அவரைப்போலிருப்பதே ஆசீர்வாதம்
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான். (ஆதி 27:41)
கைகளிலிருப்பது களவாய் போய்விடாமலிருக்கவேண்டுமென்றால் நமது கண்கள் திறந்திருக்கவேண்டும். ஏசாவுக்குக் கொடுக்கப்படவிருந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படியாக யாக்கோபு வந்தபோது, ஈசாக்கு யாக்காபை நோக்கி 'நீ யார்' என்று கேட்டான் (ஆதி 27:18). தான் ஆசீர்வதிக்க விரும்பாத மகனிடத்தில்தான் கேள்வி கேட்கப்பட்டது; என்றாலும், 'நான் உமது மூத்த மகனாகிய ஏசா' (ஆதி. 27:19) என்று யாக்கோபு சொன்னபோது; பதிலைப் பார்க்க முடியாதவனாக, கேட்கக்கூடிய நிலையில் மாத்திரமே ஈசாக்கு காணப்பட்டதால் ஏமாற்றப்பட்டான். இதே கேள்விதான், ஈசாக்கு ஆசீர்வதிக்கும்படியாக விரும்பிய ஏசாவினிடத்திலும் கேட்கப்பட்டது. வேட்டையாடி, ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக (ஆதி 27:31) என்று ஏசா சொன்னபோது, தகப்பனாகிய ஈசாக்கு: 'நீ யார்' என்று கேட்டான்; அதற்கு ஏசா: 'நான் உமது மூத்த மகனாகிய ஏசா' (ஆதி 27:32) என்று உண்மையைச் சொன்னபோது, ஈசாக்கு பிரம்மித்து நடுங்கினான் (ஆதி. 27:33).
இரண்டுபேரிடமும் ஒரே கேள்விதான் கேட்கப்பட்டது; இரண்டுபேருடைய வாயிலிருந்தும் ஒரே பதில்தான் புறப்பட்டது; என்றாலும், ஈசாக்கு பார்வையற்றிருந்ததால், தான் விரும்பினதை வேறொரு(மகன்)வன் பறித்துக்கொண்டுசெல்லும் நிலை ஏற்பட்டது. நம்முடைய ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டிருந்தால், நாமும் இப்படி செயல்பட்டுவிடக்கூடும்.
'என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும்' (ஆதி 27:34) என்றும், 'நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா' (ஆதி 27:36) என்றும், 'இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு?' (ஆதி 27:38) என்றும், தன்னுடைய பங்கிற்காக தகப்பனிடத்தில் கேட்டுக்கொண்டது தவறு அல்ல; என்றாலும், யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டது (ஆதி 27:41) தவறல்லவா.
தகப்பன் ஆசீர்வதிக்க விரும்பின ஏசாவினிடத்தில் இத்தகைய குணம் காணப்பட்டதுபோல; பரம பிதாவினிடத்தில் ஆசீர்வாத்திற்காகக் காத்திருக்கும் பலரிடத்திலும் இன்று இத்தகைய குணம் காணப்படுகின்றது. ஆசீர்வாதங்கள் கொடுக்கப்பட்டால் அவைகள் வெளியே தெரிவதில்லை; ஆனால், ஆசீர்வாதங்கள் எடுக்கப்பட்டுவிட்டால் அவைகள் வெளியே தென்படத்தொடங்கும். சாறிபாத் விதவையின் வீட்டில் எலியா தங்கியிருந்தபோது, கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை (1இரா 17:14) என்ற பெரியதோர் ஆசீர்வாதம் அவளுக்குக் கிடைத்தது. ஆனால் சிலநாட்களுக்குப் பின்பு, அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் (1இரா 17:17,18) என்று கேட்டுவிட்டாளே. இந்த சத்தம் 'தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன?' (லூக். 8:28) என்ற பிசாசின் சத்தத்திற்கு ஒத்ததல்லவா!
நம்முடைய உரிமைகள் பறிக்கப்படும்போது, நம்முடைய உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகின்றோம்? நமக்குக் கொடுக்கப்படவேண்டியவைகள் தடுக்கப்படும்போது நம்முடைய குணங்களை எப்படி வெளிட்காட்டுகின்றோம்? நம்முடைய ஸ்தானத்தில் மற்றொருவர் வைக்கப்படும்போது நாம் எப்படி செயல்படுகின்றோம்? நாம் வெறுமையாக்கப்படும்போது, நம்மிடத்தில் பொறுமையின் கிரியை உண்டா? எத்தனை பாடுபட்டும், இயேசுவின் குணம், இறுதிவரை மாறவில்லையே; அவரைப்போலிருப்பதே ஆசீர்வாதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக