வழியனுப்ப அல்ல
வழியை ஆயத்தம் பண்ண
பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். (ஆதி 18:16)
ஆண்டவரும், இரண்டு தூதர்களும் திடீரென மம்ரேயின் சமபூமியில் தரிசனமானபோது, 'அவர்களது பயணத்தின் நோக்கத்தை ஆபிரகாம் அறிந்துகொள்ள முற்படவில்லை; மாறாக, உபசரிப்பிற்குத்தான் முன்னுரிமை கொடுத்தான்.' தூதர்கள் இருவரும் ஆபிராமின் வீட்டை விட்டு சோதோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்றபோதுகூட, எதற்காகச் செல்கிறீர்கள்? என்ற கேள்வியை முன்வைக்கவில்லை; அத்துடன், சோதோமிலே இருக்கும் லோத்துவின் குடும்பத்தையும் அவர்களுக்கு ஆபிரகாம் அறிமுகப்படுத்தவில்லை.
சந்திப்பின் வேளையின்போது, 'நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள்' (ஆதி 18:5) என்று தன்னுடைய கடமையை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றான் ஆபிரகாம். தன்னுடைய வீட்டிலே உபசரிப்பு தடபுடலாக முடிந்துவிட்டால் போதும், அப்புறம் ஆண்டவர் எங்கே போனால் நமக்கென்ன? என்ற மனநிலைதான் அநேகருடைய மனங்களில் இன்றும் காணப்படுகின்றது. என்னுடைய வீட்டிற்கு வந்த அவரை நான் திருப்தியாக அனுப்பிவிட்டேன்; எனவே, எனது கடமை தீர்ந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருப்போர் ஏராளம். மம்ரேயின் சமபூமியிலே, ஆபிரகாமின் வீட்டிலே தூதர்களுக்குச் அப்பம் கிடைத்துவிட்டது; அனால், சோதோமிலே அவர்களுடை இருதயங்களைத் திடப்படுத்திக்கொள்ள அப்பம் எங்கே கிடைக்கும்? என்பதைக்கூட ஆபிரகாம் சிந்திக்கவில்லையே; அதற்கு விடையாக, 'சோதோமுக்குச் சென்றால், லோத்துவின் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று லோத்துவின் குடும்பத்தைக் கூட ஆபிரகாம் தூதர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கவில்லை. அவரது அடுத்த பயணம் எங்கே? என்ற ஆண்டவரது தொடர் பயணத்தைக் குறித்த கரிசனை நமக்கு உண்டா?
இன்றும், 'இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்தில் வந்தார்?' என்ற நோக்கத்தை அறியாமல், நம்முடைய வீட்டில் மாத்திரம் அவரை உபசரித்துவிட்டு, நமக்காக மாத்திரம் அவரைப் பயன்படுத்திவிட்டு, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டுவிட்டு, 'நீர் உம்முடைய வழியே போகலாம்' என்று வழியனுப்புகிறவர்களாகவே பலர் காணப்படுகின்றனர். நம்முடைய வீட்டிற்கு வந்தார்; நன்றாகக் கவனித்துவிட்டோம்; ஆனால், கனியற்ற அத்திமரத்தைப் போன்ற அடுத்தவருடைய வீட்டில் அவருக்கு ஒன்றும் கிடைக்காவிட்டால், மீண்டும் அவருக்கு பசி உண்டாகுமே. அவருக்கு தொடர்ந்து ஆகாரம் கிடைக்கவேண்டுமென்றால், அடுத்தவருடைய வீட்டையும் ஆயத்தம் செய்யவேண்டியது நமது கடமையல்லவா. அடுத்தவர்களின் ஆசீர்வாதத்திற்காக மாத்திரமல்ல, ஆண்டவருடை பசியைத் தீர்க்கவாவது இப்பணியை நாம் செய்தே தீர்க்கவேண்டும்; இல்லையேல், 'தாகமாயிருக்கிறேன்' என்ற சிலுவையின் சத்தமே நமது செவிகளில் கேட்கும்.
அறியப்படாத ஜனங்களுக்கு அவரை அறிவிக்கும்படியாகவே அவர் நம்மை வழியனுப்பிவைக்க நினைக்கிறார்; ஆனால், நாமோ அறியப்படாத ஜனங்கள் அழிக்கப்படும்படியாக அறியாமையினால் அவரை நமது வீட்டை விட்டு வழியனுப்பிவைத்துவிடுகின்றோம். தூதர்கள் இருவரையும் சோதோமை நோக்கி அனுப்பிவைத்துவிட்டு, ஆபிரகாமோ மீண்டும் வந்து ஆண்டவருக்கு முன்பாகவே நின்றுகொண்டிருந்தான் (ஆதி 18:22). நாமும் ஒருபுறத்தில், அழிவுக்கு நேராக அவரை அனுப்பிவைத்துவிட்டு, மறுபுறத்தில் நாம் மட்டும் அவருக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம்; தூதர்கள் புறப்பட்டு வந்து இந்த பூமியை அழிக்கும் முன், நாம் புறப்பட்டுச் சென்று இப்பூமி முழுவதிலும் சுவிசேஷத்தை அறிவித்து; ஜனங்களைக் காப்பாற் முற்படுவோம். நம்முடைய உபசரிப்பில் அடுத்தவருடைய அழிவை நாம் மறந்துவிடக்கூடாது. அப்போஸ்தலர்கள் மற்றவர்களது அழிவைக் குறித்து கவலைப்படாமல், இயேசு கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்காமல், தாங்கள் மட்டுமே ஆராதித்துக்கொண்டிருந்தால், என்ன நடந்திருக்கும்? தங்களைக் காப்பாற்றியிருக்கக்கூடும்; ஆனால், மற்றவர்களின் அழிவைத் தடுத்திருக்க முடியாதே. அத்தகைய பயணத்தை தொடராதவர்களை அவரே சிதறப்பண்ணினார். 'வழியனுப்பிவிடுகிறவர்களாக அல்ல, வழியை ஆயத்தம்பண்ணுகிறவர்களாக மாறுவோம்' (மாற்கு 1:3). வழியனுப்புகிறவர்கள் உபசரிப்போடு நிறுத்திவிடுவார்கள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக