சனி, 9 அக்டோபர், 2021

பாலமான பலி (ஆதி 37:15)

 

பாலமான பலி


அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். (ஆதி 37:15)


வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக வரும் மனிதர்களைச் சந்தித்தால் மாத்திரமே, சரியான வழியில் நாம் பயணிக்க முடியும்; அத்துடன், சேரவேண்டிய இடத்திற்கும் பத்திரமாக நாம் சென்றடைய முடியும்; மேலும், எதற்காக நாம் அனுப்பப்பட்டோமோ, அந்தப் பணியினையும் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும். சாதாரணமாக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள்கூட சரியான பாதையை நமக்குப் போதிக்கமுடியும். யோசேப்பின் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மனிதன் ஒருவன் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டிருந்தான். அவர்களிடத்தில் அவன் கேட்ட வார்த்தை, யாரோ ஒருவருக்கு வழிகாட்டப்போகிறது என்பதையோ அப்போது அவன் அறியாதிருந்தான்; எனினும், வழிதப்பித் திரிகிற யோசேப்பைக் கண்டபோது, அவன் பேசாமல் விலகிச் சென்றுவிடவில்லை; 'என்ன தேடுகிறாய்?' (ஆதி. 37:15) என்று வழிகாட்டியாக, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய முற்படுகிறான்.  'என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும்' (ஆதி. 37:16) என்று யோசேப்பு அவனிடத்தில் கேட்டபோது, அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். (ஆதி 37:17)

அவ்வாறே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சில்லாக்கின் மேலும் விழுந்து, சில்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்ட நேரத்தில் (1சாமு 30:1,2), தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டபோது, அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார் (1சாமு 30:8). எனினும், தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும்

பேசார் ஆற்றண்டைக்கு வந்தபோது, இருநூறு பேர் விடாய்த்துப் போனபடியினால், பேசார் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுவிட்டார்கள்; தாவீதோ, நானூறு பேரோடுகூடத் தொடர்ந்து சென்றான் (1 சாமு. 30:9,10). புறப்பட்டுப்போகும்படியாக கர்த்தரே தாவீதுக்கு அனுமதியளித்திருந்தும், உடன் புறப்பட்ட சிலருடைய வீரம் ஆற்றைக் கடக்குமுன்னரே அணைந்துபோனது. தாவீதோடு புறப்பட்டது உண்மைதான், என்றாலும் போர்முனையையோ அவர்கள் சந்திக்கவில்லையே. இன்றும், போருக்கு முன்னரே புறமுதுகுக் காட்டும் மனிதர்கள் உண்டே! 

மேலும், ஆண்டவரே அனுப்பியிருந்தாலும், அமலேக்கியரைத் தொடர்ந்து சென்றாலும், வழியில் கிடந்த ஒரு மனிதனுடைய உதவியும் தாவீதுக்குத் தேவைப்பட்டது. வழியில் கிடந்த எகிப்தியனைக் கண்டு, அவனுக்குப் புசிக்க அப்பமும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் கொடுத்தபோது, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான். தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்துதேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்கு முன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான் என்று சொன்னதோடு, சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்பதையும் கூறினான் (1சாமு 30:11-14). அவனது எஜமான் போர் முடிந்ததும், வியாதிப்பட்டதினால் முதுகுக்குப் புறம்பே அந்த வீரனை வீசிவிட்டான். இன்றும், இப்படிப்பட்ட தலைவர்கள் உண்டு, காரியம் முடிந்ததும், வீரர்களின் வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படாமல் கழற்றிவிடும் குணமுடையவர்கள் அவர்கள். ஆனால், அவ்வாறு வீசப்பட்ட மனிதர்களைக் கொண்டும் வழிகாட்டுகிறவர் நமது ஆண்டவர். 

வழியில் கிடக்கிறவர்கள் நமக்கு வழிகாட்டுவதோடு,  நாம் போகவேண்டிய இடத்திற்குச் சேர நமக்கு உதவிசெய்வதோடு, வழியில் இருக்கிறவர்களைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்க்கவேண்டிய பொறுப்பு நமக்கும் உண்டு. ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.  பிரயாணமாக வந்த சமாரியன், அவனை பராமரித்து சத்திரத்தில் சேர்த்தானே (லூக். 10:30,33,34). 'சத்திரம் எங்கே இருக்கிறது' என்று அறிந்திருக்கும் நாம் அவர்களைக் கண்டு விலகிச் செல்லலாமோ?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக