிதர்களும் இன்று ஏராளம். ஏசாவையே ஆசீர்வதிக்க நினைத்தவன் ஈசாக்கு; ஆனால், அந்த கைகளுக்கு கீழே யாக்கோபு தன் தலையைக் கொடுத்துவிட்டான். ஏசாவின் ஆடைகளை அணிந்துகொண்டதோடு மாத்திரமல்லாமல் (ஆதி. 27:15), வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை தன் கைகளிலும் கழுத்திலும் போட்டுக்கொண்டு, 'நான் உமது மூத்த மகனாகிய ஏசா' என்றும், 'நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசியும்' (ஆதி. 27:19) என்றும், 'உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார்' (ஆதி. 27:20) என்றும், எத்தனை பொய்களைச் சொன்னான் யாக்கோபு. இத்தனை பொய்களைச் சொன்னபோதிலும், ஆசீர்வாதங்கள் யாக்கோபின் வாழ்க்கையில் பொருந்தியது எவ்வாறு? ஆசீர்வாதங்கள் ஆண்டவரிடமிருந்தே வந்தது; 'மோசம்போக்கினவன்' (ஆதி. 27:36) என்ற பேர்தான் தந்தையிடமிருந்து வந்தது.
ஆசீர்வாதங்களைப் பெற மனிதர்களிடத்தில் நாம் அவசரம் காட்டவேண்டிய அவசியமில்லை; ஆண்டவர் மூலமாகவே அவை அருளப்படுகின்றன. அதனை பெற்றுக்கொள்ளப் பாத்திரமாக மாத்திரம் நாம் காணப்பட்டால் அதுவே நமக்குப் போதுமானது; என்றாலும், இதனை இன்னும் பலர் அறியாததினாலேயே, பிள்ளைகளாயிருந்தபோதிலும், ஆண்டவரைத் தேடி ஓடாமல், மனிதர்களையே தேடித் தேடி ஓடுகின்றனர். 'ஆசீர்வாதத்திற்குப் பாத்திரனாகத்தான் பிறந்திருந்தான் யாக்கோபு' என்றாலும், அது ஆண்டவரிடமிருந்து அல்ல 'மனிதனிடமிருந்தே கிடைக்கிறது' என்ற நினைவு ரெபெக்காளினிடத்தில் மேலோங்கியிருந்ததினாலேயே, யாக்கோபை அவசரப்படுத்தி ஈசாக்கினிடத்தில் அனுப்பிவிட்டாள்.
ஆசீர்வாதம், தகப்பனோடு இன்னும் அதிகமாக நம்மை கிட்டிச் சேர்க்கவேண்டும். ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின், ஆண்டவரையே விட்டு அகன்றுபோய்விடும் மக்கள் கூட்டம் இன்றய நாட்களில் மிகுதி. நல்லதோர் வேலை கிடைத்தபின், வாழ்க்கைத் துணை கிடைத்தபின் ஆண்டவர் தேடுமளவிற்குத் தொலைந்துபோய்விடுகின்றது பலரது வாழ்க்கை. ஆசீர்வாதத்திற்காக தகப்பனிடத்தில் அனுப்பிய ரெபெக்காள்; ஆசீர்வதிக்கப்பட்ட பின் அவனை தகப்பனை விட்டுத் தூரமாக அனுப்பிவிட்டாளே. இளையகுமாரனான யாக்கோபை, தகப்பனை விட்டு தூரமாகச் சென்ற இளையகுமாரனோடும் நாம் ஒப்பிடக்கூடுமே. ஆஸ்தியை ஒருவேளை அழித்துப்போட்டவனாக யாக்கோபு காணப்படாதிருக்கலாம்; ஆனால், தகப்பனை விட்டுப் போனதில் இருவரும் ஒரு நிலையில் உள்ளவர்களே.
'சத்தமோ யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள்' என்று ஈசாக்கு சொன்னதைப் போன்ற மாறுபாடான நிலைதான் இன்றைக்கும் அநேகருடைய வாழ்க்கையில் காணப்படுகின்றது. கர்த்தருடைய பிள்ளைகளைப் போல பேசுவார்கள்; ஆனால், கைகளோ கர்த்தருக்கு விரோதமானவைகளைச் செய்துகொண்டிருக்கும்; அப்படியே, கர்த்தருடைய ஊழியர்களைப் போலப் பேசுகிறார்கள்; ஆனால், செயல்பாடுகளோ ஊழியனுடைய குணத்திற்கு விரோதமானதாகக் காணப்பட்டுக்கொண்டிருக்கும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, எப்படி பிரசங்கித்தாரோ அப்படியே வாழ்ந்தும் காண்பித்தாரே. ஆனால் இன்றோ, வேட்டையாடுவதற்குப் பதிலாக வேடம் போட்டு ஆடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக