இழப்பு, கலப்பு, கைகலப்பு
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான். (ஆதி 33:18)
கர்த்தர் கட்டளையிடாத இடத்தில் கூடாரங்களை அமைத்து, குடியிருக்கும்படி வீட்டையும் கூடவே கட்டியெழுப்பி, தற்காலிகமான இடத்தில் நிரந்தரமாகத் தங்கவிட முயற்சித்த யாக்கோபின் வாழ்க்கையில் இழப்பு, கலப்பு, கைகலப்பு என்ற மூன்று காரியங்கள் நுழைந்துவிட்டன. சுக்கோத்திலே யாக்கோபு தங்கியிருந்தபோது, லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பர்க்கப் புறப்பட்டபோது, ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். (ஆதி 34:1,2)
தவறான இருப்பிடத்தைத் தெரிந்துகொண்ட யாக்கோபின் வாழ்க்கையில் இழப்பு உண்டானது. சீகேம் பட்டணத்தில் வீதிகளில் பெண்கள் நடனமாடுவது வழக்கமான ஓர் கலாச்சார நிகழ்வு. ஆண்களும், பெண்களும், பட்டணத்தின் பிற மக்களும் இத்தகைய நடனத்தினைக் காண அவ்விடத்தில் கூடி தங்கள் பொழுதைக் கழித்துவந்தனர். இத்தகைய நடன நிகழ்ச்சியினைப் பார்க்கும்படியாகவே சென்றிருந்த யாக்கோபின் மனைவிகளா கிய லேயாள், ராகேல் மற்றும் சில பெண்களுடன் யாக்கோபின் மகளாகிய தீனாளும் உடன் சென்றிருந்தாள். பெண்களின் நடனத்தைக் காணும்படியாக அங்கு வந்திருந்த ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன், தீனாளைக் கண்டதும் அவள் மீது மோகங்கொண்டு, தீனாளை தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான் என்பது வரலாறு. இந்நிகழ்வு யாக்கோபுக்கு ஓர் இழப்பே. தவறான இடங்களில் நாம் தங்கியிருந்தாலோ, தேவையற்ற இடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பினாலோ இத்தகைய இழப்புகளை நாமும் சந்திக்க நேரிடும்.
மேலும், ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி: இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம் (ஆதி 34:20,21) என்றார்கள். தீனாளோடு தான் கலந்துவிட்டது மாத்திரமல்ல, முழு பட்டணத்தையும் யாக்கோபின் குடும்பத்தோடு கலந்துவிட திட்டமிட்டான் சீகேம். நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல் (ஆதி 24:3) என்று தனது வேலைக்காரனிடத்தில் சொல்லியிருந்தான் ஈசாக்கு; ஆனால், யாக்கோபின் குமாரத்தி ஒரு கானானியனோடு கலக்கும் நிலை உருவாகிவிட்டது. இந்நிகழ்வு யாக்கோபின் வாழ்க்கையில் ஓர் கலப்பே. சீகேமினுடைய வீட்டிலிருந்து, மகள் தீனாளை அழைத்துக்கொண்டுவரும்படி, யாக்கோபு தனது பன்னிரெண்டு வேலைக்காரர்களை அனுப்பியபோதும், சீகேம் அவர்களை விரட்டியடித்தான். வேலைக்காரர்களால் அங்கிருந்து தீனாளை அழைத்துவரக்கூடாததைக் கண்ட யாக்கோபு, தீனாளுக்கு உதவிசெய்யும்படியாக, இரண்டு வேலைக்காரிகளை தீனாளுடன் தங்கும்படியாக சீகேமின் வீட்டிற்கே அனுப்பிவைத்தான் என்பது வரலாறு. தவறான இடங்களில் தங்கியிருந்தால், நம்முடைய முழு சந்ததியும் சத்துருவின் சரித்திரத்தோடு கலந்துவிடக்கூடும்.
அத்துடன் நின்றுவிடவில்லை, கலப்பு, கைகலப்பாக மாறியது. யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, மனங்கொதித்து, மிகவும் கோபங்கொண்டார்கள். (ஆதி 34:7). அத்துடன், பட்டணத்திலுள்ள ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதம் செய்துகொண்டால், சகோதரியைத் தருகிறோம் என்று வஞ்சனையான வாக்குறுதியைக் கொடுத்து, மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக் கொண்டபோது; யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள் (ஆதி 34:25,26). இந்நிகழ்வு யாக்கோபின் வாழ்க்கயில் நிகழ்ந்துவிட்டதோர் கைகலப்பே. தவறான இடத்தில் தங்கியிருந்தால், வாசனை வீசாது கெட்டுப்போய்விடும். தவறான இடத்தில் தங்கியிருந்தால், வழியிலிருப்போருக்கும் நாம் வலியை உண்டாக்கிவிடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக