மீண்டும், மீண்டும்
அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே, உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்க தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன். அதோ அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். (ஆதி. 19:18-22)
ஆண்டவர் காட்டும் திசையிலிருந்து நமது வழிகள் விலகுமென்றால், மீண்டும் மீண்டும் அழிவிலேயே அகப்பட்டுக்கொள்ளக்கூடிய வலையில் நமது வாழ்க்கை சிக்கிக்கொள்ளக்கூடும். ஆபிரகாமை விட்டு லோத்து பிரிந்துசென்றபோது, தனது கண்களுக்கு விருப்பமான மற்றும் வெளிப்புற பார்வைக்கு 'கர்த்தருடைய தோட்டத்தைப்போன்று தோற்றமளித்த' சோதோம் பட்டணத்தைத் தெரிந்துகொண்டான்; என்றபோதிலும், சோதோம் பட்டணத்திலே நடந்துகொண்டிருக்கும் 'சத்துருவின் ஆட்டத்தையோ' அதுவரை அவன் அறியாதிருந்தான்; உள்ளே நுழைந்தபின்புதான் ஊரின் அக்கிரமம் அவன் பார்வைக்குத் தென்பட்டது; தன்னுடைய உள்ளத்தை லோத்து பரிசுத்தமாகப் பாதுகாத்துக்கொண்டான்; என்றாலும், அக்கிரமத்தினால் சோதோம் நிறைந்திருக்கிறது என்பதை அறிந்த பின்னரும், அதன் செழிப்பை விட்டு அகல மனதில்லாமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தான்.
செழிப்பும் பாவமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும்போது, 'பாவத்தை மனதில் கொண்டு அதனை பார்வையிலிருந்து அகற்றிவிடாமல், செழிப்பினால் ஈர்க்கப்பட்டு அதனையே தெரிந்துகொள்ளும் நிலை அநேகருடைய வாழ்க்கையிலும் உண்டாகின்றது. 'பாவத்தோடு சேர்த்துக் கட்டிவைக்கும் போர்வையாக சிலவேளைகளில் செழிப்பை சத்துரு பயன்படுத்திவிடுகின்றான், செழிப்பிலிருந்து பிரிந்துவர மனதற்றவர்களாக, பரிசுத்தத்திற்காக உண்டாகும் பலவிதமான போராட்டங்களிலேயே ஆவிக்குரிய பெலத்தைச் செலவழித்துக்கொண்டு, ஆண்டவருக்காகவும், அவர் அளிக்கும் தரிசனத்திற்காகவும் அதனைப் பயன்படுத்த இயலாமல் துவண்டுபோய் கிடக்கும் மனிதர்கள் ஏராளம். இருக்கும் இடம் கந்தகத்தினாலும், அக்கினியினாலும் அழிக்கப்படவிருந்தபோது, இரக்கத்தினாலேயே சோதோமிலிருந்து லோத்து ஆண்டவரால் காப்பாற்றப்பட்டான்; என்றாலும், காப்பாற்றியவர் கைநீட்டிக் காட்டிய இடத்தினை நோக்கிப் பிரயாணிக்கவோ மீண்டும் லோத்து பயந்துகொண்டிருந்தான். 'தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்' என்கிறான்.
அழிந்துபோகவிருக்கும் உலகத்திலிருந்தும், பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்தும், பத்திரமாக அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கைப்பிடித்து காப்பாற்றப்பட்டபோதிலும், தொடர்ந்து தாங்கள் இன்னும் பயணிக்கவேண்டிய திசையினைத் தெரிந்துகொள்ளாமலேயே அநேகர் தங்கள் விருப்பத்தின்படி பயணத்தைத் தொடருகின்றனர். 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு' (எபே. 2:8) என்று நம்முடைய இரட்சிப்பைக் குறித்து வேதம் வர்ணிக்கின்றதே. 'உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே' என்று லோத்து சொன்னதைப்போல, பாவத்திலிருந்து விடுதலையடைந்த நாமும் சொல்லமுடியுமே. இத்தகைய கிருபையினால் தப்புவிக்கப்பட்டிருந்தபோதிலும், விடுவிக்கப்பட்ட மனிதர்களும் தங்களுக்குள்ளே மீண்டும் மரண பயத்தை தாங்களே விதைத்துக்கொள்ளுகின்றனர். மரணபயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட மனிதன், தேவன் காட்டும் திசையை நோக்கி அல்ல, மீண்டும் மீண்டும் தான் விரும்பும் திசையை நோக்கியே பயணத்தைத் தொடருகின்றான். 'ஓடும்படியாகச்சொல்லப்பட்ட வழியிலே தீங்கு என்னைத் தொடரும்' என்றும், 'ஓடக்கூடாத திசையிலே தீங்கு தன்னைத் தொடரும்படியாகவும்' முன்னேறிச் செல்லுகின்றான். அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்ட லோத்து, மீண்டும் அழிக்கப்படவிருக்கும் பட்டணத்தையே அடைக்கலமாகத் தெரிந்துகொள்கிறான். எனவே, ஆண்டவர் அவனை நோக்கி: 'நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அனுக்கிரகம் பண்ணினேன்' (ஆதி. 19:21) என்று கூறுகின்றார். 'தீங்கு வராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான்' (ஏசா. 57:1) என்ற மனப்பாங்கு இருந்தால், மரணபயம் நம்மை ஒருபோதும் திசை திருப்பாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக