உன்னதமான உறவு
... லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். (ஆதி 31:12)
... இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ (ஆதி 31:13)
மனிதர்களுடைய உறவிலே பெருமைபாராட்டிக் கொண்டிருப்பவர்களும், மனதிலே அதனையே மேன்மையானதாக எண்ணிக்கொண்டிருப்பவர்களும் உலகத்தில் அநேகர் உண்டு. அழைக்கப்பட்ட திசையினை மறந்து, உபசரிபிலேயே உறங்கிவிடும் மக்கள் இன்று அநேகர். தொடவேண்டிய இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து ஓடவேண்டும் என்பதற்காகவும், உபசரிப்பிலேயே நாம் சிறைவைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், தன்னோடு உள்ள உறவினையே எப்பொழுதும் நாம் உயர்த்திக் கூறவேண்டும் என்பதற்காகவும், மனிதர்களுடனான உறவு உடைக்கப்பட சிலவேளைகளில் தேவன் அனுமதிக்கிறார். 'நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன்' (ஆதி. 29:14) என்று உறவின் தொடக்கத்தில் சொன்ன லாபான், எதிராளியைப் போல யாக்கோபை உதறத் தொடங்கினபோது, லாபானுடைய வீட்டிலிருந்து யாக்கோபை உடனே வெளியேற்றும் வேலையைத் தொடங்கினார் ஆண்டவர். உடன்பிறந்த சகோதரியின் மகன் என்ற உறவில் யாக்கோபை லாபான் உபசரித்துக்கொண்டிருந்தாலும்; அதைக் காட்டிலும் உன்னதமான ஓர் உறவு யாக்கோபிற்கும் தேவனுக்கும் இடையிலே இருந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருப்போமென்றால், மனிதர்கள் நமக்குச் செய்யும் ஒவ்வொன்றையும் கர்த்தர் கவனித்துக்கொண்டேயிருக்கின்றார் என்பதற்கும், உறவுகள் உதறிவிட அனுமதித்தாலும் கர்த்தர் நம்மை ஒருபோதும் உதறிவிடார் என்பதற்கும் யாக்கோபின் வாழ்க்கை ஓர் முன்னுதாரணம்.
எனினும், இத்தகைய உன்னதமான உறவை வாழ்க்கையில் பெற்றிராதவர்களும், அனுபவித்திராவர்களும், உணர்ந்துகொள்ளாதவர்களுமே, மனிதர்களுடைய உறவில் பெருமைபாராட்டிக்கொண்டிருப்பார்கள்; மனிதர்களுடைய பிரிவினால் தங்கள் வாழ்க்கையில் வருத்தத்தை வருவித்துக்கொள்வார்கள்; கர்த்தர் தங்கள் பட்சத்தில் இருக்கிறார் என்றபதை மறந்து, கவலையினால் தங்களை நிறைத்துவிடுவார்கள். மனிதர்கள் தங்களை மறந்ததினால், தேவனையே தாங்கள் மறக்கும் நிலைக்குத் தங்களைத் தள்ளிவிடுவார்கள். மனிதர்களுடைய உறவினையே உலகம் என்று நினைக்கும் மக்களில் சிலர், உதறப்படும் நேரத்தில் உயிரைவிடும் நிலைக்கும் உள்ளாகிவிடுவது உண்டு. உன்னத உறவை உணர்ந்தவர்களோ,
'மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிவிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - இயேசு போதுமே
என்ற உயர்ந்த நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொள்வார்கள். உலக வேதனைகள், கிறிஸ்துவுக்கும் இத்தகையோருக்கும் இடையில் வேலியடைத்துவிடமுடியாது. மனிதர்களால் துரத்தப்பட்டாலும், தேவனுடைய அரவணைப்பிலேயே வாழுபவர்கள் இவர்கள். எனவே பவுல், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோம 8:36-39) என்று உறுதியாக எழுதுகின்றாரே. இத்தகைய உறுதி இருந்தால், மாத்திரமே உன்னத உறவில் நாம் மேன்மைபாராட்ட முடியும்.
எனவே, கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் (சங் 118:6-9) என்று உன்னதத்திற்கும் தனக்கும் உள்ள உறவினையே உயர்த்திக் கூறுகின்றான் சங்கீதக்காரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக